கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கோபிகா கோவிந்த் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவிலிருந்தபோது அவருக்கு வயது 12.
கரிம்பாலா பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, அத்தகைய கனவை வளர்ப்பதற்குக்கூட ஒருவித துணிச்சல் தேவையாக இருந்தது.
ஆனாலும், கோபிகா கனவைத் துரத்திக்கொண்டே இருந்தார். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு 24 வயதான அவர், விமானப் பணிப்பெண்ணாக உருவாகியுள்ளார்.
மாநிலத்தின் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். விரைவில், அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையில் இணையவுள்ளார்.
“என் வீட்டிற்கு மேலே ஒரு விமானம் பறப்பதைப் பார்த்து, அதில் பயணிக்க விரும்புவதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். இப்போதும், நான் ஒரு விமானத்தின் அருகே செல்லும்போது உற்சாகமாக உணர்கிறேன்” என்று நினைவு கூர்கிறார் கோபிகா.
கோவிந்தன் – விஜியின் மகளான கோபிகா, பெரும்பாலான பழங்குடியினப் பெண்களைப் போலவே ஒப்பீட்டளவில் வறுமையான குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் கொண்டிருந்தார்.
“வானத்தைத் தொடவேண்டும், விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவை நான் வளர்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. என் பெற்றோருக்குக்கூடத் தெரியாது.
விமானப் பணிப்பெண் பயிற்சி மிகவும் விலை உயர்ந்தது. என் குடும்பத்தால் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை” என்று நினைவுகூர்கிறார்.
பின்னர், பழங்குடிப் பெண்களின் கல்விக்கான அரசின் திட்டம் குறித்து அவருக்குத் தெரியவந்தது.
வயநாட்டில் உள்ள ட்ரீம் ஸ்கை ஏவியேஷன் டிரெய்னிங் அகாடமியில் அயாட்டா வாடிக்கையாளர் சேவையில் டிப்ளமோ படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பைப் பற்றித் தெரிந்துகொண்டார்.
அப்போது கோபிகா, கண்ணூரில் உள்ள எஸ்என் கல்லூரியில் எம்எஸ்சி வேதியியல் படித்துக்கொண்டிருந்தார்.
“இதுபோன்ற திட்டங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என் கல்விக் கட்டணம் ஒரு லட்சம் ரூபாயை மாநில அரசு செலுத்தியது. நான் எதுவும் செலுத்த வேண்டியதில்லை” என்றார்.
தன் வெற்றிக்காக அரசையும் அகாடமியின் ஆசிரியர்களையும் பாராட்டினார்.
பா. மகிழ்மதி