எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!

‘நாம் இருவர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடக மேதை பம்மல் சம்பந்த முதலியாரின் ஃபேன்டஸி நாடகமான ‘வேதாள உலக’ த்தை படமாக்கினார் ஏவி.எம்.

திரைக்கு ஏற்ப அதற்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை ப.நீலகண்டனிடமே அளித்தார். அதுவும் வெற்றிப்படமாக, அடுத்து வைஜெயந்தி மாலாவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ‘வாழ்க்கை’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டே இணை இயக்குநராகத் தொடர்ந்தார் நீலகண்டன்.

இதன்பின்னர், தனது மாணவன், டி.ஆர்.ராமசாமிக்காக ‘ஓர் இரவு’ நாடகத்துக்கு, அதிரடியாக ஒரே இரவில் திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்தார் அண்ணா.

அதை ஏவி.எம் திரைப்படமாக்கியபோது ப.நீலகண்டனிடம் இயக்குநர் பொறுப்பை வழங்கினார் ஏவி.மெய்யப்ப செட்டியார்.

‘ஓர் இரவு’ படத்தின் மூலம் இயக்குநரான நீலகண்டனுக்கு ஒரு படத்தின் தயாரிப்பு நிர்வாகம், திரைக்கதை ஆக்கம், ஸ்டுடியோ சிஸ்டம் ஆகியவற்றில் நல்ல அனுபவம் கிடைத்தது. அதற்கான சிறந்த திரைப்பல்கலைக் கழகமாக ஏவி.எம் ஸ்டுடியோ அமைந்துபோனது.

தொடக்கத்தில் ‘முதல் தேதி’ போன்ற சிறந்த குடும்பக் கதைகளையே இயக்கினார் நீலகண்டன். எம்.ஜி.ஆரை வைத்து முதன் முதலாக அவர் இயக்கிய ‘சக்கரவர்த்தி திருமகள்’ (1957) அவரது திரை வாழ்க்கையையும் திரைமொழியையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.

உச்ச நட்சத்திரமாக வளர்ந்துவந்த எம்.ஜி.ஆருக்கு அந்தப் படம் மாபெரும் வெற்றியாக அமைந்தது. இப்படத்தில் எம்.ஜி.ஆரை நன்றாக நடனமாடத் தெரிந்த நடிகராகவும் காண்பித்தார் இயக்குநர் நீலகண்டன்.

முதல் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட நட்பு, அவரை வைத்து 17 படங்களை இயக்கும் அளவுக்குப் பிரிக்கமுடியாத பிணைப்புடன் இறுதிவரைத் தொடர்ந்தது.

எம்ஜி.ஆர் தனது திரைவாழ்வின் உச்சத்தில் ப.நீலகண்டன் இயக்கத்தில் ‘காவல்காரன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

எம்.ஜி.ஆரை வைத்து நீலகண்டன் இயக்கிய அனைத்தும் வெற்றிப்படங்களாக அமைந்தபோதும் ‘திருடாதே’ இவருக்குப் பெரும் புகழைக் கொண்டுவந்து சேர்த்தது.

நாயக பிம்பத்தின் பிரம்மா!

எம்.ஜி.ஆர். படங்களுக்கான ஹீரோயிசம் நிரம்பிய திரைமொழியை உருவாக்குவதில் நீலகண்டனின் திரைக்கதைகள் கச்சிதமாகப் பொருந்தின.

‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா… நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா..’ போன்ற கதாநாயகனுக்கான போற்றிப் பாடல்கள், நாயகனை அறிமுகப்படுத்தும் பாடல்களாக உருப்பெற்றது நீலகண்டனின் திரைமொழி வழியாகத்தான்.

‘வாய்மையே வெல்லும்’, ‘நல்லவன் வாழ்வான்’ எனும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டங்களை முன்னிறுத்தும் ஃபார்முலா கதைகளை நாயக பிம்பத்துக்கான சட்டகமாகக் கட்டமைத்த பிரம்மா நீலகண்டன்.

இவர் இயக்கிய ‘மாட்டுக்கார வேலன்’ படத்தை இரட்டை வேட கதாநாயகன் வழிபாட்டின் கச்சிதமான ஹீரோயிசப் பிரதியாகக் கொள்ளலாம்.

பழுத்த முதுமையில் திரையுலகிலிருந்து ஓய்வு பெற விரும்பிய நிலையிலும் நீலகண்டனை விட மனமில்லாத எம்.ஜி.ஆர், தாம் இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களுக்கு அவரை இயக்க மேற்பார்வைக்காக அழைத்துக் கொண்டார்.

– நன்றி: திரை பாரதி, காமதேனு 2019

Comments (0)
Add Comment