1944.
அந்த ஆண்டில் தான் நடிகமணி நாராயணசாமி அவர்கள் என்னை அழைத்துச் சென்று அண்ணாவிடம் அறிமுகப்படுத்தினார்.
அந்தவகையில் அண்ணாவின் வயது இன்று 75 என்றால், அவருடைய வாழ்வின் சரிபாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான் அண்ணாவுடன் தொடர்பு கொண்டவன்.
அதாவது அண்ணாவோடு பழகியவன். அன்பு செலுத்தியவன். கவரப்பட்டவன். பின்பற்றியவன். அவருடைய லட்சியப் பாதையில் பயணித்து வருபவன் என்ற வகையில், எனக்கு அண்ணா என்னும் நிறுவனத்தோடு 40 ஆண்டுகள் தொடர்பு உண்டு.
அவரே பலமுறை கூறியது போல அண்ணா அவர்களுடைய இதயத்தில் தனியான ஒரு இடம் பெறுகிற அளவு நாளுக்கு நாள் தகுதிகளைப் பெற்றிடுவதே வாழ்வின் குறிக்கோள் என்று கருதியவன் என்பதை இந்நேரத்தில் நினைவுகூர்வது பெருமிதத்தையும், ஓரளவு கர்வத்தையும் என்னிடம் ஏற்படுத்துகின்றன.
என்னைப் பொறுத்தவரை இங்கே என்னை என்று தனிப்பட்ட முறையில் நான் அழைத்துக் கொண்டாலும், எனது பாதையை, பொதுவாழ்வுக் கொள்கைகளைப் பின்பற்றுகிற அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகவே, என்னை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.
அத்தகைய என்னைப் பொறுத்தவரை- என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்று ஒன்று இருக்குமானால், அது அண்ணா சுட்டிக்காட்டிய வழியில் நடந்து செல்வது, அண்ணாவின் குறிக்கோள்களுக்குச் செயல்வடிவம் தருவது, நிறைவேற்றப்படாத அண்ணாவின் திட்டங்களை நிறைவேற்றுவது என்பது தான் குறிக்கோளாகும்.
அ.தி.மு.க எனும் இந்த அமைப்பில் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ள லட்சோப லட்சம் உடன்பிறப்புகள், அமரர் பேரரறிஞர் அண்ணாவின் தூய குறிக்கோள்களுக்கு ஆதரவு தருகிற, தந்து கொண்டிருக்கிற கோடிக்கணக்கான தமிழகத் தாய்மார்கள், பெற்றோர்கள், அத்தகைய மக்களின் கட்டளையாலும், தீர்ப்பாலும் நாம் வகித்து வருகிற பொறுப்புகள்.
இவை அனைத்துமே அண்ணாவின் குறிக்கோள்களை நிலைநிறுத்த நமக்குக் கிட்டியிருக்கிற கருவிகளே தவிர வேறல்ல.
இதில் ஏதேனும் துளி ஐயப்பாடு ஏற்படுமானால் அல்லது இந்த எண்ணத்துக்கு எங்கேனும் ஏதேனும் எந்த வடிவத்திலாயினும் சிறு தடை ஏற்படுமானால் அல்லது ஏற்படுத்தப்படுமானால் அந்தத் தடைகளை அகற்றுவது தான் நமது முதல் கடமை.
அண்ணா அமைத்த கழகத்திலிருந்து நான் 1972 அக்டோபரில் தூக்கி எறியப்பட்ட பிறகு நமது அமைப்பின் பெயரிலும், கொடியிலும், கொள்கையிலும், செயல்திட்டங்களிலும் அண்ணாவே நீக்கமற நிறைந்திருப்பார் என்பதனை அண்ணாவின் பகைவர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த அற்புதமான மாற்றத்திற்கு என்ன காரணம்? தனிப்பட்ட என் பலம், சாமர்த்தியம், அரசியல் என்று என் பால் அன்பு கொண்டோர் கூறினாலும், நான் அவர்கள் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்வது ‘என்னை வழிநடத்தும் தெய்வமான அமரர் பேரறிஞர் அண்ணா எனும் சக்தியின் வெற்றியே இதற்குக் காரணம்’ என்பதைத் தான் .
மகாத்மா காந்தியின் வாழ்க்கையே அவருடைய செய்தி என்பார்கள். அது போலவே அண்ணாவின் வாழ்க்கையும் நமக்கான செய்தியாகும்.
– பேரறிஞர் அண்ணாவின் 75 வது பிறந்த நாளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.