பிரபஞ்சம் கேட்கும்படி பாடுங்கள்…!

கவிஞர் எம்.சோலையின் ‘சில நேரங்களில் சில கவிதைகள்’ நூலுக்காக கோ.வசந்தகுமாரன் எழுதிய அணிந்துரை.

****
ஒரு துளி நீரையும் முத்தமிடாத பாலைவனத்தில் பெய்யும் கோடை மழையைப் போல பெருமகிழ்ச்சி அளிக்கிறது கவிஞர் எம். சோலை எழுதியுள்ள ‘சில நேரங்களில் சில கவிதைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு. இதுவொரு மணிமேகலைப் பிரசுர வெளியீடு.

கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம்.

உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுவதாக விக்கிபீடியா கவிதை என்பதற்கான பொருளாக சுட்டிக்காட்டியுள்ளது.

நாம் எதார்த்த வாழ்வில் பார்த்து ரசிக்கும், கடந்துபோகும் காட்சிகள், அனுபவங்களை எளிய வார்த்தைகளில் கவிதைகளாக நெய்திருக்கிறார் கவிஞர் சோலை.

சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திர கைத்தறி சேலையடி என்று பட்டுக்கோட்டையார் பாடுவதைப் போல சின்னச் சின்ன வரிகளில் கவித்துவமிக்க கவிதைகளை எழுதியுள்ளார்.

தினமும்
தலைவாரிக்கொள்ளாமல்
அழகழகாய்
பூக்களை மட்டும்
சூடிக்கொள்கிறது
செடிகொடிகள்.

எல்லோரையும் போல பூக்களைப் பார்த்துவிட்டு நகராமல், பூச்செடிகள் பூக்களை தானாக சூடிக்கொள்கின்றன என்ற தனித்துவமான பார்வையை முன்வைக்கிறார்.

இந்த புதுமையே கவிஞர் சோலை காட்டும் எதார்த்த வாழ்வின் காட்சிப் படிமமாக இருக்கிறது.

கவிதை அனுபவம் என்ற நூலில் கலை விமர்சகர் இந்திரன் கவிதை எழுதுவது பற்றி இப்படி குறிப்பிடுகிறார்:

எந்த ஓவியத்தையும் எந்தக் கவிதையையும் முழுசா எழுதி முடிச்சிட்ட திருப்தி எனக்கு கிடைக்கிறதில்லை.

டபிள்யூ. எச். ஆடன் சொன்ன மாதிரி எல்லா கவிதைகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டவைதான். ஓவியங்கள்கூட அப்படித்தான்” என்கிறார்.

ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், “கவிதையை எங்களோடு சிந்தனைக்குள்ளேயே எழுதி முடிச்சிட்டு பேப்பர்ல எழுதி முடிச்சிடலாம். ஒரு பேப்பரும் பேனாவும் கிடைத்தால், ஏற்கெனவே மனதில் இருக்கிற கவிதைப் படிமங்களை தொகுத்திடலாம். நாவல் என்பது பெரிய உழைப்பு” என்று கவிதைகள் எழுதும் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு கவிதைக்கு மொழியும் உள்ளடக்கமும் தொனியும் முக்கியமாகிறது. நாம் சோலையின் கவிதைச் சோலைக்குள் வருவோம்.

காதல் பேருந்து
நிறுத்தம்
அவள் கண்கள்
அவள் இமைகள்
நிழற்குடைகள்

என்று சாலையில் பார்க்கும் பேருந்து நிறுத்தத்தை ஓர் அழகிய பெண்ணாகப் பார்க்கிறார் கவிஞர்.

ஒரு திரைப்பாடலில் டி. ராஜேந்தர், “விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம், பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்” என்ற பாடல் நினைவில் வந்து என்னைத் தாலாட்டுகிறது. ஒரு சிறந்த கவிதை இதைத்தான் செய்யும்.

எப்போதோ நடந்த நேரிட்ட ஓர் அனுபவத்தை அல்லது நினைவை மீட்டெடுக்கும்.

சிறு கவிதையில்கூட நகைச்சுவை உணர்வை வைத்திருக்கிறார் கவிஞர் சோலை. சங்கக் காலப் புலவர்கள் காலத்திலிருந்து நகைச்சுவை கவிதைக்குப் புறத்திலான விஷயமில்லை.

நவீன கவிதைகளில் நகைச்சுவை இருக்கிறதா என்று கேள்வி எழுகிறது. இங்கே இவரும் ஒரு கவிதையில் மெல்லிய எள்ளலை காட்டுகிறார்.

போக்குவரத்து சிக்னல்
திருப்பத்தில்
குயில்களின் சத்தம்
குயில்கள் பறக்கும்
என்று பார்த்தேன்
வாகனங்கள் பறந்தன

என்று சாலையில் அன்றாடம் சந்திக்கும் காட்சியை கவிதையாக மாற்றியிருக்கிறார். காதலை கசிந்துருகிப் பாடும் என்னைப் போன்ற கவிஞர்களுக்கு கீழ்வரும் கவிதை நெஞ்சில் பால்வார்க்கிறது. என் இனமடா நீ என்று சொல்லத் தோன்றுகிறது நண்பர்களே…

பூவோ?
பெண்ணோ?
இதழ்கள் என்றாலே
தேன் சுரக்கத்தான்
செய்கிறது

சாலைகளில்
வேகத்தடை என்பது
மேடாக மட்டும்
இருப்பதில்லை
சில சாலைகளில்
பள்ளமாகவும்
இருக்கிறது

மேற்கண்ட முதல் கவிதையில் அழகிய காதல் ரசம். அடுத்த கவிதையில் என்னவொரு எதார்த்தம். சோலைக்குள் நகைச்சுவை அலைமோதுவதைப் பார்க்கமுடிகிறது.

பிரெஞ்சுக் கவிஞர் யுவே பொனேபாய், கவிதை என்பது ஆன்மீக அனுபவம் என்று சொல்கிறார். ஆமாம்… கவிமனம் கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள்தான்.

நானும் அப்படித்தான் கவிதை எழுதும்போது ஆன்மீகத்தை உணர்கிறேன்.

கவிதை எழுதும் மனம் எப்போதும் வானில் பறக்கும் பறவையைப்போல இரைதேடி பறக்கிறது.

ஒரு கவிஞன் எதைப் பாடலாம், எதைப் பாடக்கூடாது என்று மற்றவர்கள் சொல்லமுடியாது.

பாடப்படக்கூடாத பொருள் ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை.

எதையும் பாடுபவனாக பூவுலகில் இருக்கிறான் கவிஞன். அதேபோல எதையும் பாடக்கூடிய கவிஞராக சோலை முகம் காட்டுகிறார்.

இன்னும் மேன்மையான கவிதைகளை அவர் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது புத்தனின் ஆசையில் வராது.

ஒரு காட்டில் குயில்கள் மட்டும் பாடவேண்டும் என்றால் காடு நிசப்தமாகிவிடும் என்பார்கள்.

இந்த கவிதைக்காட்டில் எல்லா பறவைகளும் பாடவேண்டும்.
சோலை… நீங்கள் முழு பிரபஞ்சமும் கேட்கும்படி பாடுங்கள். வாழ்த்துகள்.

Comments (0)
Add Comment