திருச்சி காஜாமாலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா, தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா, சங்கத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, தந்தை பெரியார் கல்லூரியில் முதல்வர் சுகந்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் பெரியாரின் பணிகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “என்னம்மா கண்ணு சௌக்கியமா? என்று கேட்கும் போது பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் சௌக்கியம் என்று கூறுவதற்கு காரணம் தந்தை பெரியார் தான். அனைவரிடமும் சுயமரியாதையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் வளர்த்தவர் பெரியார்.
பெரியார் என்பவர் ஒரு சிலை அல்ல. அவர் ஒரு தத்துவம், அவர் ஒரு கோட்பாடு” என்று விளக்கம் அளித்தார்.
மேலும், நமக்கு கேளிக்கைகளும், பொழுதுபோக்கும் தேவை தான். ஆனால் அதை விட முக்கியம் புரட்சியாளர்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வது.
வாழ்க்கை முழுவதும் சிக்கனமாக இருந்த பெரியார், 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே 5 லட்சம் ரூபாய் பணமும் 28 ஏக்கர் நிலமும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கல்வி கற்க வேண்டும் என இந்த கல்லூரி அமைக்க வழங்கினார்.
பெரியாரின் கொள்கை மனிதாபிமானத்தின் உச்சம். பிறப்பால் தாழ்ந்தவன் என கூறி குறிப்பிட்டவர்களை ஒதுக்கி வைத்தார்கள். அவர்களுக்காக போராடியவர் தான் தந்தை பெரியார் என்றார்.