இந்தியாவின் வடக்குப்பகுதி மற்றும் கிழக்கு, மேற்கு என மூன்று திசைகளில் வலிமையாக இருக்கும் பா.ஜ.க. தென்னகத்தில் பலவீனமாகவே உள்ளது.
ஆளுங்கட்சியாக இருக்கும் கர்நாடகத்தில் பாஜக அசுர பலத்தில் இருப்பதாக சொல்ல முடியாது.
பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தனி ஆவர்த்தனம் செய்வதாலும், பி.எஸ்.எடியூரப்பாவின் தனிப்பட்ட செல்வாக்காலும், அங்கு பாஜக. குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவிக்க முடிகிறது.
புதுச்சேரியில் தோளில் சுமக்க, ரங்கசாமி இருப்பதால், பாஜகவுக்கு கவலை இல்லை.
கேரளாவில் பல பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டும், எந்த ஒரு முன்னேற்றமும் கிடையாது.
தற்போதைக்கு அங்கு முட்டி மோதுவதால் துளியும் பிரயோனஜம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ள பாஜக மேலிடம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தனது தளத்தை பலப்படுத்த மாஸ்டர் பிளான் ஒன்றை தீட்டியுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும் தலைவர்களை மாற்றியும், மத்திய அமைச்சரவையில் நல்ல பிரதிநிதித்துவம் அளித்தும் – பாஜகவுக்கு போஷாக்கு கிடைக்கவில்லை.
எனவே சினிமா பிரபலங்களை ’’கையகப்படுத்துவது’’ என்ற முடிவுக்கு வந்து விட்டது.
என்ன காரணம்?
திரைத்துறையில் இருந்து ஐந்து முதலமைச்சர்களை (அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா) அளித்த மாநிலம் தமிழகம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திரைத்துறையினர் முதலமைச்சர் நாற்காலியை பிடித்ததில்லை.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநில மக்களும் திரைத்துறையினரின் ‘வாய்சு’க்கு மதிப்பு அளிப்பார்கள் என்பதால், இந்த முயற்சியில் நேரடியாகவே களம் இறங்கியுள்ளது பாஜக மேலிடம்.
ஜுனியர் என்.டி.ஆர்.
என்.டி.ஆரின் பேரனான நடிகர் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
ஆர்.ஆர்.ஆர். படம் அவரை ‘பான் இந்தியா நடிகராக’ உயர்த்தி விட்டது.
அவரை பாஜகவின் இரும்பு மனிதரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஐதராபாத்தில் அண்மையில் சந்தித்து பேசினார்.
‘’இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான சந்திப்பு’’ என உள்ளூர் பாஜகவினர் அடித்துச் சொல்கிறார்கள்.
ஜுனியர் என்.டி.ஆருக்கு அரசியல் புதிது அல்ல.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில், தாத்தா நிறுவிய தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் தான்.
தற்காலிகமாக அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்.
ஜூனியர் என்.டி.ஆருடன் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்தவர் யார் தெரியுமா?
இயக்குநர் ராஜமவுலியின் அப்பா- விஜயேந்திர பிரசாத்.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களின் கதை வசனகர்த்தா.
அண்மையில் அவரை, மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்தது.
அப்போது முதல் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் பாஜகவை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், பிரசாத்.
தமிழகம்
தமிழ்நாட்டில் குஷ்பு முதல் கங்கை அமரன் வரை பாஜகவில் ஏகப்பட்ட சினிமாக்காரர்கள் இருந்தாலும் மக்களை ஒரு சேர ஈர்க்கும் முகம் இல்லை.
அந்த முகம், ரஜினியாக இருந்தால், பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்த மோடி, டெல்லியில் அவரை சந்தித்துப் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக ஆளுநர் ரவியை ரஜினி சந்தித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், ரஜினி தங்களுக்கு நிச்சயம் ‘வாய்ஸ்’ கொடுப்பார் என பாஜக மேலிடம் 100 சதவீதம் நம்புகிறது.
நேரில் களம் இறங்கும் மோடி
”அமித்ஷாவின் சந்திப்பு ஒரு தொடக்கம் தான். அடுத்த கட்டமாக பிரதமர் மோடியே, நேரடியாக திரை உலக வி.ஐ.பி.க்களை சந்திக்கப்போகிறார்’’ என்கிறார்கள் பாஜகவினர்.
‘’உண்மை தான்’’ என்று ஆமோதித்தார், தெலுங்கானா மாநில பாஜக பொதுச்செயலாளர் பிரேமந்தர் ரெட்டி.
“இன்னும் சில நாட்களில் எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் பல்வேறு துறைகளில் புகழ் பெற்றுள்ள பிரபலங்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளனர்.
விளையாட்டு வீரர்கள், சினிமா விஐபிக்கள் இதில் அடங்குவார்கள்’’ என அவர் மேலும் சொன்னார்.
தென்னகத்தில் பாஜக வெற்றிக்கு ரஜினியும், ராமாராவ் பேரனும் உதவுவார்களா? என விரைவில் தெரியும்.
– பி.எம்.எம்.