எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடந்தது.
இந்தத் தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் மொத்தம் 51.3% பேர் (67,787 பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவு.
கடந்த ஆண்டு 54.40% பேர் தேர்ச்சியடைந்தனர். அதேபோல் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
தமிழகத்தில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 30வது இடத்தை பிடித்துள்ளார். தமிழக மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 43வது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் 50 இடங்களில் அதிகபட்சமாக கர்நாடகாவில் இருந்து 9 பேர் இடம்பெற்றுள்ளனர். அடுத்தபடியாக டெல்லி, தெலங்கானாவில் தலா 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இத்தேர்வில் நாடு முழுவதும் 4 பேர் 99% பெற்றுள்ளனர். ராஜஸ்தானின் தனிஷிகா, (ராஜஸ்தானில் தேர்வெழுதிய தனிஷிகாவின் சொந்த ஊர் ஹரியாணா) டெல்லியின் வட்ஸ் ஆசிஷ் பத்ரா, ஹ்ரிஷிகேஷின் என்.கங்குலி மற்றும் ருச்சா பவாஷேஎ 720க்கு 715 மதிப்பெண் பெற்று 99.99% உடன் முதலிடத்தில் உள்ளனர். தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்கள் அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனிடையே நீட் தேர்வு முடிவுகள் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் தேர்வு 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் ஒப்புதலோடு கொண்டு வரப்பட்டது.
இந்த ஆண்டு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். இதுவரையில் நடந்த தேர்வில் இந்த ஆண்டு தான் அதிக மாணவர்கள் பங்கு பெற்றுள்ளனர்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படித்த 17,517 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு முடிந்த நாளில் இருந்து இதுவரையில் மாணவர்களுக்கு 110 ஆலோசகர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கி வருகிறோம்.
ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 பேருக்கும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதில் 564 மாணவர்கள் அதிக மன உளைச்சல், அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 98 மாணவர்கள் மாவட்ட அளவில் மாவட்ட மன நலதிட்ட மருத்துவக்குழுவால் நேரடியாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ளதால் அதிக மன அழுத்தத்தில் உள்ள 564 மாணவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். 38 மாவட்டங்களிலும் மாவட்ட மனநல மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கிறோம். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் யார் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க உதவிட வேண்டும்.
தேர்ச்சி பெறாத மாணவர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம். தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டு வருவதும் தகுந்த ஆலோசனை மட்டுமின்றி அடுத்து என்ன செய்யலாம் என்ற வழி காட்டுதலையும் வழங்க உள்ளோம்.
இந்த ஆலோசனைகளை பெற 104, 1100 எண்களை தொடர்பு கொள்ளலாம். நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பு படிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் தங்கள் பிள்ளைகளை திட்டுவது, கடிந்து கொள்வதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கடிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதலமைச்சர் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். குடியரசுத்தலைவரும், உள்துறை அமைச்சகமும் முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதற்காக மத்திய அரசின் கருத்துக்களை கேட்பார்கள்.
நீட் தேர்வை அதிக மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பதால் அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வேறு வழியில்லாமல் தான் நீட் தேர்வை எழுதுகின்றனர்” எனக் கூறினார்.