நடிப்பில் இமயம் தொட்ட கமல்!

மகாநதி படம் வெளிவந்தபோது கல்கியில் (30.01.1994) வெளியான திரைவிமர்சனம்

உன்னதமான ஒரு தமிழ் சினிமா பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. மகாநதி படம் இந்த ஆண்டில் (1994-ல்) கமலின் கான்ட்ரிப்யூஷன் மிக முக்கியமானது.

முதற்கண் வாழ்த்தி விடலாம். ஆரம்பத்தில் மட்டுமல்ல; வருஷக் கடைசியிலும் கிடைக்கப் போகிற அவார்டுகளுக்கும் சேர்த்து.

முதலில் கதையைப் பார்க்கலாம். இத்தனை சோகம் ஒரு சினிமாவில் இருந்தால் யாரும் எழுந்து வந்து விடுவார்கள். கட்டிப் போட்டிருப்பது கமலின் நடிப்பு. கிராமத்துப் பெரிய மனுஷர் – வீடு, நிலத்தை விற்று சீட்டுக் கம்பெனி ஆரம்பிக்கிறார்.

வில்லனிடம் power of Attorney எழுதிக் கொடுக்கிறார். (‘இடிப்பது’ இங்கு மட்டுமே) நிகழ்ச்சிகளின் கொடூரம் படிப்படியாய் அதிகரித்து, அவர் பெண்ணைக் கல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதியில் கொண்டு தள்ளுகிறது. பிள்ளையைக் கழைக்கூத்தாடி ஆக்குகிறது. இவரை ஜெயிலில் தள்ளுகிறது.

மேற்படி அடுக்கடுக்கான, மிகைப்படுத்தப்படாத, இயல்பாய் நேரும் சம்பவங்கள் படத்தின் மிகப் பெரிய பலம்.

இன்னொரு விஷயம், அந்த சிறைச்சாலை நிஜங்கள். (சென்ஸாருக்குச் சீர்திருத்த உத்வேகம் வந்து விட்டதா?) வார்டனின் லீலைகள். காவலரின் கயமை இத்யாதி, இத்யாதி.

தூக்கத்தில் உளறும் அந்தச் சின்னப் பெண்ணுக்கு நேரும் விதி யாரையும் கலங்கச் செய்யும். மகாநதியாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும் காலம், எப்படியெல்லாம் அவளை அலைக்கழிக்கிறது?

கல்கத்தாவின் ‘அந்த’ ஏரியாவின் சந்துபொந்துகளில் புகுந்து எழுந்திருக்கும் கேமராவுக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம்.

ஸ்ரீராமின் சிஷ்யர். பாய்ந்திருப்பது முப்பத்திரண்டு அடி.

பூரணம்  விஸ்வநாதன், வெறுமனே ஷோ காட்ட வந்து போகும் சுகன்யா, ஓரிருமுறை வந்தாலும் ஒட்டிக் கொள்ளும் ராஜேஷ், மீண்டும் தன்னை நிரூபித்திருக்கும் மாஸ்ட்ரோ….. இத்தனை பேரையும் ஓரம்கட்டி இமயம் தொட்டிருக்கிறார் கமல்.

இது மகாநதி வருடம்.

-ஆர்.பி.ஆர்.

நன்றி: கல்கி. 

Comments (0)
Add Comment