அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷா கோலா படிக்க விரும்பும் இடம் ‘போமோரா’ மரத்தடி. அங்கிருந்து தனக்குப் பிடித்த புத்தகத்தைப் பறித்து, அதில் மூழ்கிவிடுகிறார். குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியமாக்கும் ‘மரங்களில் நூலகம்’ என்ற திட்டம் ஜேசிஐ பெமினா தொண்டு நிறுவனத்தின் அரிய முயற்சி.
மரியானியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட நூலகத்தில் அசாமி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காமிக்ஸ், புதினங்கள், சுயசரிதைகள் மற்றும் பல்துறை புத்தகங்கள் உள்ளன.
“நாங்கள் பள்ளியில் அனுமதிபெற்று, ஒரு தச்சரை நியமித்து வீட்டுக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி கொள்கலன்கள் மற்றும் அலமாரிகள் செய்தோம்.
செப்டம்பர் 3 ஆம் தேதியன்று 600 புத்தகங்கள் கொண்ட நூலகம் தொடங்கப்பட்டது” என்கிறார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் தீபிகா போத்தார்.
ஜேசிஐ ஃபெமினா செயலாளர் ஷிவானி அகர்வால், “இந்த புதுமையான நூலகத்தை அமைப்பதற்கு சுமார் ரூ.15 ஆயிரம் செலவழித்தோம்” என்றார்.
பள்ளி நூலகத்தைப் பராமரிப்பதற்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படவுள்ளார். இந்த திட்டத்தால் பள்ளிக் குழந்தைகள் மகிழ்ந்துள்ளனர்.
“எனக்கு எப்போதும் பெரிய மனிதர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பது பிடிக்கும். நூலகத்தில் ஏராளமான நூல்கள் உள்ளன” என்று சொல்கிறார் பத்தாம் வகுப்பு மாணவி நிஷா.
மரங்களில் நூலகம் என்ற கருத்து நன்றாக இருந்தாலும் மரங்களை காப்பாற்றியிருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் மிருது பபன் ஃபூகோன்.
“நூலகத்தை மூங்கில் அல்லது உலோகக் கம்பத்தில் அமைத்திருக்கலாம்.
புத்தக அலமாரிகளை சரிசெய்ய பயன்படுத்தப்படும் ஆணிகள் மரங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எறும்புகள் மற்றும் பூச்சிகளின் சுற்றுச்சூழலுக்கு மரங்களில் வண்ணப்பூச்சுகள் இடையூறை ஏற்படுத்தும்” என்று அக்கறையுடன் ஆலோசனை தருகிறார்.
பா. மகிழ்மதி