அன்பு காட்டுவதில் அஜித்தை மிஞ்ச ஆள் இல்லை!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 11

தனக்கு ஒரு உதவி செய்தவர்களுக்கு மீண்டும் பதில் உதவி செய்வதற்கான நேரம் அமைந்தால் தயங்காமல் உதவுவது அஜித் குணம். அதே போல தனக்கு ஒருவருடன் மனத்தாங்கல் ஏற்பட்டால், அவர்களை புண்படுத்தமாட்டார்.

பதிலுக்கு அவர்களிடம் இருந்து ஒதுங்கிவிடுவது அஜித் ஸ்டைல். இவை இரண்டுமே சிவசக்தி பாண்டியனுக்கு நேர்ந்தது.

‘வான்மதி’ ஹிட்டுக்கு பிறகு சிவசக்தி பாண்டியனுடன் இணைந்து ‘காதல் கோட்டை’ செய்தார் அஜித். அந்தப் படம் இருவரையுமே உச்சத்துக்கு உயர்த்தியது.

அதன் பிறகு பாண்டியனின் நெருங்கிய குடும்ப நண்பரானார் அஜித்.

அஜித்துடனான நட்பைப் பற்றிக் கூறுகிறார் சிவசக்தி பாண்டியன்.

‘‘அடிக்கடி வீட்டுக்கு வருவார். என் பிள்ளைகளை வைத்து பைக்கில் ரவுண்ட் அடிப்பார். என்னோடு நிறைய கோயில்களுக்கு வந்திருக்கிறார்.

அப்படி இருந்த எங்கள் நெருக்கத்தைக் பார்த்து யார் கண்பட்டதோ தெரியவில்லை. எங்கள் நட்பில் ஒரு திடீர் விரிசல் ஏற்பட்டது.

அது ஏன்? எதற்காக? என்று இப்போது சொல்வது நாகரிகமாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும், எங்களுக்குள் இருந்த அந்த அன்பு அப்படியேதான் இருந்தது.

நீண்ட நாள் கழித்து எங்கள் வீட்டில் நடந்த ஒரு விசேஷத்துக்கு அவர் வந்திருந்தபோது தான் அதை நான் புரிந்து கொண்டேன்.

என் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வந்திருந்தவர் நீண்டநேரம் இருந்து, எங்களுடன் சாப்பிட்டுவிட்டு தான் சென்றார்.

மனதில் எதையும் வைத்துக் கொள்ளாத அவரின் பெருந்தன்மையை கண்டு எங்கள் குடும்பமே அன்று நெகிழ்ந்து போனது’’ என்று தன் நண்பரை பற்றி மனதில் இருந்ததை எல்லாம் மளமளவென கொட்டினார் சிவசக்தி பாண்டியன்.

ஒருமுறை அஜித்துக்கு மூட்டு ஆபரேஷன் நடந்தபோது அவரை ஆஸ்பத்திரியில் சென்று சந்தித்த வெகு சிலரில் பாண்டியனும் ஒருவர். அப்போது கூட வீட்டில் இருக்கும் அனைவரையும் மறக்காமல் பெயர் சொல்லி கேட்டு விசாரித்தாராம் அஜித்.

மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது, “மறுபடியும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் சார். ஆனா அது சாதாரணமா இருக்கக்கூடாது. பொக்ரான் குண்டு வெடிச்ச மாதிரி பெரிய பரபரப்பா வரணும்” என்று சொல்லி பாண்டியனை உற்சாகப்படுத்தி அனுப்பி இருக்கிறார். அதுதான் தல!

‘அஜித் என்ன சொன்னாலும் அது செய்தி. எங்கு சென்றாலும் அது பரபரப்பு’ என்பது தெரிந்த சங்கதி தான். 

அஜித்துடன் ஒரு படம் செய்தாலே ஸ்பெஷல். தொடர்ச்சியாக மூன்று படங்கள் என்றால் கேட்கவா வேண்டும்? அதனால் ‘தல’ பற்றி சொல்ல சிவாவிடம் விஷயம் கொட்டிக்கிடக்கும் என்பதால் அவரை விரட்டிப் பிடித்தோம்.

‘‘எனக்கு இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. அஜித் சாரை முதன்முதலா சென்னை ஏர்போர்ட்ல தான் பார்த்தேன். ‘மங்காத்தா’ ஷூட்டிங் டைம்னு நினைக்கிறேன்.

நான் ஃப்ளைட் இறங்கி வெளியே வரேன் அவர் உள்ளே போறார். அந்த இடமே பயங்கர சலசலப்பா ஆகிடுச்சு. அஜித்… ‘தல…’னு அங்கங்க கூச்சல். ஒரு சின்ன புன்னகையோட அவர் கடந்து போறார்.

என் பக்கத்துல இருந்த ஃபாரினர் ஒருத்தர் எதுவும் புரியாம ‘ஹூ ஈஸ் ஹீ?’னு கேட்டார். ‘ஹீ ஈஸ் எ வெரி பிக் சௌத் இண்டியன் ஆக்டர்’னு சொன்னேன். ‘ஹீ லுக்ஸ் லைக் ஹாலிவுட் ஆக்டர்’னு அவர் சொன்னது பெருமையா இருந்துச்சு.

எப்படியாவது அஜித் சார் கூட ஒரு படம் பண்ணிடணும்னுலாம் அன்னிக்கு நான் சத்தியமா நினைக்கல. கொஞ்ச நாள் கழிச்சு அவர் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஃபோன் பண்ணி ‘சார்கூட ஒரு படம் பண்றீங்களா’னு கேட்டார்.

“என்ன சார் கேள்வி இது. காத்துகிட்டிருக்கேன்”னேன். அதற்கு அப்புறம் பல மாசம் ஓடிப்போச்சு.

இதையெல்லாத்தையுமே நான் மறந்து, வேற வேலைகள்ல பிஸியாகிட்டேன். திடீர்னு ஒரு நாள் ஒரு புது நம்பர்ல இருந்து போன்.

‘ஹாய் ஐம் அஜித் ஹியர்’னு ஒரு குரல். சத்தியமா எனக்கு நம்பிக்கை இல்ல. யாரோ பசங்கதான் கலாய்குறாங்கனு நெனச்சு, “டேய்… யாருடா அது. கலாய்க்காம பேர சொல்லு”னேன். “ஹலோ சிவா… நான் அஜித் தான் பேசுறேன்”னு சொன்னார்.

“ஐய்யோ சார்… மன்னிச்சுடுங்க. யாரோ விளையாடுறாங்கனு நெனச்சேன்”னு சொன்னதும். “இட்ஸ் ஓகே. என்னோட வொர்க் பண்ண இன்ட்ரஸ்ட் இருந்தா சொல்லுங்க. வீட்டுல மீட் பண்ணுவோம்”னு சொன்னார்.

அடுத்த நாள் காலையில அவர் வீட்ல நின்னேன். நிறைய பேசினோம். திரும்ப நாளைக்கு காலையில ஏழு மணிக்கு வாங்கனு சொல்லி அனுப்பிட்டார்.

மீண்டும் அடுத்த நாள் காலையில போனேன். என்னைப் பார்த்ததும் அவர் சொன்ன வார்த்தைகள் ரொம்பவும் விநோதமா இருந்தது. அதுவரை யாரும் என்கிட்ட அப்படி சொன்னதில்ல. சட்டுன்னு கண்ணெல்லாம் இருட்டிகிட்டு வந்துச்சு!

(இன்னும் தெறிக்கும்…)

– அருண் சுவாமிநாதன்

Comments (0)
Add Comment