நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை தமிழக அரசு பெற்றுத் தரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளிம்பு நிலையில் – அடிப்படை உரிமைகள் இன்றி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவ மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நரிக்குறவர் உள்ளிட்ட மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும் என சொல்லியிருந்தோம்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த 19.3.2022 அன்று பிரதமருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினோம்.
நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியின தகுதி மட்டுமின்றி – திமுக அரசு அமைந்த பிறகு அவர்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அவர்களின் வாழ்விடங்களுக்குப் பட்டா வழங்குவது, அடிப்படை வசதிகள் வழங்குவது, தொழில் துவங்க உதவுவது என ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சமூகநீதிக்காக – சமுதாயத்தை கை தூக்கி நிறுத்துவதற்காக அடுத்தடுத்து பொருளாதார உதவி நடவடிக்கைகளைத் திமுக அரசு எடுத்து வரும்நேரத்தில் – அவர்களுக்கு பழங்குடியின தகுதி வழங்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை – நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும்.
நரிக்குறவர் இன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக – அவர்களின் வாழ்வை ஒளிமயமாக்க தமிழக அரசு, தொடர்ந்து சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.