போதைப் பொருட்கள் பரவலுக்கு யார் காரணம்?

இவ்வளவு போதைப் பொருட்களா? – என்ற அதிர்ச்சியை ஏற்படுகிறது அண்மைக் காலத்தில் நாடெங்கும் போதைப் பொருட்கள் பிடிபடுவது குறித்த விபரங்கள்.

தமிழகத்தில் சமீபத்தில் மட்டும் 152.94 டன் போதைப் பொருட்கள் பிடிபட்டிருக்கின்றன. அவற்றின் சந்தை மதிப்பு மட்டும் 9 கோடிக்கும் மேல். பிடிபட்டவர்கள் மீது மூன்று கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இருந்தும் விதவிதமான வடிவில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களைக் குறி வைத்தே இந்த விற்பனை நடக்கிறது. போதைப் பொருட்களிலேயே பல விதமான விற்பனை நடக்கிறது.

சென்ற ஆட்சியில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணியில் முக்கியப் புள்ளிகள், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது இதுவரைக்கும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படியே நிலுவையில் இருக்கிறது அந்த வழக்கு.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த அளவுக்குப் போதைப் பொருட்கள் புழக்கம் இருக்கிறது என்றால் அந்தப் போதை வலைப் பின்னல் தீவிரம் அடைந்த நிலையில் இருப்பதற்கு யார் காரணம்?

போதையின் ஊற்றுக்கண்களை மூடாமல் மாணவர்களிடம் “போதைப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்” என்று ஆலோசனை சொல்வதால் என்ன பலன்?

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி “போதைப் பொருள் பரவலுக்கு மத்திய அரசே காரணம்” என்று குற்றம் சாட்டியிருப்பது பிரச்சினையைத் திசை திருப்பும் விதத்தில் தானிருக்கிறது.

ஏற்கனவே குஜராத்தில் போதைப் பொருட்களின் விநியோகம் அளவுக்கு மீறிய விதத்தில் இருப்பது குறித்த புகார்கள் அதிகரித்திருக்கின்றன. கேரளாவிலும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதை கேரள முதல்வரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிலும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டியது மிக மிக முக்கியம்.

போதைப் பொருட்களின் விநியோக ஊற்றுக் கண்களை முதலில் அடையுங்கள்!

*

Comments (0)
Add Comment