ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கண்ணகி’ திரைப்படத்தை 1942-ல் தயாரித்தது. இளங்கோவலன் கதை, வசனத்தில் கண்ணகியாக நடிக்க நடிகை கண்ணாம்பாவை ஒப்பந்தம் செய்தனர்.
கோவலனாக நடிக்க தகுந்த நடிகரை தேடினர். இறுதியாக பி.யு.சின்னப்பா தேர்வு செய்யப்பட்டார்.
இப்படத்தில் கதாநாயகன் பி.யு. சின்னப்பா பெற்ற ஊதியம் ரூ.10000/- ஆனால் கதாநாயகியாக நடித்த கண்ணாம்பாவுக்கு கொடுத்த ஊதியம் ரூ.20000/- குறைந்த ஊதியத்திற்கு பி.யு. சின்னப்பா நடிக்க ஒப்புக் கொள்ள காரணம் அவர் ஜூபிடர் பிக்சர்ஸ் மேல் வைத்திருந்த மரியாதை.
அதுமட்டுமன்று பி.யு.சின்னப்பாவை முதன் முதலில் ‘சந்திரகாந்தா’ படத்தில் நடிக்க வைத்த நிறுவனம் என்பதால் ஜூபிடர்ஸ் நிறுவனத்தின் கருத்தில் கொண்டே இப்படத்தில் குறைந்த ஊதியத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
கண்ணகி படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.
மாலை நேரத்தில் விளக்கணைப்புச் செய்யப்படும் மாலை ஆறு மணிக்கு மேல் ஊரங்குச் சட்டம் அமலில் இருந்தது.
பி.யு.சின்னப்பா படப்பிடிப்பு முடிந்து சென்னையிலிருந்து செங்கற்பட்டுக்கு வந்து இரவு தங்கி விட்டு மறுநாள் புறப்பட்டுச் சென்று சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
இந்த சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தில் நடித்துக் கொடுத்தார் பி.யு.சின்னப்பா.
படம் ஓடிய ஊர்களுக்குகெல்லாம் பி.யு.சின்னப்பா நேரில் சென்று படம் எப்படி ஓடுகிறது என்று மதிப்பீடு செய்தார்.
மதுரையில் கண்ணகி படம் பார்த்து முடிந்து ஜனங்கள் தியேட்டரை விட்டு வெளியே வருகிற வேலையில் அந்தச் சாலைக்குள்ளேயே நுழைய முடியாது!
அவ்வளவு கூட்டம் இதுதான் சின்னப்பா நடிப்பிற்கு மக்கள் வழங்கிய உண்மையான அங்கீகாரம்.
“கட்டபொம்மு” என்ற படத்தை தயாரிப்பதாக 1948-ம் ஆண்டு செல்வம் பிக்சர்ஸ் விளம்பரம் வெளியிட்டனர்.
பி.யு.சின்னப்பா கட்டபொம்மனாக நடிக்க போகிறார் என்றும் விளம்பரம் சொல்லியது. ஆனால் எக்காரணத்தினாலோ படம் வெளிவரவில்லை.
”ஒருவேளை பி.யு. சின்னப்பா கட்டபொம்மனாக நடித்து அந்தப் படம் திரைக்கு வந்திருந்தால், பின்னாளில் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது மட்டும் சர்வம் நிச்சயம் என்கிறார் திரைப்பட வரலாற்று ஆய்வாளர் திரு.அறந்தை நாராயணன்.
ஜுபிடரின் மஹாமாயா (1944) படத்தில் கதாநாயகனாக வில்லன் உருவில் பி.யு.சின்னப்பா நடித்தார். கண்ணம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எல்.சரோஜா, சஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்கரபாணி ஆகியோர் நடித்தனர்.
சண்டைப் பயிற்சி கற்றுக் கொள்வதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் சோமுவை பார்ப்பதற்காகவும், படப்பிடிப்பை கண்டு களிப்பதற்காகவும் எம்.ஜி.ஆர். ஜூபிடரின் படப்பிடிப்பு தளத்திற்கு அப்பொழுது வருவதுண்டு.
தனது பழைய சீடர் எம்.ஜி.ஆரை படப்பிடிப்புத் தளத்தில் பார்த்த சின்னப்பாவுக்கு அவரை எப்படியாவது அந்த திரைப்படத்தில் (மஹா மாயா) நடிக்க வைக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு அப்படத்தில் ஒரு வேடம் கொடுக்கும்படி தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தார்.
ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டாலும், பி.யு. சின்னப்பாவின் ஏற்று ஒரு சிறு வேடம் எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கித் தரப்பட்டது.
படத்தில் ‘அஸ்வபாலன்’ என்ற வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
தமிழ் திரையுலகில் தனக்கெனதோர் தனி இடத்தை பெற்றிருந்தவர் பி.யு.சின்னப்பா.
– நன்றி: முகநூல் பதிவு