சுகாதாரத்துறை நடவடிக்கை
தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழை காலங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 25-ம் தேதி வரை புதுச்சேரி அரசு விடுமுறை அளித்துள்ளது.
எனினும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி நாள்தோறும் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 830 பேர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது காய்ச்சல் குறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு அடைந்து 371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 வயதிற்கு உட்பட்டவர்கள் 46 பேர், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 60 பேர், 14 முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் 194 பேர், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டிய தேவையில்லை.
இந்த நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இன்று தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெறும். இந்த காய்ச்சல் முகாம்களுக்காக தமிழகத்தில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 மற்றும் அதற்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள இடங்களில் 100 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். இவ்வாறு தமிழ்நாடு அரசு பருவ கால காய்ச்சல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இம்முகாம்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப தொடர்ந்து நடைபெறும். எனவே காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.