முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னையில் 2018-19, 2019-20, 2020-21 ம் ஆண்டுகளுக்கான சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
இதில், சரத் கமல், சத்யன், ஜோஷ்னா சின்னப்பா, பிரக்ஞானந்தா, டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், செஸ் வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதோடு, விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய ஆடுகளம் உதவி தகவல் மையத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
பின்னர் முதல்வர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிக்கான இணையதள பதிவையும் துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “செஸ் விளையாட்டு மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கபடி, சிலம்பம் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
விளையாட்டுத்துறையில் புது மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பழங்குடியினர்களின் விளையாட்டுகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர்கள் மூலம் இலவசமாக நேரடியாக ஆன்லைனில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்று சாதனை புரிய வேண்டும் என்பதால் இதுபோன்ற விழா நடக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் மூலம் கிராமம் முதல் நகரம் வரை விளையாட்டுப் போட்டிகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.
அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும்” எனக் கூறினார்.