பக்த நாமதேவர் என்ற ஒரு படத்தை ஒருவர் தயாரித்து வெளியிட்டாராம். தயாரிப்பாளர் படத்தின் முதல் காட்சியை பரகான் தியேட்டரில் ஓட்டும் போது படம் பார்த்தவர்களில் அவரைத் தவிர எல்லோருமே பாதிப்படத்திலேயே வெளியேறிவிட்டார்களாம்.
தான் எடுத்த படம் இப்படியாகிவிட்டதே என்று வருந்திய அந்தத் தயாரிப்பாளருக்கு புத்தி பேதலித்துவிட்டதாம்.
இந்தச் சேதியை அறிந்து கொண்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அவர் அந்தப் படத்தில் நடித்திருக்கவில்லை என்றாலும் ஒரு படத்தைத் தயாரித்தவருக்கு இப்படியான நிலை வரக்கூடாதுப்பா என்று சொல்லிவிட்டு அடுத்த நாளே படம் ஓடிய தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்தாராம்.
அந்தப் படத்தில் பொருத்தமான நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்தால் படத்துக்கு இன்னும் சிறப்புச் சேர்க்கும் என்று எண்ணி, என்.எஸ்.கிருஷ்ணனே ஒரு இயக்குநரை அமர்த்தி, தானே ஸ்கிரிப்ட் எழுதி மேலதிக காட்சிகளைத் தன் பணத்தைப் போட்டு எடுக்கவைத்து, மீண்டும் பழனியில் ஒரு தியேட்டரில் வெளியிட்டராம்.
இந்தத்தடவை படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு. படம் பெரு வெற்றி என்ற செய்தியை குறித்த தயாரிப்பாளரின் உறவினர்கள் அறிந்து அவரை தியேட்டருக்கு அழைத்துப் போய்க் காட்டிய போதுதான் அவருக்கு மீளவும் சுய நினைவே திரும்பியதாம்.
படத்தில் கிடைத்த மேலதிக வசூல் பணத்தை எடுத்துக் கொண்டு போய் கலைவாணரிடம் கொண்டு போய்க் கொடுத்து,
“ஐயா நீங்கள் இந்தப் படத்தில் சம்பந்தப்படாமலேயே எனக்கு மறுவாழ்வு கொடுத்தீர்கள், இது நியாயமாக உங்களுக்குச் சேரவேண்டிய பணம்” என்று கொடுத்தார்.
அப்போது, என்.எஸ்.கிருஷ்ணனோ, “இதோ பாருங்கள், சினிமாவை நம்பி முதலிட்டவன் நொடித்துப் போகக்கூடாது என்றே இந்த உதவியைச் செய்தேன் இது உங்கள் பணம், எடுத்துச் செல்லுங்கள்” என்றாராம்.
– நன்றி: முகநூல் பதிவு