‘இன்று ஒரு தகவல்’ பிறந்த கதை!

மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் சென்னை வானொலியில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஒலிபரப்பானது.

இந்த “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி உருவானதே ஒரு சுவாரசியமான சம்பவம். அது குறித்து தென்கச்சி சுவாமிநாதன் கூறியதை காது கொடுத்து கேட்கலாம்.

சென்னை வானொலியில் வேலை பார்த்த சமயம் ஒரு நாள் கேன்டீனுக்கு சாப்பிடச் சென்றேன்.

அப்போது சக ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது “இனி நீங்கள் ரேடியோவுல சிரமப்பட்டு நிகழ்ச்சிகளை தயார் செய்ய வேண்டாம். ஏனா தொலைக்காட்சி வந்து விட்டது.

எல்லாரும் அதைத்தான் பார்க்கப் போறாங்க… நாம ஒண்ணும் அதிகமா சிரமப்பட வேண்டாம்…” என்று வேடிக்கையா சொல்லிக்கிட்டு இருந்தேன்.

இது எப்படியோ எங்கள் இயக்குனர் காதுக்கு போயிட்டுது. உடனே அவர் என்னைக் கூப்பிட்டு “இது மாதிரி பேசிக்கிட்டு இருந்தியாமே” என்றார்.

“ஆமா” சார் என்றேன்.

“நாளையில இருந்து தினமும் காலையில ஒரு ஐந்து நிமிசம் நேரத்தை ஒதுக்கி தர்றோம். ஜனங்களுக்கு உபயோகமான ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லுனு” கூறினார்.

தவளை தன்வாயால கெடும்னு சொல்லுவாங்களே… அப்படி ஆயிட்டுது என்னோட நெலம… அவர், ஆரம்பிக்கும் போதே “இன்று ஒரு தகவல்”ன்னு ஆரம்பிக்கலாம், தினமும் ஐஞ்சி நிமிஷம் பேசுன்னார்.

அப்போது விவசாய ஒலிபரப்பின் பொறுப்பாளராகவும் நான் இருந்ததால், தினமும் இந்த நிகழ்ச்சியை தயாரிப்பது சிரமாக இருக்கும். அதனால வாரத்துக்கு ஒரு நிகழ்ச்சின்னு வச்சிக்கலாமே என்றேன்.

அதற்கு அவர், இல்ல இல்ல… நீயே தொடர்ந்து சொல்ல வேண்டாம். ஒரு மாதம் சொன்னால் போதும். அடுத்த மாசத்துக்கு வேறொரு பொறுப்பாளரை நியமிச்சுடலாம்… அப்படின்னு சொல்லிதான் அந்த பொறுப்பை எங்கிட்ட ஒப்படைச்சார்.

1988 ஜூலை முதல் தேதி இதை தொடங்கினோம். ஜூலை 30-ம் தேதி கடைசி நேரத்தில இயக்குனரிடம் கிட்ட போய் சொன்னேன். என்னோட கடமை முடிஞ்சுது. அடுத்தவரை ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.

அப்ப அய்யய்யோ… நான் மறந்துட்டேனே. திடீர்னு இந்த நிகழ்ச்சியை வேறு ஒருத்தர் கிட்ட ஒப்படைச்சோம்னா அவர் சிரமப்படுவார். அதனால ஆகஸ்ட் மாதமும் நீயே சொல்லிக்கிட்டு வா… செப்டம்பர்ல மாத்திக்கிடலாம் என்றார்.

வேறு வழியில்லாததால் ஒத்துக்கிட்டு வந்தேன். இந்த முறை ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்தே எனக்கு சுதந்திரம் கொடுங்க, எனக்கு சுதந்திரம் கொடுங்கன்னு… சொல்ல ஆரம்பிச்சேன்.

அவரு என்ன பண்ணினார்… 28-ம் தேதி வாக்கில் என்னை கூப்பிட்டு சிற்றுண்டி வாங்கி கொடுத்தார். ஒரு இயக்குனர் ஊழியருக்கு வாங்கி கொடுப்பது ரொம்ப ஆச்சரியம். எதுக்கு இப்படி வாங்கிக் கொடுக்கிறார் என்று யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.

வெளியில போகுற இடமெல்லாம் “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி நல்லா இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதனால நீயே இதைத் தொடர்ந்து பண்ணினா நல்லா இருக்கும்… அப்படின்னு சொல்லி தொடரதுக்காக அந்த ரெண்டு வடையும் ஒரு டீயும் வாங்கி கொடுத்தார்.

அந்த வடைக்கும் டீக்கும் நன்றியுள்ளவனாக இதுவரை 14 ஆண்டுகள் சொல்லிக்கிட்டு இருக்கேன். தொடர்ந்து சொல்ல சிரமமா இருக்கும்… நீ எப்ப வேண்டாம்னு சொல்லுறியோ அப்ப நிறுத்திக்கலாம் என்றார்.

நான் வேண்டாம்னு சொல்ற கட்டத்துக்கு வரும் போது அவர் டிரான்ஸ்பராகி சென்றுவிட்டார். அதனால அதையும் சொல்ல முடியல.

ஆரம்பத்துல இது சுமையா தெரிஞ்சது. ஏனா ஒரே நிகழ்ச்சியை தினந்தோறும் சொல்ல வேண்டி இருக்குதுன்னு… அப்புறம் அது சுகமா போச்சு. ஏன்னா அது பழக்கப்பட்டு போச்சு.

அதுக்கு இடையில பார்வையற்றவர்கள் எல்லாம் என்னை தேடிவர ஆரம்பிச்சாங்க. அது யாரு இன்று ஒரு தகவல் சொல்றவர்னு? என்னை தடவி பார்க்கிறது… முகத்தை தடவி பார்க்கிறது… அப்படி ஒரு ஆர்வம் அவர்களுக்கு. என்னனு கேட்டா, எங்களுக்கு பல புத்தகங்களை படிக்கிறதுக்கு சாத்தியமில்ல.

எங்களுக்காக நீங்க பல புத்தகங்கள படிச்சுட்டு சொல்லுறீங்க… அதனால இதை நிறுத்திடாதீங்க சார். தொடர்ந்து நடத்தனும்னு சொல்லி… அவர்கள் தான் எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க. அதனால இதனை உற்சாகத்தோடு செய்ய ஆரம்பிச்சிட்டேன்.

  • தொகுப்பு கோ.வசந்தராஜ் 
  • நன்றி : மாலைமலர்
Comments (0)
Add Comment