செப்டம்பர் 22 – உலக ரோஜா தினம்!
இன்று ஒரு அழகான நாள்.. ஆம் ரோஜாக்கள் தினம் இன்று!
மலர்களின் அரசி எனக் குறிஞ்சிப் பூவை குறிப்பிடுவார்கள். ரோஜாவோ, மலர்களின் இளவரசி.
ரோஜாவின் வரலாறு சுவாரஸ்யமானது.
ஆரம்பத்தில் காட்டுப் பகுதியில் தான் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின. பிறகு மனிதர்கள் ரோஜாவால் ஈர்க்கப்பட்டு, நாட்டில் விளைவிக்க ஆரம்பித்தனர்.
இப்படி காட்டு ரோஜாக்களை, வீட்டு ரோஜாக்களாக மாற்றியவர்களில், கிளியோபாட்ராவுக்கும், ஜூலியஸ் சீசருக்கும் முக்கிய பங்கு உண்டு என்கிறது வரலாறு.
நம்மைப் பொறுத்தவரை ரோஸ் கலர் ரோஜா தான் பிரபலம். ஆனால் இதில் நிறைய கலர்கள் இருக்கின்றன குறிப்பாக மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை ஆகிய ரோஜாக்களை அறிவோம்.
ரோஜாக்களில் பல ஆயிரம் வகை உண்டு என்பதே நம்மில் பலருக்குத் தெரியாது.
ஊட்டி ரோஜா தோட்டத்தில் 2,800 வகையான 20,000 ரோசா செடி வகைகள் உள்ளன.
ரோஜா பூ அழகு மட்டுமல்ல.. நம் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ரோஜா இதழ்களை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் தீரும்.
ரோஜாவில் இருந்து எடுக்கப்படும் தைலம் காது வலியைப் போக்கும். ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் குல்கந்து ரத்தத்தை சுத்தமாக்கும்.
ரோஜா சர்பத் மலச்சிக்கலை தீர்க்கும்.
இவர்கள்தான், செப்டம்பர் 22ஆம் தேதி ரோஜாக்கள் தினமாக அறிவித்தார்கள்..
ரோஜாக்கள் தினம் அமெரிக்காவில் ஆரம்பித்தாலும், இன்னும் முக்கியத்துவம் அளித்தது பிரிட்டன் நாடுதான். இங்கே ரோஜாதான் தேசிய மலர்!
ரோஜாவை கொண்டாடுவதில் நம் நாடும் சளைத்ததில்லை. நம் நாட்டின் முதல் பிரதமரான நேருவை இன்றும் ரோஜாவின் அடையாளமாகத்தான் கொண்டாடுகிறோம்..
ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கூட ரோஜா என்றால் அவ்வளவு பிரியம். சட்டையோடு ரோஜாவையும் அணிந்திருப்பார். அதற்காகவே அவரை ரோஜாவின் ராஜா என அழைத்தார்கள்.
அவர் ஏன் ரோஜாவை அணிந்திருந்தார் என்பது வெகுகாலம் பலருக்கும் தெரியாது. காரணம் இதுதான்..
அவர் தன் மனைவி கமலா மீது மிகுந்த நேசம் வைத்திருந்தார். ஆனால் நோய்வாய்ப்பட்டு கமலா இறந்துவிட்டார். அவரது நினைவாக நேரு, ரோஜாவை அணிந்திருந்தார்.
ரோஜாக்களுக்கும் குணம் உண்டு. அதாவது நமது ஒவ்வொரு உணர்வின் அடையாளமாக ரோஜா விளங்குகிறது. ஒவ்வொரு கலருக்கும் தனித்தனியான குணங்கள் உண்டு. அதனை இப்போது விரிவாகப் பார்ப்போம்..
சிவப்பு ரோஜா: காதல், ஆழ்ந்த அன்பின் அடையாளமாக இருக்கிறது.
வெள்ளை: தம்பதியினரிடையேயான நேசம், பரஸ்பர பணிவு மற்றும் பிரிவு ஆகியவற்றை எடுத்துரைப்பதற்கு இந்த கலர் கூறப்படுகிறது.
இளஞ்சிவப்பு: கருணை,
கரும் இளம்சிவப்பு: பாரம்பரியத்தை நினைவுகூறுதல் அடையாளமாக விளங்குகிறது.
மஞ்சள்: நட்பு, மகிழ்ச்சி
ஊதா: வியப்புடன் கூடிய மதிப்பு
சரி இவ்வளவு பெருமைகள் உள்ள, நமக்கு பிடித்தமான ரோஜாக்களைத் வீட்டில் வளர்ப்பவர்கள் பலர்.
ஆனால், “செடி நட்டு வைத்து, பூ பூக்கவில்லையே” என்று வருந்துவோரும் பலர்.
அதாவது செடியை நட்டு வைத்தால் மட்டும் போதாது.. அதற்கென்று பராமரிப்பு முறைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்..
நீங்கள் வாங்கும் புதிய ரோஜா செடியில் பூக்கள் இருந்தால், அவற்றை பறித்து விட்டு நட வேண்டும். அப்போதுதான் மற்ற கிளைகள் நிறைய ரோஜா பூக்களை தளிர் விடும்,
ரோஜாவை பதியனிடும்போது, மண் கலவையுடன் வேப்பம் புண்ணாக்கு சேர்க்க வேண்டும். இதனால் பூச்சி பாதிப்பில் இருந்து செடி தப்பிவிடும். மற்றபடி செயற்கை பூச்சிக்கொல்லிகள் வேண்டாம்.
வேப்ப இலைகள் மற்றும் பூண்டு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வையுங்கள்.
இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது அதை ரோஜா செடி மீது தெளியுங்கள்.
தொட்டியில் தண்ணீர் நிற்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் செடி அழுகிவிடும்.
பராமரிப்பு சரியாக இருந்தால் அப்புறம் என்ன ரோஜாக்கள் பூத்துக் குலுங்க ஆரம்பித்து விடும்.
பொதுவாக செடிகள் வளர்ப்பு மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. நாம் வளர்க்க தேர்ந்தெடுக்கும் செடிகள் ரோஜாவாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சிதான்.
ரோஜா தினமான இன்று நமக்கு பிடித்த கலரில் ரோஜா ஒன்றை வாங்கி வைப்போமா.
– யாழினி சோமு