என்னைக்கும் நான் கிராமத்தான் தான்!

– கி.ராஜநாராயணன்

மூத்த கரிசல் படைப்பாளியான கி.ராஜநாராயணன் நூற்றாண்டுத் தருணத்தில்-
அவர் வாழ்வை நினைவூட்டும் ‘மணா’வின் ‘: நதிமூலம்’ என்ற நூலில் இருந்து சிறு பதிவு.
*
கரிசல்…
இப்படித்தான் சொல்கிறார்கள் அந்த மண்ணை. ஒழுங்கான மழையில்லை. நீர்ப்பாசன வசதிகளில்லை. செம்மண் கலரில் ‘வானம் பார்த்த பூமி’யை உழுதுபோட்டு விட்டு மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள். இடைசெவல் கிராமமும் இதற்கு விதிவிலக்கில்லை.

கோவில்பட்டியிலிருந்து 8 கிலோமீட்டர் கடந்து மெயின் ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து போனால் வறட்சி பரவிக் கிடக்கிற இடைசெவல் கிராமம். ஐநூறுக்குட்பட்ட குடும்பங்கள். ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும் நிறைந்த அந்தக் கிராமத்தில் வசதியான குடும்பங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதில் ஒன்று கிருஷ்ணசாமி நாயக்கர் குடும்பம்.

முழுக்க ஆச்சாரமான வைஷ்ணவப் குடும்பம். மூத்ததாக ஒரு ஆண்பிள்ளை இறந்துபோய் அடுத்தடுத்து மூன்று பெண்கள். ‘ஆண் பிள்ளை வேண்டும்’ என்று இரண்டாம் தாரம் கட்டின நேரத்தில் முதல் தாரத்திற்குப் பிறந்த பிள்ளை ‘ராயங்கா ஸ்ரீகிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜன்’. ஏதோ பூரான் மாதிரி நீள்கிற பெயரைச் சுருக்கினால் கி.ராஜநாராயணன், இன்னும் ஒரு சுருக்கு சுருக்கினால் கி.ரா.

இடைசெவலில் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம், சிறுவனாக இருந்த ராஜநாராயணனைப் பாதித்தது. கரிசல் பூமியில் வேலைக்கு அமர்த்துகிற யாரையும் வந்ததும் வீட்டுக்கு முன் உட்கார வைத்து சாப்பிடச் சொல்வார்கள். ஆசாமி நன்றாக மூக்குமுட்டச் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் தோதுப்படாது என்று அனுப்பி விடுவார்கள். அன்றைக்கு வந்த ஆள் நன்றாகச் சாப்பிட்டும் அனுப்பி விட்டார்கள். ராஜநாராயணன் தகப்பனாரிடம் இதுபற்றி கேள்வி கேட்டபோது, அவர் சொன்னார்.

“அவன் பெயர் சங்கரன், அவனை நாம் வீட்டிலே சேர்த்துக்கலாமா?அதுதான் அனுப்பிட்டேன்.

அதாவது சங்கரன் என்கிற பெயர் வைத்திருக்கிற ஆள் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்கிற அளவுக்கு வைஷ்ணவத்தில் பற்று தகப்பனாருக்கு நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டால் தான் சாப்பாடு என்கிற அப்பாவின் கண்டிப்பும் பிடிக்கவில்லை ராஜநாராயணனுக்கு. “அப்படின்னா… சாப்பாடே வேண்டாம் போ…”

“எங்க கிராமத்தில் அந்தக் காலத்தில் 50 ரூபாய்க்கு மேல் கிஸ்தி கட்டக்கூடிய குடும்பம். அப்போ அந்த அளவிற்குக் கிஸ்தி கட்டினவங்கதான் எம்.எல்.சி தேர்தலில் ஓட்டுப் போட முடியும். அப்படி ஓட்டுப்போட்ட குடும்பங்களில் எங்களது குடும்பமும் ஒன்று. ஏகப்பட்ட நிலங்கள், மாடுகள் எல்லாம் இருந்தது. கிராமத்தில் அப்பவே மாடியுடன் இருந்த காரைவீடு எங்களுக்கிருந்தது.

எங்க குடும்பத்தை ஆளாக்கினவங்க எங்களோட பாட்டி அக்கம்மா. எங்க அப்பாவோட அம்மா. அவங்க தான் காடு மேடெல்லாம் போய் விவசாய வேலையை இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்வாங்க. நிறையக் கதைகள் சொல்வாங்க. பாட்டி வைத்தியம் பார்ப்பாங்க.

அவங்கதான் எங்க அண்ணனுக்குத் தூண்டுதலாக இருந்திருக்கணும். அவங்க சொன்னதை வைச்சு ‘கோபல்ல கிராமம்’ நாவலை எழுதினார் அண்ணன். மற்றவங்க எல்லாம் விவசாய வேலைக்குப் போயிட்டபோதும், அண்ணன் விவசாய வேலைக்கு என்னவோ வரப் பிரியப்படலை. ஆனால் ஊர்க்காரியங்கள் பார்க்கிறதில்லே துறுதுறுன்னு நிற்பார்…” என்று தனது அண்ணனைப் பற்றிச் சொல்கிறார், ராஜநாராயணனின் சகோதரரான பெரியாழ்வார்.

ராஜநாராயணனைக் கிராமத்திலிருக்கிற பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்த்துவிட்டார்கள். இருந்தும் படிப்பு ஒட்டவில்லை. பாடம் நடத்துகிற வாத்தியார்களின் முகபாவங்கள், சேஷ்டைகளைக் கவனிப்பதில் இருக்கிற ஆர்வம் பாடத்தில் இல்லை. சும்மா மனசாறச் சுற்றிக்கொண்டிருந்த சிறுவனுக்கு இடுப்பில் ஒரு சின்ன வேட்டி கட்டி அனுப்பிவிட்டார்கள்.

இடுப்பில் வேட்டியும் நிற்கவில்லை. பாடமும் ஏறவில்லை. விளையாட்டுகளில் தெரிந்த துடிப்பு படிப்பில் இல்லாததைப் பார்த்து ஆசிரியர்கள் நொந்து போனார்கள். எட்டாவது வகுப்பை ஒரு வழியாக நெருங்கிப் பொதுத்தேர்வு பரீட்சைத்தாளில் ‘வந்தே மாதரம்’ என்று ஒவ்வொரு பக்கத்திலும் எழுதி வைக்க ராஜநாராயணனைக் கூப்பிட்டார்கள்.

“என்னப்பா… இங்கே வா… நீ உருப்படமாட்டே போலிருக்கு…”

“நல்லது.”

சொன்னபடி ராஜநாராயணன் வெளியேறியபோது மனதில் ஒரு சந்தோசம்.

“நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்” என்று பின்னாட்களில் ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார் கி.ராஜநாராயணன்.

“பள்ளிக்கூடம் இவரோட ஒட்டலே. அப்புறமென்ன? ஊர் சுத்தறதுதான் வேலை. வீட்டுக்குச் செல்லப்பிள்ளை. காடு, கழனி போறதில்லை. இந்தச் சமயத்தில் அரசியல் ஈடுபாடு வந்துவிட்டது. ராஜநாராயணன், கம்யூனிஸ்ட் கட்சியில் வேற சேர்ந்துவிட்டான்.

ஒரேடியாகப் புத்தகமும் கையுமாகத் திரிவான். ஊர்லே சின்னச் சின்ன சண்டை வந்தா சாமர்த்தியமா பைசல் பண்ணுவான். ‘ராஜீ’ன்னு தான் அப்போ கூப்பிடுவோம். இங்கே உள்ள பலரைக் கதையா எழுதியிருக்கான்” என்று விவரித்து சொல்லிக் கொண்டு போன வெங்கட சுப்புவும் சுவாரஸ்யமாகத் தானிருக்கிறார்.

இளம் வயதில் புலியை விரட்டி வேல் கம்பால் குத்திக் கொன்றதைச் சொல்கிற வெங்கட சுப்பு – கி.ராஜநாரயணனின் கிராமத்துத் தோழர். இடைசெவலில் ராஜநாராயணனின் வீட்டுக்கு அருகில் இருந்த இன்னொரு எழுத்தாளர் கு.அழகிரிசாமி.

சுதந்திரத்திற்கு முந்தி ஆகஸ்ட் புரட்சி முடிந்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் உள்ளே போயிருந்த நேரம். ராஜநாராயணனும் அவனது நண்பர்களும் காங்கிரஸ் ஈடுபாட்டுடன் தந்திக் கம்பிகளை அறுப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்தவர்களில் முக்கியமானவர் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான வி.பி.சிந்தன்.

“ஏன் இப்படி பண்ணுகிறீர்கள்? காங்கிரஸும், காந்தியும் வலியுறுத்துவது இதைத்தானா?” என்று இடித்துரைத்துப் பல விஷயங்களைச் சொன்னார். பல புத்தகங்களைப் படிக்கச் சொன்னார். வேறு சில தொடர்புகள் அதிகரித்தன. விவாதித்தார்கள். மூளையில் வேறு சிந்தனைகள் ஊடுருவ ஆரம்பித்தன.
கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர உறுப்பினராகிவிட்டார் ராஜநாராயணன். விவசாயிகளைத் திரட்டி விவசாயிகள் சங்கத்தில் தீவிரமானதின் விளைவு? இடைசெவல் கிராமம் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவானதாக மாறியது.

“ரொம்ப ஆச்சாரமான வீட்டுப் பிள்ளையா இருந்து கம்யூனிஸ்ட்டாக மாறியிருந்தவர் ராஜநாராயணன். அப்போ சுதந்திரத்தை ஒட்டின நேரம். கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை பண்ணிட்டாங்க. இவர் தலைமறைவாகிவிட்டார். இங்கேயும், மற்ற கிராமங்களிலும் தலைமறைவாகத் திரிந்தார்.

ஊரில் இவருக்கு நல்ல ஆதரவு. போலீஸ் அடிக்கடி இவரைத் தேடி ஊருக்குள் வரும். “ஒரு தடவை இவர் வீட்டில் இருந்தப்போ வீட்டுக் கதவைத் தட்டியது போலீஸ். இவர் ஒளிஞ்சிருந்து தப்பிச்சார். பிறகு இரண்டு முறை பிடிபட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்தார். அப்புறம், இவருக்கு உடம்புக்குச் சுகமில்லாமப் போச்சு…” என்று இடைசெவல் அனுபவங்களைச் சொல்கிறார் பொட்டி நாயக்கர்.

காசநோய்க்கு அப்போது மருந்துகள் அவ்வளவாக இல்லாத நேரம். 23 வயதில் ராஜநாராயணனுக்கு காசநோய் வந்துவிட்டது. நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள புத்தேரி மருத்துவமனையிலும், மதனபள்ளி மருத்துவமனையிலும் சிகிச்சை. உடம்பெல்லாம் மெலிந்து திரேகம் எலும்புக்கூடாகிவிட்டது.

நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒருவழியாக மருந்துகள் வந்து சாப்பிட்டதில் காசநோய் ஒரு வழியாகக் குணமாயிற்று. அதன் பக்கவிளைவாகக் காது கேட்கும் சக்தி மந்தமானது. உடம்பெல்லாம் சுகமான பிறகு மறுபடியும் இலக்கியம். அப்போது அவருக்கு நெருக்கமாக இருந்தவர் ரசிகமணி டி.கே.சி.சிதம்பரநாத முதலியார்.

டி.கே.சி.யிடம் தனிப்பிரியம் ராஜநாராயணனுக்கு. குற்றாலத்தில் இருந்த அவரது வீட்டில் உபசரிப்பு, அவரது தமிழ்ப்பேச்சு ஒரு விசேஷம் என்றால் அதைவிடச் சிறப்பு – ராஜநாராயணனை முக்கியச் சந்தர்ப்பத்தில் காப்பாற்றியிருப்பது.
நெல்லைச் சதி வழக்கு 45 வருடங்களுக்கு முன் அவ்வளவு பிரபலம். பல கம்யூனிஸ்ட்களைத் தேடிப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த லிஸ்டில் ராஜநாராயணனும் இருந்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா குற்றாலத்திற்கு வந்தபோது டி.கே.சி. வீட்டுக்கு வந்திருந்தார்.

அந்தச் சமயத்தில் டி.கே.சி. ராஜநாராயணனைப் பற்றி முதல்வரான குமாரசாமி ராஜாவிடம் சொல்ல, தேடப்பட்டவர்கள் லிஸ்டிலிருந்து ராஜநாராயணன் பெயர் எடுக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில் கி.ரா.வின் முப்பதாவது வயதில் அவரது திருமணம்.

“இடைசெவல்லே எங்க கல்யாணம் ரொம்ப எளிமையா நடந்தது. பந்தல், மேளதாளம் எதுவும் கிடையாது. கல்யாணத்திற்கு வந்திருந்த கொஞ்சம் பேருக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்தோம். இவர் உடம்பு சரியானதும் நடந்த கல்யாணம்ங்கிறதுனாலே சுருக்கமா நடத்தினோம். அதற்குப் பிறகுதான் இவர் எழுத ஆரம்பிச்சார்.

அப்போ ‘தாமரை’ பத்திரிகை துவக்கத்திற்காக எழுத்தாளர் ரகுநாதன் ஜீவாவிடம் பேச இடைசெவலுக்கு வந்திருந்தார். அந்தச் சமயத்தில் இவர் எழுதி வைச்சிருந்த கதையை எடுத்துப் போய் சரஸ்வதிக்கு அனுப்பிச்சார்.

இவரோட முதல் கதை ‘மாயமான்’ அதிலே வந்தது. அப்போ கடிதங்கள் நிறைய எழுதுவாங்க” என்கிறார் ராஜநாராயணனின் துணைவியாரான, ‘கணவதி’ என்று கணவரால் செல்லமாக அழைக்கப்படுகிற கணபதி.

சரஸ்வதி பத்திரிகையில் முதல் கதை வந்தபிறகு – ஒரு உற்சாகம். நண்பர்களுக்கு அப்போது எழுதின கடிதங்கள் கிட்டத்தட்ட கதைகளாகவே நீண்டன. அப்படி ‘தீபம்’ நடராஜன் என்ற நண்பருக்கு ராஜநாராயணன் எழுதின கடிதத்தில் எழுதினது தான் ‘கதவு’ கதை.

கரிசல் பூமியில் ஜப்தி பண்ணப்படுகிற கொடுமையை விவரிக்கும் அந்தக் கதையை விகடனுக்கு அனுப்பினார் கி.ரா. அதில் பிரசுரமாகவில்லை. பிறகு தாமரையில் ‘கதவு கதை’ பிரசுரமானதும் ஜீவானந்தம் பாராட்ட, பல இடங்களிலிருந்தும் கிடைத்த உற்சாகம் கரிசல் எழுத்தாளராக்கிவிட்டது கி.ரா.வை.

அவரது முதல் சிறுகதைத் தொகுப்பே தமிழக அரசின் விருதைப் பெற்றது.
கிரா.வைச் சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களது சோகங்கள், சந்தோஷங்கள், தனிக் குணாதிசயங்கள் எல்லாம் அந்த மண்ணுக்கான கொச்சையுடன் கி.ரா.வின் எழுத்துக்களுக்குள் புகுந்து வெளிவந்தன.

இடைசெவலில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த கி.ரா. தொகுத்த நாட்டுப்புறக் கதைகள், வட்டாரச் சொல்லகராதி எல்லாம் சேர்ந்து மழைக்குக் கூடப் பள்ளிக்கூடம் ஒதுங்க விரும்பாமல் இருந்த ராஜநாராயணனைப் புதுவைப் பல்கலைக் கழகத்தின் விசிடிங் புரொபஸராக்கிவிட்டன.

“புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த வேங்கட சுப்பிரமணியம்தான் அப்பாவை இடைசெவலிலிருந்து அழைத்துப் பேராசிரியராக்கினவர். 89-ல் இந்தக் கிராமத்திலிருந்து போய், இதுவரை பாண்டிச்சேரியில் இருக்கிறார் அம்மாவுடன்” என்கிறார் இடைசெவலில் இருக்கிற இளைய மகனான பிரபாகரன். மூத்த மகன் இருப்பது காவல்துறையில்.

கி.ராஜநாராயணன் எழுதிய 15-க்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இவர் எழுதின கரிசல் காட்டுக் கடுதாசி ஆங்கிலம், இந்தி மற்றும் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற இவரது ‘கோபல்ல கிராமத்து மக்கள்’ பல மொழிகளில் வெளிவர இருக்கிறது. பாண்டிச்சேரியில் இரண்டு வருஷங்கள் பேராசிரியராக இருந்து, பாண்டிச்சேரி பிடித்துப்போய் கடந்த ஒன்பது வருடங்களாகக் புதுச்சேரிக்காரராகிவிட்ட ராஜநாராயணனுக்குப் பேச்சில் இருப்பது அதே கரிசல் மொழி. எழுதுவதும் அதே கரிசல் எழுத்து.

“இடம்தான் மாறியிருக்கு. மனசு அப்படியே கிராமத்தில்தான் இருக்கு… எழுதுறதுல, பேசுறதிலே இன்னைக்கும், என்னைக்கும் நான் கிராமத்தான்தான்… இந்த வயசிலேயும் மகிழ்ச்சியா இருக்கீங்களான்னு கேட்டால் என்ன சொல்ல முடியும்? மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்றுதான் சொல்வேன்.

பிரச்சனைகள் எந்த வயசிலே இல்லாம இருந்தது? இருக்கும்தான். நாம்தான் அத மகிழ்ச்சியா மாத்திக்கிடணும்” என்கிறார் கி.ரா. உற்சாகம் குறையாமல்.
*
பின்னிணைப்பு:

பாண்டிச்சேரியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடுகளில் மாடி போர்ஷன் ஒன்றில் தங்கி இருக்கிறார் கி.ராஜநாராயணன். இவர் “பெரியார் பிறந்த தினத்திற்கும் அண்ணா பிறந்த தினத்திற்கும் இடையில் எனது பிறந்த தினம்” என்று முதிர்ச்சியைக் கழற்றி எறிந்தபடி சொல்கிறார். சட்டென்று ஒரு நெருக்கத்தைப் பேச்சின் மூலம் ஏற்படுத்தி விடுகிறார்.

அவருடன் பேசியவற்றிலிருந்து…

“இடைசெவல்ங்கிற சின்னக் கிராமத்திலிருந்து எப்படி சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர்கள் இரண்டு பேர் (கு.அழகிரிசாமி, நான்) உருவாக முடிந்ததுன்னு இன்னைக்கு ஆச்சரியமா கேட்கிறாங்க. எந்தச் சூழல் எங்களை உருவாக்கியது?

நான் பள்ளிக்கூடத்திற்குப் படிக்கப்போனேனே ஒழிய… படிக்கலை… ஏதோ எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். மழையில் தன்னிச்சையா திரிஞ்ச மாடுகளைக் கொட்டத்தில் ‘வச்சுப் பார்க்கிற’ மாதிரி என்னையும் பள்ளிக்கூடத்தில் வச்சு பார்த்தாங்க. பிடிக்கலை. வாத்தியார்களும் இது தேறாதுனு விட்டுட்டாங்க.

நண்பர்களுக்கு பக்கம் பக்கமா கடிதம் எழுதித்தான் பழகினேன். எனக்கென்று ஒரு பாணி உருவாச்சு. ஆனால் இன்னமும் என்னுடைய எழுத்தில் பிழைகள் அதிகம் வரும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேனே… அதுதான் உண்மையான படிப்பு.

அதோட சின்ன வயசிலேயே இசையில் பிரியம் வந்துடுச்சு. நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை எங்க ஊர்ல பெண் எடுத்ததால், அவருடன் நெருக்கமாகி பொன்னையா பிள்ளை என்பவரிடம் வாய்ப்பாட்டும், வயலினும் கத்துக்கிட்டேன். இசை படிஞ்சு போச்சு… கல்வி, இசை, இலக்கியம் எல்லாம் எங்க குடும்பத்திற்கு ரொம்ப அந்நியம். இருந்தும் இதெல்லாம் என்னிடம் சேரக் காரணம் சூழ்நிலைதான்.

1946 கடைசியில் டி.பி. நோய் வந்து, டாக்டர்கள் கைவிட்ட நிலையில், நான்கைந்து வருடங்கள் படுக்கையில் எலும்புக்கூடாகக் கிடந்தேன். எந்த நிமிடத்திலும் சாகலாம் என்கிற நிலைமை. சாவோட உராய்வை அப்போ அனுபவிக்க முடிந்தது. அதுபோல பாம்பு கடிச்சு அதிலேயிருந்து தப்பிச்சிருக்கேன்.

இதுவரை நான் எழுதினது கரிசல் இலக்கியம்ங்றாங்க… கரிசல் மண்ணைப் பிரதிபலிக்கிறதுங்றாங்க… இன்னைக்கும் சொந்த ஊர்ச் சூழல் தான் என்னோட படைப்புகளுக்கு உந்துதலாய் இருக்கு. நாளைக்கும் அதுதான் இருக்கும்.

என் மனைவி என்னுடன் வந்து 60 வருடங்களானாலும் இன்னும் அவளது கனவில் வருவது அவளுடைய வீடும், அந்தச் சூழலும்தான். அது மாதிரிதான் எனக்கும். பாண்டிச்சேரிக்கு வந்தாலும் இன்னும் என் மனதில் இருப்பது இடைசெவல் கிராமம்தான். எப்போது பேனா பிடித்தாலும், அந்தக் கரிசல் மொழி, அந்தப் பாத்திரங்கள்தான் எழுத்தில் வரும்.

சின்ன வயசிலிருந்து கிராமங்களில் பார்த்தவை, அனுபவித்தவை, இன்னும் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. அதுவே என்னை எழுதவும் வைக்கிறது” என்கிறார் கி.ரா.

பாலியல் கதைகளைப் பற்றிப் பேச்சுத் திரும்பினதும், “நம்முடைய பாரம்பரியத்தில் இல்லாத விஷயத்தையா நான் சொல்றேன். உள்ளதைத் தொகுத்துச் சொல்கிறேன். இது தப்பா? சிருங்கார ரசத்தை வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அது வாழ்க்கையின் ஒரு அங்கம் இல்லையா?” என்கிறார்.
பேசுவதில் அலுப்பில்லாமல் உரையாடுகிறார்.

கிளம்பும்போது சடசடவென்று கனத்தமழை. ஒரு குடை எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடிக்க நம்முடன் ஈரத்துடன் வந்து “பார்த்துப் போங்க” என்று வழி அனுப்புகிறார்.
நகர வாழ்க்கைக்கு வந்தும் கிராமத்துக்கான குணங்கள் அடிபட்டு விடவில்லை.
எதைப் பெறுகிறோம் என்பதைவிட எதை இழக்கிறோம் என்பது முக்கியம் இல்லையா?

Comments (0)
Add Comment