ஒரு நாளைக்கு 70,000 குழந்தைகள் பிறப்பு!

– மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள்தொகை பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. இயற்கை வளங்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவது கடும் பாதிப்புகளை உருவாக்கும்.

குறிப்பாக, உணவு விநியோகம், சுகாதார பராமரிப்பு ஆகியவற்றில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பின்மை, வறுமை பெருகவும் இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பல கோடி இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மோசமாக பாதிக்கும் இப்பிரச்சினை ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலைக்கு சென்றுவிடும்.

எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை சுகாதார நாளாக கடைபிடிக்க வேண்டும்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணாத வரை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வாதார உரிமை, கல்விக்கான உரிமைகளை பெறுவது கேள்விக் குறியாகவே தொடரும்.

எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விதி, ஒழுங்காற்று நெறிமுறை மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க கோரி அகில பாரதிய சந்த் சமிதி பொது செயலர் தண்டி சுவாமி ஜிதேந்திரநாத் சரஸ்வதி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவுகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இதுபோன்ற பல பொது நல மனுக்கள்உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த பொது நல மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு தனது பதிலை தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

தற்போது இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியை நெருங்கியுள்ளது. இது, மொத்த உலக மக்கள் தொகையில் 17.8 சதவீதமாகும்.

ஆனால், உலகளவில் இந்தியா 2 சதவீத வேளாண் நிலங்களையும், 4 சதவீத குடிநீரை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 10,000 குழந்தைகள் மட்டுமே பிறக்கும் நிலையில், இந்தியாவில் ஒரு நாளைக்கு 70,000 குழந்தைகள் பிறப்பதாக அந்த பொது நல மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment