தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளிடம் கூட தீண்டாமையை வெளிக்காட்டும் சாதிக் கொடுமை உள்ளது.
தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் இதுபோன்ற ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது.
பாஞ்சாங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அக்கிராமத்தில் உள்ள ஒரு கடையில் தின்பண்டம் வாங்க சென்றனர்.
அப்போது அந்த கடைகாரர், தலித் மாணவர்களிடம் ஊர் கட்டுப்பாடு காரணமாக உங்களுக்கு தின்பண்டங்கள் தரமுடியாது என்று கூறினார். இதுதொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தலித் மாணவர்களுக்கு நிகழ்ந்த தீண்டாமை கொடுமை குறித்து விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், கடை உரிமையாளர் மகேஷ்வரன், மற்றும் ராமசந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்தக் கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் சாதிய தீண்டாமை குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், முருகன், சுதா, குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், தீண்டாமை குற்றவாளிகள் ராமசந்திரன், மகேஸ்வரன் ஆகியோர் பஞ்சாங்குளம் கிராமத்துக்குள் வர தடை விதித்து நெல்லை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரத்தில் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் முக்கிய பிரிவை காவல்துறை பயன்படுத்தியுள்ளது. தலித் மக்களுக்கு எதிராக குற்றங்கள் புரிபவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறக்கூடிய சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீண்டாமை அவலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் என்பவரை நியமித்து கோட்டாட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.