தமிழின் நேர்மறையான எழுத்தாளர் எஸ்.ரா!

“எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை நினைத்தால் எனக்கு எப்போதும் ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும். ஒரு கர்மயோகியைப் போல இலக்கியம், எழுத்து போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே எழுதுகிறார்; உரையாடுகிறார்; செயல்படுகிறார்” – என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்.

“கவன ஈர்ப்பிற்காகவோ, இன்னபிற அற்ப காரணங்களுக்காகவோ எந்தவொரு சர்ச்சையையும் அவர் மேற்கொள்வதில்லை. போலவே அவர் மீது விழும் அபாண்டமான அவதூறுகளையும், வெறுப்புகளையும் எப்போதும் அவர் கண்டுகொள்வதில்லை.

‘நீ நதி போல ஓடிக் கொண்டிரு’ என்பதற்கு சிறந்த உதாரணமாக இவரைச் சொல்லலாம்.

சமீபத்தில் சித்ரா லட்சுமணன் யூட்யூப் தளத்தில் அவர் அளித்த நேர்காணலின் சில பகுதிகளைப் பார்த்தேன். நம் மனது முழுதும் நேர்மறையான உணர்வால் நிரம்பும் மாயத்தை அந்த காணொளிகள் செய்தன.

“என் மீது ஒருவர் குற்றம் சொன்னால் அதில் உண்மையிருக்கிறதா என்று முதலில் பார்ப்பேன். இருந்தால் திருத்திக் கொள்வேன். இல்லையென்றால் அதைக் கடந்து செல்வேன். இத்தனை இலக்கியம் படித்தும், இந்த நிதானமும் நேர்மறை உணர்வும் கூட வரவில்லையென்றால் அவற்றால் என்ன பயன்?” என்பது போல் கேட்கிறார் எஸ்.ரா.

இதைப் போலவே அவர் எந்தவொரு மனிதரின் மீதும் குற்றம் சுமத்துவதில்லை. ‘எழுத்தாளனை இந்த சமூகம் மதிக்கவில்லையே, கொண்டாடவில்லையே’ என்று அநாவசிய புகாரையும் அனத்தல்களையும் அவர் சொல்வதில்லை. மாறாக மனிதர்கள் பெரும்பாலோனோர் நல்லவர்கள்தான் என்று தீர்மானமாக நம்புகிறார்.

‘எழுத்தாளன் என்கிற நிலையை நான் விரும்பியேதான் ஏற்றுக் கொண்டேன். எனவே அதில் ஏற்படும் எந்தவொரு இடர்ப்பாடையும் வறுமையையும் நான் புகாராக எப்போதும் கொள்வதில்லை. ஆனால் எனக்கு உதவி செய்ய மனிதர்கள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் உண்மையாக இருக்கிறானா என்பதைத்தான் இந்தச் சமூகம் பார்க்கிறது’

இப்படி பல பாசிட்டிவ் எண்ணங்களை, சிந்தனைகளை எஸ்.ராவின் வீடியோக்கள் அளிக்கின்றன.

கடுமையான வெறுப்பும் வன்மமும் பொச்செரிப்பும் நிறைந்திருக்கும் இணையவுலகில் இது போன்ற பாசிட்டிவ் அலைகளை உருவாக்கும் பதிவுகள் மிக அரிது. எனவே நிச்சயம் அந்த வீடியோக்களை காணுங்கள்” என்று மனந்திறந்த பாராட்டுகளை சுரேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment