அக்கா தங்கை போலப் பழகினோம்!

– ஜெ.வுடனான நட்பு பற்றி எழுத்தாளர் சிவசங்கரி!
*
”ஜெயலலிதா என்னை, என் ஃபேமிலியில இருக்கிறவங்க கூப்பிடுற மாதிரி ‘ஜிபு’னுதான் கூப்பிடுவாங்க. நான் அவங்களை ‘அம்மு’ன்னு கூப்பிடுவேன்.

அம்முவை நான் மொத மொதல்ல சந்திச்சப்போ எனக்கு 13 வயசு, அவங்களுக்கு 9 வயசு. எங்க ரெண்டு பேருக்கும் நாலு வயசுதான் வித்தியாசம். நான் டான்ஸ் கத்துக்கிட்ட கே.ஜே. சரசா டீச்சர்கிட்ட அவங்களும் டான்ஸ் கத்துக்க வந்தப்போதான் எங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

என்னவோ தெரியல, முதல் நாள்லேருந்தே எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அப்போ என் பிறந்தநாளைக்கெல்லாம் அவங்க என் வீட்டுக்கு வருவாங்க. எனக்கு நல்லா நினைவுல இருக்கு, நாங்க ஃப்ரெண்ட்ஸாப் பழகின பிறகு வந்த என்னோட பிறந்தநாளைக்குக் கையில கிஃப்டோட பிங்க் பாவாடை, சட்டை போட்டுக்கிட்டு கார்ல வந்து இறங்கினாங்க. பெரிய ரோஜாப்பூ ஒண்ணு நடந்து வந்த மாதிரி இருந்துச்சு அவங்களைப் பார்த்தப்போ.

எங்க டான்ஸ் மாஸ்டர் ‘அந்த ராம செளந்தர்யம்’னு நாட்டியத்துல ஒரு பதம் ஒண்ணு சொல்லித் தருவாங்க. ஜெயலலிதா அதை ரொம்ப அழகா ஆடுவாங்க. அந்த நளினத்தை வார்த்தைகளால விளக்க முடியாது.

அவங்க சினிமாவுல நடிக்கப் போனதுக்கப்புறம், எனக்குக் கல்யாணம் ஆகி போபால் போயிட்டேன். அதனால், கொஞ்ச காலம் நாங்க சந்திக்கவே இல்லை.

நான் திருப்பி 1966-ல சென்னைக்குத் திரும்பி வந்ததுக்கு அப்புறம் மறுபடியும் எங்க நட்பு தொடர்ந்துச்சு. அப்ப நான் ஜெமினி ஸ்டுடியோவுக்குப் பின்னால இருக்கிற கதீட்ரல் கார்டன்ல இருந்தேன். ஷூட்டிங்ல ஒரு கேப் கிடைச்சா உடனே என் வீட்டுக்கு வந்துடுவாங்க. அவங்க, சமையல்கட்டு மேடையில உட்கார்ந்திருக்க, நான் சுடச்சுட தோசை வார்த்துத் தருவேன். ‘உடம்பு சூடு பிடிச்சுக்கிச்சு’னு சொன்னாங்கன்னா அவங்க தலையில எண்ணெய் தேய்ச்சிவிட்டிருக்கேன்.

அந்தக் காலக்கட்டத்துல நாங்க அக்கா, தங்கை மாதிரிதான் இருந்தோம்.
அவங்களும் நானும் பல இடங்களுக்குப் போயிருக்கிறோம். ஒரு தடவை, கோல்டன் பீச்சுக்குப் போயிருந்தோம். அப்போ, அங்க ஒரு ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. அதுல இருந்து ஒருத்தர் அம்முகிட்ட வந்து, ஒரு டைரக்டரோட பேரைச் சொல்லி, ‘அவரு வந்திருக்காரும்மா’ என்றார்.

இப்படி ரெண்டு தடவை வந்து சொல்லிப்பார்த்தார். அவரு ரொம்ப பெரிய டைரக்டர். ஆனா, அம்மு போகலையே. தனக்கு சான்ஸ் வேணும்ங்கிறதுக்காகவெல்லாம், ஒருத்தரைத் தேடிப் போய் பார்க்கிறவங்க இல்ல அம்மு. கொஞ்ச நேரத்துல அந்த டைரக்டரே நேர்ல வந்தது தனிக்கதை.

அந்தளவுக்கு சுயமரியாதை உள்ளவங்க அவங்க. தமிழ்ல ‘செம்மொழி’னு சொல்றோம் இல்லையா? அந்த மாதிரி அவங்க ஆங்கிலத்துல படிப்பாங்க. அவங்க ரசனை எப்பவுமே உயர்வாதான் இருக்கும்.

– நன்றி : பெண்மை. காம்

Comments (0)
Add Comment