இந்திய அணியில் மாற்றங்களை கொண்டு வரும் பிசிசிஐ!

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் அடிக்கடி பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

ஒரு சில சமயம் அது புது முயற்சிகளை சார்ந்த உள்ளது வேறு சில நேரங்களில் ஒரு வீரருக்கு காயம் அடைந்தவர் வெளியேறுவதால் வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஒரு அணியில் பெரிய மாற்றங்கள் நிகழ்வது என்பது வழக்கமானதாகவே கருதப்படலாம்.

ஆனால், இந்திய அணியில் நடக்கும் மாற்றங்கள் வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி கண்ட இந்திய அணி தொடர்ந்து இரண்டு தோல்விகளை கண்டு ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

கடைசியாக நடந்த இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டியில் விராட் கோலி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்களது மிகச் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தினாலும் இதன் மூலம் கிடைத்த வெற்றி வெறும் ஆறுதல் வெற்றி மட்டுமே.

மூன்று வருடங்களுக்குப் பிறகு சதம்

குறிப்பாக மூன்று வருடங்களுக்கு பிறகு விராட் கோலி சதம் அடித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.

இருப்பினும் ஒரு நல்ல வீரர் சதம் அடிக்க ரசிகர்களே மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையை நினைத்து சற்று கவலைப்பட வேண்டி இருக்கிறது.

அவர் மூன்று வருடம் எடுத்துக் கொண்டார் என்ற கவலையை தாண்டி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்று வருடங்களை விட்டுக் கொடுத்து விட்டார் என்ற கவலை தான் அதிகமாக உள்ளது.

ஏற்கனவே விராட் கோலிக்கு வயது 33 ஆகையால் அவர் இன்னும் எத்தனை வருடங்கள் இந்திய அணியில் இருப்பார் என்று முடிவாக சொல்ல முடியாது.

அவர் நிச்சயமாக சச்சினின் 100 சதங்கள் எனும் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இப்பொழுதுதான் 71 சதங்களை கடந்துள்ளார்.

அவர் இன்னும் 29 சதங்களை அடிக்கும் வரை அணியில் இடம் பெறுவாரா என்பது சற்று சந்தேகமான நிலையில் உள்ளது.

30 வயதுக்கும் மேற்பட்ட வீரர்கள்

இந்த ஆசியக் கோப்பையில் 30 வயதுக்கும் மேற்பட்ட அதிக வீரர்களை கொண்டு விளையாடிய அணி இந்திய அணி தான்.

ஆகையால் வருகிற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிசிசிஐ அணியில் சில மாற்றங்களை செய்ய ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில், புதிய இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை உருவாக்குவதில் பிசிசிஐ முனைப்பு காட்டி வருவதாகத் தெரிகிறது.

ஏற்கனவே கடந்த டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்ததிலிருந்து முகமது ஷமி டி20 போட்டிகளில் அவ்வளவாக விளையாடாமல் 50 ஓவர் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதிகம் விளையாடி வருகிறார்.

அதேபோல வருகிற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்பு சில சீனியர் வீரர்கள் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

விராட் கோலியை போலவே ஜடேஜாவுக்கும் 33 வயதாகி விட்டது. ஆகையால் அவரை 50 ஓவர் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வைத்து டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய அணிக்கு எம்.எஸ்.தோனி தலைமை தாங்கியபோது முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்கி டி20 உலகக் கோப்பை, உலகக் கோப்பை மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் பல கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்று தந்தார்.

அதேபோல முற்றிலுமாக ஒரு புதிய இளைஞர்களை கொண்ட அணியை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது.

இந்திய அணியின் மாற்றங்கள்

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்பு, இந்திய அணியிலிருந்து விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் டி20 கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

– இளவரசன்

Comments (0)
Add Comment