மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி காலமானார். அவரது உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில், சுமார் 17 மணி நேரம் வரை கடும் குளிரிலும் காத்திருந்து அரசியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.
மகாராணியின் மறைவுக்கு பிரிட்டன் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள இன்று அங்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கு தொலைக்காட்சிகளிலும், பொது இடங்களில் அகண்ட திரைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மகாராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளைச் சோ்ந்த 500 தலைவா்கள் லண்டனுக்கு வருகை தந்துள்ளனா். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.
எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பொதுமக்கள் 10 லட்சம் போ் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து 250 கூடுதல் ரயில்கள் லண்டனுக்கு இயக்கப்பட்டுள்ளன.
இறுதிச்சடங்கின்போது ஒலித் தொந்தரவுகளைத் தடுக்கும் வகையில், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும், வருகை தரும் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.