வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘பஃபூன்’அதிரடியான அரசியல் ஆக்ஷன் படமாகும். அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன், ‘பஃபூன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘பஃபூன்’ படத்தை பற்றி பேசிய அசோக் வீரப்பன், “இது முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்றும், மேடை நாடகங்களில் வரும் பஃபூனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஒரு பஃபூன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் முக்கிய கரு. சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பைப் பார்த்து இது ஒரு நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், ‘பஃபூன்’ ஒரு அதிரடி அரசியல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும்” என்றார்.
“சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம் என்றார் அசோக். “இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பின்னணி இசையிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்” என்றார்.