கோப்ரா – அயர்ச்சி தரும் ஆக்‌ஷன் விருந்து!

சில படங்களில் சில காட்சிகள் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியை யோசித்து உருக்கொடுத்தது எப்படி என்ற கேள்வியை உருவாக்கும்.

ஆனால், அந்த திரைப்படங்களை முழுதாகப் பார்க்கும்போது திருப்தி கிடைக்காது. அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘கோப்ரா’.

கணித மேதையின் ‘கொலவெறி’!

சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளைத் தேடித் தேடி கணிதம் கற்பிப்பவர் மதியழகன் (விக்ரம்). புகழ்பெற்ற கல்லூரியொன்றில் பேராசிரியையாக இருக்கும் பாவனா (ஸ்ரீநிதி) அவரை துரத்தி துரத்திக் காதலிக்கிறார்.

மதியின் வீட்டுக்கே சென்று தங்கும் அளவுக்கு காதலாகிக் கசிந்து உருகுகிறார். ஆனால், மதியோ ஏதோ ஒரு காரணத்தால் அவரை ஏற்க மறுக்கிறார்.

கொல்கத்தாவில் இருக்கும் நெல்லையப்பன் (கே.எஸ்.ரவிக்குமார்) பத்திரிகையாளர் என்ற போர்வையில், பணம் வாங்கிக்கொண்டு சர்வதேச பிரபலங்களைக் கொல்வதற்கான வேலைகளைச் செய்து வருகிறார்.

அவர் கைகாட்டும் இடத்தில் தடயமே இல்லாமல் வேலையை முடிக்கிறார் ஒருவர். அந்த நபர் சாட்சாத் மதியழகன் தான்.

ஒடிசாவின் முதலமைச்சரை கட்சி விழாவொன்றில் கொல்பவர், ஸ்காட்லாந்து சென்று அதன் இளவரசரை அவரது திருமண விழாவிலேயே கொலை செய்கிறார். இதற்காக, அவர் அறிவியலோடு சேர்ந்து கணிதத்தை கனகச்சிதமாகப் பயன்படுத்துகிறார்.

சர்வதேச அளவில் நடத்தப்படும் போலீஸ் விசாரணையில் தெரியவராத இந்த உண்மையை, பாவனாவின் வழிகாட்டுதலில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டுவரும் ஜுடித் (மீனாட்சி கோவிந்தராஜன்) எனும் மாணவி கண்டறிகிறார்.

இண்டர்போலை சேர்ந்த அஸ்லான் (இர்பான் பதான்) ஒடிசா முதல்வர் கொலை செய்யப்பட்ட இடத்தைக் காண வருகையில், அவரைச் சந்தித்து இந்த உண்மையைச் சொல்கிறார் ஜுடித். இதையடுத்து, அஸ்லான் குழுவில் அவரும் ஒருவராகிறார்.

ஒரு பக்கம் பாவனாவின் காதல், இன்னொரு பக்கம் நெல்லையப்பன் தரும் கொலைப் பணி என்றிருக்கும் மதியின் அடையாளம் கம்ப்யூட்டர் ஹேக்கர் ஒருவரால் அம்பலப்படுத்தப்படுகிறது.

இதனால், மதிக்கு ‘அசைன்மெண்ட்’ தருபவர் பெரும் கார்பரேட் நிறுவன முதலாளி ரிஷி (ரோஷன் மேத்யூ) என்ற உண்மையும் கசிகிறது.

இதையடுத்து மதியை மட்டுமல்லாமல் அவரைப் பழி வாங்கத் துடிக்கும் அந்த ஹேக்கரையும் கொலை செய்ய முடிவெடுக்கிறார் ரிஷி.

யார் அந்த ஹேக்கர்? அவருக்கும் மதிக்கும் என்ன பகை? நெல்லையப்பனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாத மதியைக் குறித்த தகவல் அந்த ஹேக்கருக்கு எப்படித் தெரியும்? இவர்கள் இருவரையும் ரிஷியின் ஆட்கள் என்ன செய்தார்கள் என்று சொல்கிறது ‘கோப்ரா’.

’ஒரு கணித மேதைக்கு ஏன் இவ்ளோ கொல வெறி’ என்பதுதான் ‘கோப்ரா’வின் அடிப்படைக் கதை. முடிந்தவரை அதனைச் சொல்லியிருந்தாலும், பார்வையாளர்களுக்கு அது போதவில்லை என்பதே உண்மை.

விக்ரமின் நிலைமை?!

‘அந்நியன்’ படத்தின் கிளைமேக்ஸில் அம்பியாகவும் அந்நியனாகவும் மனம் மாறி ‘டயலாக்’ பேசியிருப்பார் விக்ரம். கிட்டத்தட்ட அதற்கு இணையாக ‘கோப்ரா’வில் ஒரு விசாரணை காட்சி வருகிறது.

இதில் விக்ரம் மட்டுமல்லாமல் ஆனந்தராஜ், மியா ஜார்ஜ் பாத்திரங்கள், ஒரு சிறுவன் மற்றும் ஆசிரியர் பாத்திரம் ஆகியனவும் இடம்பெறுகின்றன.

இப்படத்திற்காக விக்ரம் எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறார் என்பதற்கான பலனாக அது அமைந்திருக்கிறது.

இதில், அவர் மனநலம் சிதைந்தவராக தோன்றுகிறார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். அந்த உழைப்பை மீறி, ஏன் விக்ரமுக்கு மட்டும் மாபெரும் வெற்றி சாத்தியமாவதில்லை எனும் கேள்வி இதிலும் தொடர்கிறது.

‘கேஜிஎஃப்’நாயகி ஸ்ரீநிதி இதில் விக்ரமின் காதலியாக நடித்திருக்கிறார். ஆனால் விக்ரம் – ஸ்ரீநிதி காதல் பகுதிகள் நம்மிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இண்டர்போல் அதிகாரியாக வரும் இர்பான் பதானுக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து அவரைப் பல படங்களில் பார்க்கலாம்.

கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், மியா ஜார்ஜ், ரேணுகா, சிந்து, சுரேஷ் மேனன், ஜான் விஜய், ரோபோ சங்கர் என்று பலரும் இதில் இருக்கின்றனர்.

மாணவி ஜூடித் ஆக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் அதிக நேரம் திரையில் தென்படுகிறார். அவரது இருப்பு பளிச்சென்ற வகையில் இருக்கிறது.

சர்ஜனோ காலித் – மிருணாளினி சம்பந்தப்பட்ட காட்சிகள் பிளாஷ்பேக்கில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த கூட்டணி திரைக்கதையில் இளமை ஊட்டியிருக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் ரோஷன் மேத்யூ, சைக்கோத்தனமான கார்பரேட் முதலாளியாக வந்து போயிருக்கிறார். கிட்ட்த்தட்ட ‘கத்தி’ நீல் நிதின் முகேஷை நினைவுபடுத்துகிறார்.

ஆனால், ‘ஓபனிங் இருக்குற அளவுக்கு பினிஷிங் இல்லையேப்பா’ என்பது போலவே இவரது பாத்திரத்தின் வடிவமைப்பு மனதில் நிற்கிறது.

இப்படம் 3 மணி நேரம் மூன்றரை நிமிடங்கள் ஓடுகிறது. ஆனாலும், படத்தின் நீளம் கருதி சில காட்சிகள் ‘கட்’ ஆகியிருப்பது நன்கு தெரிகிறது. அது திரைக்கதையின் செறிவைப் பாதித்திருக்கிறது.

உதாரணமாக, ஆனந்தராஜ் ஒரு வடக்கத்திகாரர் போன்று உடையணிந்துகொண்டு விக்ரமின் குடியிருப்பில் ‘அயர்னிங்’ வேலை செய்வார்.

அது ஏன் என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவரது பாத்திரம் ஏன் திரைக்கதையில் இடம்பெறுகிறது என்பது தெரிய வரும். ஆனால், பின்பாதியில் காட்டப்படும் ஆனந்தராஜின் தோற்றம் அதற்கு நேரெதிராக இருக்கும்.

போலவே, விக்ரமின் தாயாக வரும் மியா ஜார்ஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் நிறைய கட் ஆகியிருப்பது திரைக்கதை வீச்சை கடுமையாகப் பாதித்திருக்கிறது.

புதுமுக ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பணி ‘கோப்ரா’வை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. முக்கியமாக ரஷ்யாவை படத்தில் காட்டியிருக்கும் இடங்கள் அருமை.

படத்தொகுப்பாளர்கள் புவன் ஸ்ரீனிவாசன் – ஜான் ஆப்ரகாம் இணை முடிந்த அளவுக்கு காட்சிகளை நேர்த்தியாக திரையில் காட்ட முயன்றிருக்கிறது. அமரன் மற்றும் ரவி பாண்டியனின் தயாரிப்பு வடிவமைப்பு ஒவ்வொரு பிரேமையும் அழகூட்ட உதவியிருக்கிறது.

திலீப் சுப்பராயன் வடிவமைப்பில் சண்டைக்காட்சிகள் ’வாவ்’ சொல்ல வைக்கின்றன. கொல்கத்தா சந்தையில் மழைக்கு நடுவே அமைக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சி அதற்கொரு உதாரணம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கும் வகையில் அமையவில்லை. ஆனால், ஒரு பரபர ஆக்‌ஷன் படத்திற்கான பின்னணி இசை படத்தில் இருக்கிறது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு பிறகு ‘கோப்ரா’ தந்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

திரையில் பிரமாண்டமான அனுபவத்தை ரசிகர்கள் பெற வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.

திரைக்கதையின் போக்கில் வேண்டாத இடங்களில் அதிகமாகவும் தேவைப்படும் இடங்களில் குறைவாகவும் தகவல்களைத் தந்திருக்கிறார்.

அவரைத் தவிர எழுத்தாக்கத்தில் சிலரது கூட்டுழைப்பும் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

பல சமையல் நிபுணர்கள் சேர்ந்து ஒரு பதார்த்தம் சமைக்கும்போது சில நேரங்களில் அசம்பாவிதங்களும் நிகழலாம் என்பது போன்றிருக்கிறது அவ்வுழைப்பு.

அதேநேரத்தில், மிகநன்றாகச் செப்பனிட்ட ஒரு திரைக்கதை தரப்படும்போது, அதனை மிகச்சிறப்பாக படமாக்குவார் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறார் அஜய்.

கண்ணில் ஓடும் படங்கள்!

உலக பிரபலங்களை வேட்டையாடும் கொலையாளியாக ‘தி ஜாக்கால்’ படத்தில் நடித்திருப்பார் ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ்.

சில மாய உருவங்கள் கண்ணில் தென்படும் மனநோய்க்கு ஆளானவராக ’ஜட்ஜ்மெண்டல் ஹே க்யா’ இந்திப் படத்தில் வருவார் நடிகை கங்கனா ரனாவத்.

இவை மட்டுமல்லாமல் கிறிஸ்டோபர் நோலனின் ‘பிரெஸ்டீஜ்’ படமும் இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கு மிகவும் பிடித்தமானவை என்பது ‘கோப்ரா’வை பார்க்கும்போது தெரிய வருகிறது. இன்னும் பெயர் தெரியாத சில படங்கள் கூட இதில் கலந்திருக்கலாம்.

ஆனாலும், கோப்ராவில் விக்ரம் ஏற்றிருக்கும் பாத்திரம் எனக்கு ‘பிரெஸ்டீஜ்’ஜை மட்டுமே நினைவூட்டியது.

கிட்டத்தட்ட அதற்கான சமர்ப்பணம் போலவே ‘கோப்ரா’வை உருவாக்கியிருக்கிறார் அஜய் ஞானமுத்து. எனது அனுமானம் தவறாகவும் இருக்கலாம்.

நமக்குப் பிடித்த படங்களிலுள்ள காட்சிகளின், கதாபாத்திரங்களின், இன்னபிற அம்சங்களின் தாக்கத்தை எடுத்தாண்டு ஒரு படம் எடுப்பது தவறல்ல;

ஆனால், அவற்றைக் கொஞ்சமும் அறியாத ரசிகர்கள் படத்தைப் பார்க்கும்போது கொஞ்சம்கூட அயர்ச்சியை உணரக் கூடாது. அந்த இடத்தில் மட்டும் சறுக்கியிருக்கிறது ‘கோப்ரா’.

மற்றபடி, மூன்று மணி நேரம் படம் பார்க்கத் தயார் என்றால், விக்ரமின் வயதான தோற்றத்தை மீறி அவரது நடிப்பை சிலாகிக்க முடியுமென்றால், துண்டிக்கப்பட்ட காட்சிகளை ஓடிடியில் ஒருசேர பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணுபவரானால், ‘கோப்ரா’ உங்களுக்கான படமாக இருக்கும்!

-உதய் பாடகலிங்கம்

cinema
Comments (0)
Add Comment