சண்டிகர் பல்கலை விவகாரம்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

பஞ்சாப் மாநிலம் சண்டீகர் பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் பயிலும் முதுகலை மாணவி, சக மாணவிகள் குளிக்கும் வீடியோவை தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுவரை 60 விடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாகவும், இதனால் மனமுடைந்த மாணவிகளில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் மற்ற மாணவர்கள் மத்தியிலும் பரவியது.

இதைத் தொடர்ந்து மாணவிகளுடம் சேர்ந்து மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து விடியோவைப் பகிர்ந்த மாணவியை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவியிடம் விடியோக்களைப் பெற்ற இளைஞர் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

முதல் கட்ட விசாரணையில் அந்த இளைஞர் சிம்லா பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், “பல்கலைக்கழகத்தில் 7 மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக பரவி வரும் செய்தி உண்மை அல்ல. மாணவிகளின் வீடியோக்கள் இணையதளத்தில் பரவுவதாக வெளியான தகவலும் உண்மையல்ல.

முதல்கட்ட விசாரணையில் முதுகலை மாணவி ஒருவர் தனது தனிப்பட்ட விடியோக்களை மட்டுமே ஆண் நண்பருக்கு பகிர்ந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சண்டிகர் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments (0)
Add Comment