தில்லானா மோகனாம்பாள்: கலைமகனின் கர்வத்தைக் கரைத்த காதலி!

தமிழ் திரையின் வெற்றித் தடங்கள் தொடர் –

என்றென்றைக்கும் பசுமையானதாக ஒரு திரைப்படத்தை ஆக்க சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சிரத்தையாக முயற்சிக்கலாம்; ஆனால், அது கைகூடுமா இல்லையா என்பதை காலம் மட்டுமே முடிவு செய்யும்.

அப்படிப்பட்ட படங்கள் காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் என்று குறிப்பிட்ட எல்லைக்குள் சுழன்றாடக் கூடியதாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.

வேறு ரசங்களும் அதில் இடம்பெறலாம் அல்லது மனிதம் சார்ந்த பல உணர்வுகளின் கலவையாகவும் கூட பொங்கிப் பிரவகிக்கலாம்.

அதனைக் காணும்போது பார்வையாளர்கள் தன்னிலை மறக்க வேண்டுமென்பதே அப்படிப்பட்ட படைப்புகளுக்கான ஆகப்பெரும் தகுதி.

அந்த வரிசையில் தமிழ் திரையுலகம் தந்த பசுமைச் சித்திரங்களில் ஒன்று ‘தில்லானா மோகனாம்பாள்’.

இசைக்கலைஞர்களின் வாழ்வு குறித்தோ, அவர்களின் கலாசாரம் குறித்தோ, சாதாரண மனிதர்களுக்கும் அவர்களுக்குமான தினசரிச் செயல்பாடுகளில் இருந்த வித்தியாசம் குறித்தோ, கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியத்தின் அடிப்படை குறித்தோ இப்படம் விலாவாரியாகப் பேசுவதில்லை.

மாறாக, வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரு வேறு கலைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அளவில்லாக் காதலையும் அதற்கேற்றவாறு சூழலும் மனிதர்களும் உதவுவதையும் சொல்கிறது.

கூடவே, பாரம்பரியக் கலைகளையும் கலைஞர்களையும் இச்சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதையும் உடைத்துப் பேசுகிறது.

இன்றளவும் கலைஞர்களை கீழாக நோக்கும் பார்வை மீந்திருப்பதும் தில்லானா மோகனாம்பாள் இப்போதும் கொண்டாடப்படுவதும் விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட முரண்!

கலை வழி முகிழ்த்த காதல்!

சிக்கல் எனும் ஊரைச் சேர்ந்த நாதசுவர கலைஞரான சண்முக சுந்தரம் (சிவாஜி கணேசன்), தனது இசையால் தஞ்சாவூர் வட்டாரத்தையே ஆட்டுவித்து வருகிறார். அவருக்கு இணையான புகழுடன் திகழ்கிறார் பரதநாட்டியக் கலைஞரான மோகனாம்பாள் (பத்மினி).

மதுரை அழகர்கோயில் திருவிழாவின்போது சண்முக சுந்தரத்தின் இசையைக் கேட்ட மாத்திரத்தில் மனதைப் பறி கொடுக்கிறார் மோகனா.

வான வேடிக்கை சத்தம் கேட்டு மக்கள் கூட்டம் சிதற, பாதியிலேயே கச்சேரியில் இருந்து கிளம்புகிறார் சண்முகசுந்தரம்.

அது மட்டுமல்லாமல், தன்னிடம் நட்பு பாராட்ட வரும் மோகனா குழுவினரிடமும் அந்த கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

அந்த கோபம் தன் மீதான மோகத்தை எதுவும் செய்யாது என்று சில மணி நேரத்திலேயே உணர்கிறார் மோகனா.

நடனத்தை திருட்டுத்தனமாக சண்முக சுந்தரம் காண்பதையும் பார்த்துவிடுகிறார். அதன்பிறகு ரயில் நிலையத்தில் சந்திக்கும்போது, இருவருக்குமான காதல் பலப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் சென்று மோகனாவைக் காணச் செல்கிறார் சண்முக சுந்தரம். அங்கோ, மோகனாவின் வீட்டு வாசலில் வைத்தி (நாகேஷ்) என்பவரோடு சிங்கபுரம் மைனர் (பாலாஜி) இருப்பதைக் காண்கிறார்.

கலையையும் கலைஞர்களையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்றெண்ணுபவர்கள் மோகனாவைத் தேடி வந்திருப்பதை அறிந்ததும், சண்முக சுந்தரத்தின் நெஞ்சில் சந்தேக நச்சு பரவுகிறது.

மொட்டுப் பருவத்திலேயே தன் காதல் கருகியதாக எண்ணி மனதுக்குள் குமைகிறார்.

ஜில்ஜில் ரமாமணி (மனோரமா) நடனம் நடக்குமிடத்திற்குச் செல்கிறார். அந்த பெண்மணிக்கோ சண்முக சுந்தரம் மீது அளப்பரிய மரியாதை.

சில நாட்கள் அங்கேயே சண்முக சுந்தரம் தங்க, இவர்களது உறவுக்கு தப்பான அர்த்தம் சிலரால் கற்பிக்கப்பட, உண்மையை அறிய நேரில் வருகிறார் மோகனா.

வந்த இடத்தில், ரமாமணியின் அப்பழுக்கற்ற மனதையும் சண்முக சுந்தரம் தன் மீது கொண்டுள்ள பெருங்காதலையும் உணர்கிறார்.

அவரைத் தம் வழிக்கு கொண்டுவர, ’தன் நடனத்திற்கு ஏற்ப தில்லானா வாசிக்க இயலுமா’ என்று சீண்டுகிறார். ஆத்திரப்படும் சண்முக சுந்தரம் அச்சவாலுக்கு சம்மதிக்கிறார்.

அதன்பிறகாவது மோகனாவின் உண்மையான காதலை சண்முக சுந்தரம் உணர்ந்தாரா, சிங்கபுரம் மைனர் போன்று வேறு எவரேனும் இவர்களது காதலுக்கு குறுக்கே வந்தார்களா என்பதை அறிய ‘தில்லானா மோகனாம்பாளை’ நீங்கள் முழுதாகக் கண்டு ரசிக்க வேண்டும்.

சண்முக சுந்தரம் – மோகனாம்பாள் எனும் இரு தனிநபர்களிடையே மலர்ந்த காதல் என்றாலும், அது கலைகள் வழியே முகிழ்த்ததாகவே கருத வேண்டும்.

அதற்கேற்ப, ஒருவர் மற்றொருவரின் கலைத்திறமை மீது வைத்திருக்கும் மாண்பே திரைக்கதையில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

சரியாகச் சொன்னால், சண்முக சுந்தரத்தின் அதீத திறமையோடு ஒட்டிக் கொண்டிருக்கும் முன்கோபத்தை உணர்ந்ததாலேயே தன் மீது அவர் கொள்ளும் சந்தேகத்தையும் ‘குழந்தைத்தனம்’ என்பதுபோல சட்டென்று புறந்தள்ளுகிறார் மோகனா.

ஆண்மைக்கு அடிமையாக இருக்கவே பெண்கள் விரும்புவதாக திரையில் காட்டப்பட்ட காலத்தில், உண்மையிலேயே இது அரிதான விஷயம்.

இரண்டு டஜன் முகங்கள்!

இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரையில் நடுநாயகமாக இருக்கிறார் என்றால், அவர் அருகே ஏவிஎம் ராஜன், டி.எஸ்.பாலையா, கே.சாரங்கபாணி முதலானோர் அமர்ந்திருப்பார்கள்.

ஒவ்வொருவரும் தமது பாத்திரங்களுக்கான நடிப்பைத் தந்து கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக நாதசுரம் போலவே இருக்கும் ‘ஒத்து’ எனும் வாத்தியத்தை ஏ.கருணாநிதி வாசித்தவாறு இருப்பார். அது ஒரே சுருதியில் ஒலிக்கும். அதனால், அவரது முகபாவனை ஒரேமாதிரியாக பெரும்பாலான காட்சிகளில் இருக்கும்.

தவில் வித்வான்களாக வரும் டி.எஸ்.பாலையாவும் கே.சாரங்கபாணியும் இடம் வலமாக அமர்ந்து மாறி மாறி ஓசை எழுப்புபவர்களாக தோற்றமளிப்பார்கள்.

இருவருமே குண்டான உடல்வாகுடையவர்கள்; அதற்கேற்றவாறு வியர்த்து வழியும் நிலையிலும் கீழுதட்டையும் பற்களையும் கடித்தவாறே உயிரைக் கொடுத்து தாளமிடும் பாங்கை வெளிப்படுத்துவார்கள்.

முதன்மையான பாத்திரமாக இடம்பெறும் சிவாஜி ஒருபக்கம் பத்து விரல்களைக் கொண்டு நாதசுரத்தை இசைப்பது போல நடித்தால், அவருக்கு பக்கத்திலேயே இன்னொரு நாதசுரத்தை வாசிக்கும் ஏவிஎம் ராஜன் தொடக்கத்திலும் முடிவிலும் மட்டும் அவருடன் இணைவார்.

          

தவிலின் தாளத்திற்கேற்ப தொடையைத் தரையில் தட்டி, எங்கு தன் இசைக்கான இடம் வருகிறதோ அதுவரை காத்திருப்பார்.

அதன்பின் சிவாஜியின் வாசிப்போடு இணைந்துகொள்வார். அவர் ஏற்ற தங்கரத்தினம் பாத்திரத்தை எந்த வகையில் சிறப்பிக்க முடியும் என்பதனை இவ்விடத்தில் உணரலாம்.

இன்னொரு பக்கம் பத்மினியின் நாட்டியக் குழுவில் உள்ள தங்கவேலுவும் டி.ஆர்.ராமச்சந்திரனும் நட்டுவாங்கம் வாசிக்கும் பாங்கை அப்படியே திரையில் பிரதிபலித்திருப்பார்கள்.

பத்மினி ஆடுவதற்கேற்ப குரல் கொடுப்பவரைக் காட்டாமல் விட்டிருப்பதை கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

இவை அனைத்துமே மேடையில் அமைந்த காட்சிகள் மட்டுமே. சாதாரண நேரங்களில், பயணங்களில், வீட்டில், இதர கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் இடங்களில், விருந்தினராகச் செல்லும் இடங்களில் கலைஞர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதை இதில் வாழ்ந்து காட்டியிருப்பார்கள் இக்கலைஞர்கள்.

சண்முக சுந்தரம் உள்ளிட்ட கலைஞர்களின் உதடுகள் சிவந்திருப்பதைப் பெரும்பாலான காட்சிகளில் காண முடியும்.

இசைக்கலைஞர்களில் பெரும்பாலானோர் வெற்றிலை பாக்கு சுவைக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பதை அது புரிய வைக்கும்.

ரயிலில் இரு குழுக்களும் சேர்ந்து பயணிக்கும் காட்சியில் டி.எஸ்.பாலையாவின் நடிப்பு இப்போதிருக்கும் தலைமுறையையும் சிரிக்க வைக்கும்.

முதன்முறையாக மனோரமாவை பார்த்த மாத்திரத்தில் பாலையா மூக்கை உறிஞ்சி வாசம் பிடிப்பதெல்லாம் நாம் பார்த்த ஏதோ ஒரு பெண் பித்தரை நினைவூட்டும்.

அவரை நோக்கி, ‘ஏண்ணே நீங்க வேற’ என்று சிவாஜி அலுத்துக் கொள்ளுமிடம் ‘அடடா’ என்றிருக்கும். சாரங்கபாணியோ ‘இந்த வயசுல ஏன் இந்த போக்கு’ என்பது போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்.

இப்படி ஒரே பிரேமில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பாவனைகளை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

பணத்தை பெரிதாக நினைக்கும் பெண்களாக சி.கே.சரஸ்வதி, எம்.சரோஜா படம் முழுக்க வர, அதற்கு எதிரான மனநிலை கொண்ட ’கருப்பாயி’ எனும் பாத்திரத்தில் நடித்திருப்பார் மனோரமா.

’அடி ஆத்தீ..’ என்று அடித்தொண்டையில் அவர் உச்சரிப்பது நமக்குள் சிரிப்பை மட்டுமல்ல நெகிழ்வையும் கூட ஊட்டுகிறது. அதுதான் அவரது அபாரமான நடிப்பின் பலம்.

இப்படத்தில் மனோரமாவுக்கும் சிவாஜிக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் வெகுளித்தனத்திற்கு மதிப்பளிப்பவராக இருக்க வேண்டும்.

மைனராக வரும் பாலாஜி, மதன்பூர் மகாராஜாவாக வரும் நம்பியார், நாகலிங்கமாக நடித்த ஈ.ஆர்.சகாதேவன் எல்லாம் வில்லத்தனத்தை வெளிக்காட்டினார்கள் என்றால், அவர்களை எல்லாம் ஒருபடி ‘அலட்சியமாக’ தாண்டியிருப்பார் வைத்தியாகத் தோன்றும் நாகேஷ்.

’ஒட்டுண்ணி’யாக இருந்துகொண்டே இரண்டகம் பண்ணும் அவரது பாத்திரத்தை இன்னொருவரால் நிச்சயம் ‘காப்பி’ அடிக்க முடியாது.

எஸ்.வி.சகஸ்ரநாமம், நாகையா போன்றவர்களுக்குப் பெரிய வேடமில்லை என்றாலும் கூட, அவர்களும் இதில் ஒருபகுதியாக வந்திருப்பது ஆச்சர்யம்.

சிவாஜி உடனான காதல் காட்சிகளில் பத்மினியின் நடிப்பு மனதைக் கவரும் வகையில் இருந்தாலும், அவர் நடனமாடும் காட்சிகளை ரசிக்க கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.

தலைமுறை இடைவெளி கூட அதற்கு காரணமாக இருக்கலாம். இப்படத்தில் நடிக்கும்போது பத்மினியின் வயது சுமார் 36 என்று சொல்லப்படுகிறது.

அந்த வயதில் அவர் நளினமாகத் தோன்றாதது ஆச்சர்யமல்ல; ஆனால், அவர் சிருங்காரத்தை அபிநயிக்கும் போதெல்லாம் அதீதமாகப் படுவது நடனக் காட்சிகளைக் காண இடையூறாக இருக்கிறது.

அன்றைய காலகட்டத்தில் இதெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை என்பதனை இதன் மாபெரும் வெற்றியில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பாலாஜியின் மனைவியாக நடித்த உதயசந்திரிகா, நர்ஸ் ஆக வந்த பானுமதி என்று ஒரு காட்சியில் தோன்றும் நடிகைகளுக்கு கூட ‘தில்லானா மோகனாம்பாள்’ இடம் தந்திருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட முகங்களைத் திரையில் பார்க்கும்போது கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் அதனால் உருவான முரண்களுக்கும் அதன்பின் விளையும் தீர்வுகளுக்கும் மட்டுமே திரைக்கதை முக்கியத்துவம் அளித்திருப்பதை உணர முடியும்.

அழகியல் ஆராதனை!

சாதாரண மக்களை மகிழ்விக்கும் கலைகளை கையாண்டவர்கள், ஒருகாலத்தில் தங்கள் மீது அதீத வெளிச்சம் விழவே விரும்பினார்கள். அதனால், அவர்களது ஒப்பனையும் அதீதமாகவே இருக்கும்.

இன்னொரு பக்கம் இவர்களை நிகழ்ச்சி நடத்துமாறு அழைக்கும் செல்வந்தர்களும் கூட ‘எளிமை என்ன விலை’ என்றிருப்பதும் கூட திரையில் சட்டென்று தெரிகிறது.

இதனாலேயே, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் மூத்த ஒப்பனைக் கலைஞர் ரங்கசாமி உட்பட பத்து பேர் பணியாற்றியிருப்பது ஆச்சர்யம் தரவில்லை.

1950களில் புழக்கத்தில் இருந்த நாடக கொட்டகைகள், கோயிலில் நடனம், இசை நிகழ்ச்சிகள் நடக்குமிடம், நாகப்பட்டினம் தியேட்டர், திருவாரூர் கோயில் என்று சில இடங்கள் மட்டும் கலை இயக்குனர் கங்காவின் குழுவினரால் ‘செட்’களாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றில் மதன்பூர் மகாராஜாவின் மாளிகை, சிங்கபுரம் மைனரின் பங்களா போன்றவை மேடை நாடகத்திற்காக அமைக்கப்பட்டவை போன்று தோற்றம் தருகின்றன.

வீடு, மருத்துவமனை, அரண்மனை என்று எல்லாமே செட்களாக இருந்தாலும், பத்மினி குழுவினரை ரவுடிகள் விரட்டும் காட்சி மட்டும் நாட்டார் தெய்வங்களுக்கான கோயில் ஒன்றில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

நடிப்புக் கலைஞர்களுக்கே அதிக முக்கியத்துவம் தந்ததால், களம் குறித்து இயக்குனர் ஏ.பி.நாகராஜன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேநேரத்தில், எல்லா முகங்களும் திரையில் தோன்றும்போது அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறது கே.எஸ்.பிரசாத்தின் ஒளிப்பதிவு.

வெவ்வேறு கோணங்களில் அமைந்த கண்ணாடியில் விதவிதமாகப் பிம்பம் தெரிய, தன் அழகைக் காட்டியவாறு பத்மினி அறிமுகமாகும் காட்சி ஒரு உதாரணம்.

அதனை ஒப்புக்கொள்ளாதவர்கள், ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ பாடலில் பத்மினியின் குளோசப்களை பார்த்தால் அனிச்சையாக ‘ஆமாம்’ என்பார்கள்.

கிளைமேக்ஸுக்கு முன்பான சோகக் காட்சியில், பத்மினி அழுகையும் கூட அழகாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பாபுவும் ஏ.பி.ராமானுஜமும் கேமிராவை கையாள, உதவி ஆபரேட்டிவ் கேமிராமேன்களில் ஒருவராக இதில் பணியாற்றியிருக்கிறார் என்.கே.விஸ்வநாதன்.

ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராகவும் பின்னாட்களில் அறியப்பட்டவர்.

பிலிம் ரோல்களில் வாரியிறைக்கப்பட்ட பிம்பங்களில் இருந்து தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் பணி மிகப்பெரியது. படத்தொகுப்பாளர்கள் ராஜன் – நடராஜன் கூட்டணி மிகத்தெளிவாகவும் பொறுமையாகவும் அதனைக் கையாண்டிருக்கிறது.

ஆதலால், காட்சிகளில் மேலெழும் உணர்வு பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது.

மூன்றே பாடல்கள்!

மாபெரும் ’மியூசிகல் ஹிட்’ என்று கருதப்படும் ’தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் மூன்றே பாடல்கள்தான்.

பி.சுசீலா பாடிய ‘மறைந்திருந்து’, ‘நலந்தானா’ இரண்டுமே காட்சியின் தன்மையோடு, கதாபாத்திரங்களின் பெயர்களோடு தொடர்புடைய ராகங்களில் அமைக்கப்பட்டவை. எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய ‘பாண்டியன் நானிருக்க’ பாடல் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது.

மீதமுள்ள 5 இசைத் துணுக்குகளும் நாதசுர இசைக்கானவை. மதுரை எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்கள் குழு அவ்விசையைத் தந்திருக்கின்றனர்.

இவர்கள் நாதசுரம் இசைப்பதையும் தவிலைக் கையாள்வதையும் சிவாஜி, ஏவிஎம் ராஜன், பாலையா போன்றோர் நேரில் கண்டிருக்கின்றனர்.

சிவாஜியின் நடிப்பை பார்த்தபிறகு சில ரசிகர்கள் சேதுராமனிடம் ‘சிவாஜி வாசிச்ச மாதிரி வாசிக்க மாட்டேங்கிறீங்களே’ என்று வருத்தப்பட்டனராம்.

சிவாஜியின் அபார நடிப்பிற்கான பாராட்டாகவே அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படத்தின் தொடக்கத்தில் வரும் நாதசுர இசை, 1990களின் இறுதிவரை தமிழ்நாட்டில் இருந்த பெரும்பாலான டூரிங் டாக்கீஸ்களில் இரவுக் காட்சிக்கான அழைப்பொலியாக பயன்படுத்தப்பட்டது.

’தில்லானா’ இசைக்கப்படும் துணுக்கு போன்றவை கர்நாடக இசை ரசிகர்களைக் கவருமென்றால், நாதசுர இசையிலேயே மேற்கத்திய நடனத்திற்கான வாய்ப்பை வழங்கும் இடம் முதல் வரிசை ரசிகர்களையும் விசிலடிக்க வைக்கும்.

இன்றும் கோயில் உற்சவங்களில், திருமணம் உள்ளிட்ட விழாக்களில் இத்துணுக்குகள் தவறாமல் வாசிக்கப்படுவது இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனுக்கும் இத்துணுக்குகளை உருவாக்கிய முத்தையா பாகவதருக்கும் அதனை இசைத்த எம்.பி.என். சகோதரர்களுக்குமான கவுரவம்.

கொத்தமங்கலம் சுப்புவின் நேர்மை!

தமிழ் பத்திரிகைகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பேச்சுவழக்கே கதைகளில் இடம்பெறுவதாகச் சொல்லப்பட்ட காலகட்டத்தில், அதிலிருந்து விடுபடும் நோக்கில் ஜெமினி கதை இலாகாவில் இருந்த கொத்தமங்கலம் சுப்புவை ஆனந்த விகடனில் ஒரு கதை எழுதச் சொன்னார் எஸ்.எஸ்.வாசன்.

1957-58 ஆண்டுவாக்கில் ’கலைமணி’ என்ற பெயரில் சுப்பு எழுதிய கதையே ‘தில்லானா மோகனாம்பாள்’. ஜெமினி பேனரிலேயே இக்கதையைப் படமாக்கும் எண்ணத்தையே கொண்டிருந்தார் வாசன்.

அதனால், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அணுகியபோது ‘தர முடியாது’ என்று மறுத்துவிட்டாராம். மீண்டும் மீண்டும் அவர் கேட்க, வேறு வழியில்லாமல் கதை உரிமையைத் தந்தாராம்.

அதற்காக நாகராஜன் தந்த தொகையில் பாதியை கொத்தமங்கலம் சுப்புவுக்கு உடனடியாக அனுப்பியிருக்கிறார்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு கொத்தமங்கலம் சுப்புவிடம் ஒரு பெருந்தொகையை நாகராஜன் கொடுத்தபோது, ‘ஏற்கனவே வாசன் எனக்கான பங்கை அனுப்பிவிட்டார்’ என்று பதிலளித்தாராம் சுப்பு.

இத்தனைக்கும், அந்த நேரத்தில் அவர் வாசனோடு சுமூக உறவில் இல்லை. கண்டிப்பாக இது இயக்குனர் ஏ.பி.என்னுக்கும் தெரிந்திருக்கும்.

இவையனைத்தையும் கேள்விப்படும்போது, சம்பந்தப்பட்ட மூவர் மீதும் மரியாதை விஸ்வரூபமெடுக்கிறது.

மறக்கமுடியாத வைத்தி!

மிஸ் மாலினி உட்பட சில படங்களில் தலைகாட்டிய கொத்தமங்கலம் சுப்பு, ஆனந்தவிகடனில் இக்கதையை எழுதியபோது வைத்தி பாத்திரத்தை தான் நடிப்பதாகப் பாவித்து எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

அதனாலேயே, நாகேஷின் நடிப்பு பெரும்பாலான மக்களால் சிலாக்கிக்கப்பட்டபோதும் இப்படத்தை சுப்பு ஒருமுறை கூட பார்க்கவில்லையாம்.

ஒருவருக்கான வரம் இன்னொருவருக்கு சாபமாகிப் போவது கலைஞர்கள் மட்டுமே எதிர்கொள்ளக்கூடிய ஒன்று.

பின்னாட்களில் ’கண்ணாத்தாள்’ படத்தில் வடிவேலு நடித்த சூனாபானா, ‘ரஜினி முருகன்’னில் சமுத்திரக்கனி ஏற்ற மூக்கன் உள்ளிட்ட பல பாத்திரங்களில் சவடால் வைத்தியின் சாயலை நம்மால் பார்க்க முடிவது அது காலத்தால் அழியாதது என்பதை உணர்த்துகிறது.

ஏ.பி.என். தந்த ரத்தினம்!

ஒரு இயக்குனராக சிவாஜியோடு 12 படங்களில் பணியாற்றியிருக்கிறார் ஏ.பி.நாகராஜன். ‘வடிவுக்கு வளைகாப்பு’ முதல் ’ராஜராஜ சோழன்’ வரை.

தொடரும் இவ்வரிசையில் ஈடிணையில்லாத பெருமையோடு இன்றளவும் கொண்டாடப்படுவது ‘தில்லானா மோகனாம்பாள்’தான்.

இன்றிருப்பது போல ஒரு திரைப்படம் உருவாகும் விதம் குறித்து விளக்கும் வகையில் புகைப்படங்கள் எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ அக்காலத்தில் இருக்கவில்லை.

ஆனால், ‘தில்லானா மோகனாம்பாள்’ படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று பத்மினி, சிவாஜி, பாலையா உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் காட்சியொன்றை தனது ஆவணப்படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார் பிரெஞ்சு இயக்குனர் லூயில் மாலே.  

363 நிமிடங்கள் ஓடும் ‘ஃபேண்டம் இந்தியா’ எனும் இந்த ஆவணப்படம் அக்காலத்தில் பிரான்சு தொலைக்காட்சி மற்றும் லண்டனில் இருந்த பிபிசியில் ஒளிபரப்பானது.

இந்த ஆவணப்படத்தில் தமிழ்நாடு குறித்த தகவல்களும் உண்டு. சென்னை சாலைகளில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஹேமாமாலினி கட்அவுட்களுடன் ’தில்லானா மோகனாம்பாள்’ படப்பிடிப்புத்தளத்தையும் இது காட்டுகிறது.

இந்தியாவில் திரைப்படக் கலைஞர்கள் உயரம் குறைவாக, பருமனாக இருப்பதாக இதில் குறிப்பிடுகிறார் லூயிஸ். சிவப்புதான் அழகு எனும் நோக்கில் அதீத அலங்காரத்துடன் தோன்றுவதாகவும் சொல்கிறார்.

என்னதான் அப்போதிருந்த தமிழ் திரையுலகப் போக்கை விமர்சித்திருந்தாலும், அக்காலகட்டத்தில் இயக்குனர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

வெள்ளுடையில் தோற்றமளிக்கும் ஏ.பி.என், தான் எடுப்பது இசைக்கோர்வை தொடர்பான காட்சி என்றபோதும் அக்கீர்த்தனைக்கான அசல் வரிகளையும் ஆலாபனைகளையும் ஒரு காகித்த்தில் எழுதி வைத்துக்கொண்டு அதற்கேற்ப நடிகர்களிடம் எவ்விதமான நடிப்பு தேவை என்று விளக்குகிறார்.

இவற்றையெல்லாம் விட, முகம் தெரியா இயக்குனர் ஒருவரை தனது படப்பிடிப்புத் தளத்திற்குள் அனுமதித்திருக்கிறார். இதுவே, தம் படைப்பு மீதும் தனது ஆக்கத்தின் மீதும் அவர் கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கையைக் காட்டுகிறது.

திரையில் ஒரு கொண்டாட்டம்!

கலைகளைக் கொண்டாடும் ஒரு சமூகம், அதனை நிகழ்த்தும் கலைஞர்களைக் கொண்டாடுவதில்லை.

‘தில்லானா’ வாசிக்கும் சண்முக சுந்தரத்தின் அபார திறமையையும் அதற்கேற்ற நடனத்தை வழங்கும் மோகனாம்பாளின் நம்பிக்கையையும் மட்டுமல்லாமல், அவர்களை நிகழ்ச்சி நடத்த அழைப்பவர்களின் முகங்களையும் இதில் காட்டுகிறார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.

பெண் கலைஞர்களின் திறமையை விட, அவர்களது அழகுக்கே செல்வந்தர்களில் சிலர் முக்கியத்துவம் தந்ததையும் அம்பலப்படுத்துகிறார்.

அதீத திறன்மிக்க நாதசுர கலைஞரான சண்முக சுந்தரம், எளிதில் கோபப்படுபவராக, கற்பு எனும் வாதம் சார்ந்து காதலியை சந்தேகப்படுபவராக, தன்னை ஆராதிக்கும் மேரியின் சேவையை தவறாக கணிப்பவராக இக்கதையில் காட்டப்படுகிறார்.

இது, சாதாரண மனிதர்கள் தங்களில் ஒருவராக அவரைக் கருத இடம் தருகிறது. இவ்வளவு ஏன், ரயிலில் பயணிக்கும் காட்சியில் சிவாஜியும் பத்மினியும் வெளிப்படுத்தும் காதலில் காமம் கலந்திருப்பதை யாரால் மறுக்க முடியும்?

காதல், நகைச்சுவை மட்டுமல்லாமல் சென்டிமெண்ட், வன்மம், குயுக்தி நிறைந்த திரைக்கதை ஒரே உணர்விலேயே பார்வையாளர்கள் நிலைத்துவிடாமலிருக்கும் வேலையை செய்தது.

அபாரமான நடிப்பு, அற்புதமான இசை, எளிமையான திரைக்கதை, அதனை முன்னிறுத்தும் தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாம் ஒன்றிணைந்து திரையில் ஒரு கொண்டாட்டத்தையே உருவாக்கியது.

ஒவ்வொரு முறை காணும்போதும் இதனை அனுபவிப்பது நிச்சயம் எவராலும் விளக்க முடியாத ஒன்று.

இதே காரணத்தால், பின்னாளைய கலைஞர்களுக்கு இப்படம் ஒரு முன்மாதிரியாகிப் போனது. 

கிட்டத்தட்ட ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் கிராமிய வடிவமாக ‘கரகாட்டக்காரன்’ படத்தைத் தந்தார் கங்கை அமரன்.

2000களில் சுரேஷ்கிருஷ்ணாவின் ‘சங்கமம்’, வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ கூட இதே பாணியில் அமைந்தவைதான்.

போலவே, இப்படத்தின் முக்கியக் காட்சிகளில் சிவாஜி வெளிப்படுத்திய நடிப்பும் கூட தொண்ணூறுகளில் வடிவேலு, விவேக் போன்றவர்களால் நகைச்சுவைக் காட்சிகளில் பிரதியெடுக்கப்பட்டது.

அவற்றிற்கும் ரசிகர்கள் ஆதரவு தந்தனர். மாபெரும் புகழை ஈட்டியவர்களை மட்டுமே ‘மிமிக்ரி’ செய்ய முடியும் என்று ஒப்புக்கொண்டால், இது போன்ற நகைச்சுவையையும் ரசிக்க முடியும்.

பழைய திரைப்படங்களைக் காணும் ரசனை ஒருவருக்கு இருந்தால், கண்டிப்பாக அவரது விருப்பங்களில் ஒன்றாக ‘தில்லானா மோகனாம்பாளு’ம் இருக்கும்.

அதற்கும் முந்தைய தலைமுறைக்கு இதன் பாடல்களும் நாதசுர துணுக்குகளும் வசனங்களும் ஒலிச்சித்திரமாக என்றும் மனதில் ஓடும்.

இன்றைய தலைமுறைக்கு இத்திரைப்படம் வினோதமாகத் தெரிய, தமது முன்னோர்களின் ரசனை மீதும் ஒரு தலைமுறையின் வாழ்க்கை மீதும் அவர்கள் கொண்டிருக்கும் கீழான பார்வை மட்டுமே காரணமாக இருக்க முடியும்!

*********

படத்தின் பெயர்: தில்லானா மோகனாம்பாள்,
கதை: கொத்தமங்கலம் சுப்பு,
இசை: கே.வி.மகாதேவன்,
பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்,
நாதசுர இசை: எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என்.பொன்னுசாமி,
எடிட்டிங்: ராஜன் – டி.ஆர்.நடராஜன்,
லேபரட்டரி: ஜெமினி ஸ்டூடியோஸ்,
கலை: கங்கா,


ஆடை அலங்காரம்: ஜி.கே.ராஜமாணிக்கம், பி.ராமகிருஷ்ணன், தம்பு,
ஒப்பனை: ரங்கசாமி, தனகோடி, மாணிக்கம், கிருஷ்ணராஜ், நாராயணசாமி, திருநாவுக்கரசு, பத்மநாபன், ராமு, தட்சிணாமூர்த்தி, சேதுபதி,
நடன அமைப்பு: பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்,
ஒளிப்பதிவு இயக்குனர்: கே.எஸ்.பிரசாத்,
ஒலிப்பதிவு இயக்குனர்: டி.எஸ்.ரங்கசாமி,
ஸ்டூடியோ: சாரதா,


தயாரிப்பு: ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்,
திரைக்கதை வசனம் இயக்கம்: ஏ.பி.நாகராஜன்.

நடிப்பு: சிவாஜி கணேசன், பத்மினி, டி.எஸ்.பாலையா, கே.தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கே.சாரங்கபாணி, நாகேஷ், ஏ.கருணாநிதி, எஸ்.வி.சகஸ்ரநாமம், ஏ.வி.எம்.ராஜன், வி.நாகையா, பாலாஜி, எம்.என்.நம்பியார், சி.கே.சரஸ்வதி, மனோரமா, எம்.சரோஜா மற்றும் பலர்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment