ஒரு காட்டில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் “ஏ கிழவா! இந்த வழியாக சற்றுமுன் யாராவது சென்றார்களா?” என்று அதிகாரத்தோடு கேட்டான்.
அதற்குத் துறவி, “காலையிலிருந்து, இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை” என்றார்.
சிறிது நேரத்தில் மற்றொருவன் வந்து, “ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா?” என்று கேட்டான்.
அதற்கு அத்துறவி, “சற்றுமுன் இவ்வழி சென்ற வீரன் ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்” என்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவன், “துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்” என்று பணிவோடு வினவினான்.
உடனே துறவி, “மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்” என்றார்.
மிகவும் வியந்து போன அரசன், “துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்?” என்று கேட்டான்.
“அரசே, முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தெரிந்தது. ஆனால், தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்” என்று விளக்கினார். அந்தப் பார்வையற்ற துறவி.!
‘பதவி வரும்போது, பணிவு வரவேண்டும் தோழா!’ என்ற பாடல் வரிகளை மனதில் கொள்வது எப்போதுமே பயன்தரும். உயர்பதவியிலோ, தலைமைப் பதவியிலோ இருப்பவர்களுக்கு பணிவுதான் பெரும் ஆயுதம். ஒருவேளை பணிவைக் கைகொள்ளத் தெரிந்திருந்து, உழைப்பையும் கொண்டிருந்தால், அதுவேகூட, நம்மைத் தேடிப் பதவியை வரவழைக்கக்கூடும்.
பணிவு என்பது என்ன…. காக்காய் பிடிக்க குழைவதோ, காலில் விழுந்து வணங்கி நிற்பதோ பணிவு என்பதாகாது. நமது சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காது, பிறரது உணர்வுகளை மதித்து, அவர்களது சுயமரியாதைக்குப் பங்கம் வராவண்ணம் வார்த்தைகளை உதிர்த்து, தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதே பணியாகும்.
அசோசு சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத் துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.
அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார். மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல், ஒரு ஆட்டுத் தலை. ஒரு புலித் தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு விநோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் வந்து சேர்ந்தன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத் தலை உடனே விலை போயிற்று. புலித் தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.
இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன் வீட்டுச் சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார். ஆனால், மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின்வாங்கினர். முகம் சுழித்து ஓடினர். விபரங்களை மன்னரிடம் சொன்னபோது. ‘அதை இலவசமாகவாவது கொடுத்துவிடுங்கள்! என்றார். இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை,
இப்போது அசோகர் சொன்னார். “தளபதி! மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது. இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது? இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரிகிறது.
உடலில் உயிர் இருக்கும்போதே தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?” தளபதிக்கு மன்னரின் பணிவுக்கான அர்த்தம் புரிந்தது.
– இராம்குமார் சிங்காரம் எழுதிய ஒரு கதை ஒரு விதை என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.