தரமான கல்வியே தற்போதைய தேவை!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர்:

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. பல் துறைகளில் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் கல்வியின் தேவை குறித்து கூடுதலாக சிந்திக்க வேண்டியுள்ளது.

தரமான கல்வி என்பதன் பார்வை காலத்துக்கேற்ப மாற்றம் பெற்றுவருவது இயல்பு. அதன் அடிப்படையில் இன்றைய நாட்களில் கல்வி எத்தகையதாக புதிய சிந்தனைகளை உள்ளடக்கியதாக பார்க்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது.

பாரம்பரியக் கல்வியின் பாதை குறித்து நாம் அறிவோம். அதன் நீட்சியாக, கல்வியின் வளர்ச்சி 21-ம் நூற்றாண்டின் தற்போதைய காலகட்டத்தில் எத்தகைய பரிணாம வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதையும் அறிவோம்.

தரமான கல்வியின் ஒரு முக்கியக் கூறு ஜனநாயகப் பூர்வமான பள்ளிகளை உருவாக்க வேண்டியது.

76-வது ஆண்டு சுதந்திர நாளில் அடி எடுத்துவைத்துள்ள இச்சூழலில் ஜனநாயகப் பூர்வமான பள்ளிகள் உருவாக்கம் என்பதை மிகவும் இன்றியமையாதப் பார்வையாக எடுத்துக் கொள்ளலாம்.

கல்வியை ஜனநாயகப்படுத்துவதன் அடிப்படைக் காரணி அனைவருக்கும் சமமான கல்வியை இலவசமாக வழங்கவேண்டும். அதுவும் கட்டாயமாக்க வேண்டும் என்பது முக்கியம்.

அது தரமானதாக இருக்கவேண்டும் என்பது அதைவிட முக்கியம்.

ஆனால் இங்கு அனைவருக்கும் கல்வி என்பது என்னவாக இருக்கிறது? அதிக பணம் படைத்தோருக்கு ஒரு வகையான பள்ளி, குறைவான பண வசதி உடையவருக்கு ஒரு வகையான பள்ளி என்று தான் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதனைக் காட்டிலும் பணமே செலவழிக்க முடியாமல் வாழும் ஏழை மக்களின் குழந்தைகள் மட்டும் பயிலும் பள்ளியாக அரசுப் பள்ளிகள் பார்க்கப்படுகின்றன.

உயர்குடியினருக்கான பள்ளிகள், மத்தியத் தர வர்க்கத்திற்கான பள்ளிகள் என பிளவுபட்டு இருக்கின்றன. மேலும் தொழிலாளர், ஏழைகள் படிக்கும் பள்ளிகள் ஆகிய பாகுபாடுகளைக் கொண்ட பள்ளிகளும் அடங்கும்.

எனில், சமவாய்ப்புகள் என்பது சாத்தியமா? ஜனநாயகப் பள்ளிகள் தான் சமூக விடுதலைக்கு அழைத்துச் செல்லும் பாதைகள். ஆனால் தற்போது உண்மை நிலை என்ன என்பதை ஆய்வுக்கு உட்படுத்துதல் அவசியம்.

மிகப்பெரிய ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டதாக கல்வி பெறுதல் உருமாறியுள்ளது. அது தனியார் மயத்தை வேரூன்றி வளர்த்துள்ளது. தனியார்மயம் என்றாலே, அங்கு ஜனநாயகம் அமர இருக்கை இருக்குமா?

இப்படியாக சமமான பள்ளிகள் இங்கு கிடையாது. இருக்கும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு சமவாய்ப்புகள் கிடையாது. ஆனால் சம வாய்ப்புகள் இருப்பது போல ஒரு பாவனை வளர்ந்து வருகிறது.

தரமான கல்வியை எல்லோருக்கும் இலவசமாக வழங்கும் அரசுகள் அமையவில்லை என்பதும் ஒரு காரணம்.

உயர்குடி, மத்திய தர மக்கள் பயிலும் தனியார் பள்ளிகளிலும் சரி, அன்றாடம் காய்ச்சிகள் என தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மக்களின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளிலும் சரி ஜனநாயகப் பண்புகளும் தரமான கல்வியும் தரப்படுகிறதா? இது நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, பகுத்தறியும் சிந்தனைக்கானதாக இருக்க வேண்டும். அப்போது தானே அதை ஜனநாயகப்பூர்வமான கல்வி என்ற வரையறைக்குள் கொண்டுவரமுடியும்?

ஆனால், மாற்றாக தேர்வுக்காக பாடங்களை மட்டும் கற்பிக்கும் கல்வி முறையை தனியார் பள்ளிகள் கையில் எடுத்ததன் விளைவுகள், மொத்த சமூகத்தையும் புற்றுநோய் போல பீடித்துக் கொண்டது.

சங்கிலித் தொடர் காரணிகளாய் உற்று நோக்கினால் தரமான கல்வி கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தென்படவில்லை என்பதே எதார்த்தம். அடிமை முறைகளை வளர்த்தெடுக்கும் கல்வி முறைதான் பிரகாசமாக வானளவு வளர்ந்து நிற்கிறது.

டேஞ்சர் ஸ்கூல் என்று, அப்பணசாமி மொழிபெயர்ப்பில் உருவான ஒரு புத்தகம் உண்டு. அந்தத் தலைப்பு தான் இன்றைய சூழலில் எல்லாவகைப் பள்ளிகளுக்கும் பொருத்தமானது.

கல்வியின் தரமென்பது அடிப்படைக் கட்டமைப்பில் மட்டும் இல்லை. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உறவிலும் கண்டுபிடிக்கமுடியும்.

மாணவர்களுக்காகவே தங்களை ஒப்புக் கொடுக்கும் ஆசிரியர்கள் தரமான கல்விக்கு ஒரு மூலகாரணம்.

பள்ளிகளின் தொலைநோக்குப் பார்வையிலும் கல்வியின் தரம் உறுதிப்படுத்தப்படும்.

ஜனநாயக வகுப்பறைகள், சமூகம் உயர்வதற்கான கல்வியின் தரம். அவற்றை நோக்கி நகரும் கல்விச் சிந்தனைகளே இன்றைய காலத்தின் தேவை.

-உமா மகேஸ்வரி

Comments (0)
Add Comment