தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி நடத்தி பெரியவர் வஉசி பற்றிய நினைவுகளை ஏற்படுத்திவரும் ஜவஹர் ஜோல்னா என்ற அரிய மனிதரைப் பற்றி பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் ஆய்வாளர் ரெங்கையா முருகன்.
செப்டம்பர் 5, 2021 அன்று ஒரு முடிவு எடுக்கிறார். தமிழகத்தில் 37 மாவட்டங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி நிகழ்த்தி மாணவர்களிடையே வ.உ.சி.யை ஞாபகப்படுத்த முடிவெடுக்கிறார்.
இவர் காரைக்குடி என்.எப்.ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வாரத்தில் ஆறு நாட்களும் பணிச்சுமை உண்டு. சனி ஞாயிறுகளில் கிடைக்கும் விடுமுறை நாட்களில் பயணம் செய்கிறார்.
தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் நேரிடையாக சென்று வ.உ.சி. குறித்த பேச்சுப் போட்டி நடத்துகிறார்.
வ.உ.சி. பிறந்த பூமியான ஓட்டப்பிடாரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனைவரையும் வஉசி பிறந்த நாளன்று சங்கமிக்க வைக்கிறார்.
வாரம் முழுமையும் பள்ளிக்காக உழைத்து வருடம் முழுவதும் கிடைத்த ஒரு விடுமுறை நாட்களில் கூட குடும்பத்தோடு இல்லாமல் தனி மனிதனாக சுழன்று சுழன்று சென்று 37 மாவட்டங்களிலும் பேச்சுப் போட்டி ஓட்டப்பிடாரத்தில் பரிசளிப்பு விழா வைத்துள்ளார்.
எல்லா மாவட்டங்களிலும் எந்த சலிப்பும் இல்லாமல் யாரையாவது எப்படியாவது அவரிடம் படித்த பழைய மாணவர்களின் உதவியோடு நிகழ்விடம், அன்றைக்கு கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான இத்யாதி செலவுகள், இவருடைய பயணச் செலவு உள்ளூர் சார்ந்த முக்கிய பிரமுகர்களை வரவழைத்து அவர்களுக்கான மரியாதை அளித்து போட்டியை ஆரம்பித்து தேர்ந்தெடுப்பர்.
ஜோல்னா ஜவஹர் என்றால் எப்போதும் தன் தோளில் ஜோல்னா பையோடு திரிவார். பெரியவர் வ.உ.சி. உருவப்படம் கொள்ளும் அளவுக்கு பையில் லாவகமாக சுமந்து செல்வார். நிகழ்ச்சி நடைபெறும் மாவட்டத்துக்கு நேராக செல்வார்.
அந்த ஊரில் மாலை ஒன்று வாங்கிக்கொள்வார். நிகழ்விடத்தில் தன் ஜோல்னா பையிலிருந்து பக்குவமாக பெரியவர் வ.உ.சி. படத்தை எடுத்துவைத்து, ஊரின் முக்கிய பிரமுகர் கொண்டு மாலை அணிவித்து போட்டியை தொடங்கவைப்பார்.
மதிய வேளைக்குள் முடித்துவிட்டு உடனடியாக ஊருக்கு சென்று வழக்கம்போல பள்ளியில் பணிகளை செவ்வனே செய்ய ஆரம்பித்துவிடுவார்.
நான் போன் செய்து கிட்டத்தட்ட இந்த ஆண்டு முழுவதும் பணிநாட்களைத் தவிர ஒரு விடுமுறை நாட்கள்கூட வீட்டில் மனைவி குழந்தைகளுடன் காலத்தை செலவழிக்காமல் இருப்பது ஏதாவது பிரச்னை ஏற்படாதா என்று யதார்த்தமாக கேட்டேன்.
அப்போதுதான் எனக்கு அதிர்ச்சி தரும் தகவலைப் பரிமாறினார். கண்கள் கலங்கிவிட்டது. “என் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வருகிறோம்.
இருந்தாலும் என் மனைவி ஒத்துழைப்பு இல்லாமல் எனக்கு இது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டி முடிந்ததும் வீட்டுக்குச் சென்று மனைவிக்கு பக்குவமாக சமைத்து கொடுக்கும் வேலையை செய்ய வேண்டியிருப்பதால் புறப்பட்டுவிடுவேன்” என்றார்.
எப்படி இதெல்லாம் சாத்தியம் உண்மையைச் சொல்லுங்கள் என்றேன். ஒரு வாத்தியார் எவ்வளவு செலவழிக்கமுடியும் என்பது நமக்கே தெரியுமல்லவா?
ஆனால் அவர் சொன்ன பதில் பெரியவர் வ.உ.சி.யின் எல்லையற்ற தியாகத்துக்கு முன்பு நாம் எல்லாம் தூசி சார். அவர் (வ.உ.சி.) என்னை முழுமையாக வழிநடத்துவார் என்று தீர்க்கமாக நம்பினேன்.
அந்தந்த மாவட்டத்தில் யார்யாரோ உதவினார்கள். என் மாணவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள்.
ஒவ்வொரு மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களிடையை வ.உ.சி.யை பேசச் சொல்லி கொண்டு சேர்த்திருக்கிறார். பெரிய அமைப்பு , நிறுவனம், அரசு செய்யவேண்டியதை தனிமனிதராக சாதித்துள்ளார்.
காந்தியத்தை சுமந்தவர்கள் ஊருக்கு ஒருவர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் வ.உ.சி.யை 150 ஆம் ஆண்டில் மாணவச்செல்வங்களுக்கு கொண்டுசேர்க்க தேவகோட்டையில் இருந்துஆண்டு முழுவதும் எந்த பிரதிபலன் இல்லாமல் உழைத்த பெரியவர் அடிப்பொடி ஜவஹர் ஜோல்னா அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.