ஊர்சுற்றிக் குறிப்புகள்:
நினைவில் வாழும் எழுத்தாளர் பிரபஞ்சனின் பெயரில் ஒரு அரங்கம்.
அதன் திறப்புவிழா நேற்று சென்னை கே.கே.நகரில் அமைந்திருக்கிற டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது.
நண்பர்கள் ந.முருகேச பாண்டியன், ப.திருமாவேலன், சி.மோகன், வேடியப்பன், பொன்ஸீ, பாண்டியன், குலசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட எளிய பெயர்ப் பலகை திறப்பு நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன்.
பிரபஞ்சன் பற்றி மிகச் சுருக்கமாகச் சில விஷயங்களைப் பேசினார்கள் நண்பர்கள்.
நானும் பேசினேன்.
வைத்தி என்று அவருக்கு நெருக்கமான நண்பர்களால் அழைக்கப்பட்ட அவர் ’பிரபஞ்சன்’ என்ற பெயரைத் தனக்குத் தானே சூட்டிக் கொண்டது பற்றிப் பேசும்போது சொன்னார்.
“நாம வைக்கிற புனைப்பெயர் கொசு மாதிரிச் சின்னதா இருக்கக் கூடாது. விசாலமா யானை மாதிரி இருக்கணும். அதனால் தான் பிரபஞ்சன் என்ற பெயரை வைத்துக் கொண்டேன்.
பிரபஞ்ச கவி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதினேன். அதையெல்லாம் இப்போது நானே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று சிரித்தபடி சொன்னபோது நான் இடைமறித்தேன்.
“யாதும் ஊரே… யாவரும் கேளிர்” எழுதிய கணியன் பூங்குன்றனாரின் விசால மனம் போலவா?”
“என்ன சொன்னீங்க?”
மறுபடியும் சொன்னேன்.
அதன் பிறகு சொன்னார் பிரபஞ்சன்.
“என்ன கணியன் பூங்குன்றனரா? அதென்ன நாரைச் சேர்த்திருக்கீங்க.. அதென்ன பண்பாடு..? கணியன் பூங்குன்றன்ங்கிற பேரே நல்லாத்தான் இருக்கு.. அதில் என்ன “னார்” சேர வேண்டியிருக்கு.. சங்கரலிங்கம்னு சொல்லாம சங்கரலிங்கனார்னு சொல்றாங்க.. அன்பழகனார்னு சொல்றாங்க..
ஏன் இப்படிப் பெயரைத் திரிக்கணும் சொல்லுங்க.. நாளைக்கு அவங்களைப் பற்றி ஆய்வு செய்றவங்களுக்கு இதெல்லாம் எவ்வளவு இடைஞ்சலா இருக்கும் தெரியுமா?”
கொஞ்ச நேர மௌனம். அதற்குப் பிறகு தொடர்ந்தார்.
“என் பெயரையே எடுத்துக்குங்க.. பிரபஞ்சன்ங்கிற பேரைச் சொல்லிப் பாருங்க.. எவ்வளவு இளமையா இருக்கு… (சிரிக்கிறார்) நாளைக்கு அதையே “பிரபஞ்சனார்”ன்னு னார் கலந்து மாத்துறாங்கன்னு வைச்சுங்க.. எப்படி இருக்கும்? நல்லாவா இருக்கும்?
பெயரை இப்படி மாத்துறது என்ன கலாச்சாரமா இங்கே நீடிச்சுக்கிட்டிருக்குன்னு தெரியலை. ‘னார்’ன்னு பேரில் சேத்துட்டாப் போதும்.. பெயருக்கே நரை வந்துட்ட மாதிரில்லே இருக்கு.. என்ன சொல்றீங்க? என்று “ நாராய்க் கிழித்துத் தொங்கவிட்டு விட்டார்.”
இதெல்லாம் பேசி ஒரு வாரம் கழித்து சென்னை ராயப்பேட்டையில் அவர் குடியிருந்த பீட்டர்ஸ் காலனியின் மேல் தளத்திற்குப் போயிருந்து காலிங் பெல்லை அழுத்தினேன்.
“யாரு?” உள்ளிருந்து கேட்டது பிரபஞ்சனின் குரல்.
“பிரபஞ்சன்” என்றழைத்து என் பெயரைச் சொன்னேன்.
சற்று நேரம் மௌனம்.
மீண்டும் “யாரு?” – கேட்டது அவருடைய குரல்.
“பிரபஞ்சனார் அய்யா இருக்காங்களா?” – கேட்டது தான் அண்ணாந்த வெடிச்சிரிப்புடன் கைலி, பனியன் சகிதமாக வந்தார் பிரபஞ்சன்.
“எப்படியோ நாரைச் சேர்த்துக் கூப்பிட்டதும் தான் நீங்களே வர்றீங்க..” என்றதும் மீண்டும் வெடிச்சிரிப்பு வெளிப்பட்டது அவரிடம்.
முகத்தில் அற்புதமான உற்சாகக் களை தெரிந்தது.
அப்புறம் என்ன? அடுத்த இரண்டு மணி நேரமும் கிண்டலும், கேலியுமாக அமர்க்களப்படுத்தி விட்டார் பிரபஞ்சன்.
தற்போது வேடியப்பன் அவர் விரும்பாத “னார்” எதையும் சேர்க்காமல் “பிரபஞ்சன்’ அரங்கம்” என்று பெயர் வைத்திருப்பது சற்றே ஆசுவாசமாய் இருக்கிறது.
-மணா