புரட்டாசி மாதம் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதற்கான காரணமாக ஆன்மீகத்தை சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் உண்மை என்ன? ஏன் சாப்பிட கூடாது? என்பதை விரிவாக பார்க்கலாம்.
உண்மையில் அறிவியல் கூறும் காரணம் என்ன?
பொதுவாக புரட்டாசி மாதம் என்பது வெயில் காலம் முடிந்து காற்றின் வெப்பம் குறைந்து மழைக் காலத்தின் தொடக்கம் ஆரம்பமாகும். பூமியானது இதுவரை அடித்த வெயிலின் வெப்பத்தை உள்வாங்கி இருக்கும்.
இந்த புரட்டாசி மாதம் மழை தொடங்கியதும் தனது வெப்பத்தை முழுமையாக வெளியேற்றத் தொடங்கும்.
இது ஆரம்ப கால மழை என்பதால் தொடர்ச்சியாக மழை பெய்யாது விட்டு விட்டுதான் பெய்யும். இதனால் உள்வாங்கிய வெப்பம் மெதுவாகத்தான் வெளியேறத் தொடங்கும்.
அதனால் புரட்டாசி மாத மழை என்பது பூமி சூட்டைக் கிளப்பி விடும். பூமி வெப்பமானது வெயில் காலத்தை விடவும் இந்த காலகட்டத்தில் உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த கால சூழ்நிலையில் அசைவம் எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்து நம் உடல்நிலையை பாதிக்கும்.
பொதுவாக ஆரம்பகால மழைக்காலங்களில் செரிமானப் பிரச்சனையும் நுரையீரல் தொற்றும் ஏற்படும். அதோடு தோல் சூடாவது, உலர்ந்து போதல், வழக்கத்துக்கு அதிகமாக வியர்வை வெளியேறுதல், இதய துடிப்பு மற்றும் மூச்சு வாங்குதல், தொண்டைப் புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
இந்த மழைக்காலத்தில் அசைவம் எடுத்துக் கொள்ளும்போது பிரச்சனையை அதிகப்படுத்தி விடும். தட்பவெப்பம் சீராக இல்லாதபோது அசைவம் சுகாதாரமானதாக இருக்காது.
உடல் நிலையை மோசமடையச் செய்து செரிமான பிரச்சனையை உண்டாக்கி வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும்.
பொதுவாக அசைவ உணவுகளில் கொழுப்பும், புரதமும் அதிகமாக இருக்கும். அதில் இருக்கும் அதிகப்படியான புரதச்சத்து மழைக்காலத்தில் செரிமான சுரபியில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்தப் பருவத்தில் அசைவம் சரியாக செரிமானம் ஆகாமல் தங்கி விடுவதால், குடல் புண் மற்றும் சரும நோய்கள், அலர்ஜி நோய்கள் ஏற்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. ஆகவே தான் நமது முன்னோர்கள் புரட்டாசியில் அசைவம் வேண்டாம் எனக் கூறுவதற்கு காரணம்.
– யாழினி சோமு