ஆளுமைகளுக்கு மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்!

மணாவின் ‘மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்’ நூல் குறித்து சப்தரிஷி லா.ச.ரா எழுதிய விமர்சனம்.

****

இயக்குனர் ஸ்ரீதரின் திரைப்படத் தலைப்புகளில் கவிதை கொஞ்சும். யாரோ எழுதிய கவிதை, சௌந்தர்யமே வருக வருக, இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன், கலைக்கோயில், மோகனப்புன்னகை,  தந்துவிட்டேன் என்னை, மீண்டசொர்க்கம்.

மணாவின் நூலில் மறைந்தவர்களைப் பற்றிய பல கட்டுரைகளில் ‘’கண்ணீர் அஞ்சலி’’ என்கிற வார்த்தையே கிடையாது

புத்தகத் தலைப்பு ‘மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்’.

இதனுள் முப்பத்தியொரு தலைப்புகளில் மறைந்தவர்கள் பற்றிய கட்டுரைகள் இருக்கின்றன.

அவற்றில் சில தலைப்புகள்

‘நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா

அன்பழகன் மறைந்த அன்று அடர்ந்த நினைவுகள்

நிழல் மனிதரின் நிஜம்

மறைந்திருக்கிறது தமிழ் மரபைப் பேசிவந்த நெல்லைக்குரல்

காலம் கலைந்த உயிரோவியம்

புகைந்தும் புகையாத சில நினைவுகள்

படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது

காணாமல் போன கரிசல் பறவை

நிழலை மீறி….

நினைவில் துரு ஏறிய அந்த நாள்

மிருதுவான சரும நிறம் – மிருதுவான தோற்றம் மிருதுவான சிரிப்பு – மிருதுவான பழகு தன்மை, மிருதுவான மனம் கொண்ட ‘மணா’ வின் அஞ்சலி குறித்த நூல் கூட மிருதுவாகத் தானே இருக்கமுடியும்.

யாரைப்பற்றியும் கடுஞ்சொற்களும் இல்லை என்கிற அதே சமயத்தில் ‘செத்த பிறகும் எழுத்தாளன்மீது புனிதப் போர்வையை போத்தாதீர்கள்’ என்கிற தலைப்பில் ஜெயகாந்தனின் வார்த்தைகளையே தலைப்பாய்க் கொண்ட கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது.

யார் யார் எப்படி எப்படியோ அவரவர்களை அப்படி அப்படியே பட்ஷமின்றி காட்டியிருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பான சிறப்பு.

சமர்ப்பண வரிகளிலேயே பாருங்களேன் – ‘நிறைந்த அன்புடன் என்னுள் உயிர்த்திருக்கும் கிருஷ்ணம்மாள் என்கிற அம்மாவின் ‘கனிவான உயிருக்குச் சமர்ப்பணம்’.

முன்னுரையிலும் மணா இப்படிக் குறிப்பிடுகிறார்.

‘மரணம் இன்னும் மங்கலான மேகத்தைப் போல மர்மமானதொரு புள்ளியாகவே தொடர்ந்து நீடிக்கிறது

நமக்கு முன்னால் வாழும்போது புரிந்து கொள்ளாதவர்களை. அவர்கள் வாழ்வின் விளிம்பின் ஓரத்தில் நிற்கும்போதே புரிந்து கொள்கிறோம்.

உயிர் அடங்கியபிறகு அவரவர் வாழ்ந்த விதத்திற்கு ஏற்ப அவர்களைப் பற்றிய நினைவுகள் உயிரோட்டமாக பலரிடம் மிஞ்சி இருக்கின்றன’

மறைந்தும் அவர்கள் நினைவில் வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்ட மனச்சித்திரத்தின் தொகுப்பே இந்நூல். இந்த நூலில் உள்ள ஏதோ ஒரு வரி வாசகர் மனதில் நுழைந்து சிறுநெகிழ்வை ஏற்படுத்தினாலே போதும். ‘’

மிகத்தெளிவாக, வாசகன் எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் சின்னச்சின்ன வாக்கியங்களோடு புதுக்கவிதையை பிரிக்கிறமாதிரி வாக்கியங்களைப் பிரித்து அவர் எழுதியிருந்த விதமும் ,வேகமும் பிடித்திருந்ததே அவரைச் சந்திக்கத் தூண்டுவதாக இருந்தது என்று அதிகாரத்தின் நிழலை அண்டாத சின்னகுத்தூசி பற்றி எழுதுகிறார்.

இவருக்கும் மணாவுக்கும் உள்ள நட்பு நெருக்கத்தின் இலக்கணம்.  ஒரு புதுச்செய்தியுடன் தருகிறார் ” திருவல்லிக்கேணியின் வீட்டுசாப்பாட்டை நினைவு படுத்தும் அதிகக் காரமற்ற மெஸ்கள் சின்னகுத்தூசி மூலம்தான் அறிமுகம் ஆகின.’’

அதே போல சுந்தரராமசாமியிடம் “காற்றில் கலந்த பேரோசை கட்டுரையிலும் ஜீவா பேசிய குமரி மாவட்டத் தமிழை அழகாய்ப் பதிய வெச்சிருக்கீங்க. ஆனால் உங்களுடைய  பேச்சில் குமரி மாவட்டத் தமிழைக் கேட்க முடியவில்லையே.. ஏன்? எனக் கேட்டிருக்கிறார்.

அவரோ ‘கவனிச்சிருக்கீங்க ‘என்று புன்னகைத்தார். முடிவற்ற உரையாடலில் சுந்தர ராமசாமியிடம் அவர் சிகரெட் பிடிப்பது பற்றிக் கேட்ட போது “என்னுடைய அப்பாவுக்கு எதிராக ஏதாவது, செய்ய வேண்டும் என்று செய்த காரியங்களில் இதுவும் ஒன்று. ஒரு விதமான விடுபடுதலுக்காகத்தான் இதைச் செய்தேன். அப்புறம் பழக்கமாகிவிட்டது “போன்ற அந்தரங்க விஷயங்களையும் மணாவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயகாந்தனுடன் இவர் உரையாடிக் கொண்டிருந்ததில் ஜி.நாகராஜன் பற்றிய சில விமர்சனங்கள் பற்றி பேச்சு வந்தபோது இடைமறித்த ஜெயகாந்தன் சொல்லியிருக்கிறார்,

“எழுத்தாளன்ங்கிறவன் புனிதமானவன் கிடையாது. அவனைப் பற்றி பேசணும்னா அவனோட அழுக்கையும் சேத்துத்தான் பாக்கணும். எழுதணும். செத்த பிறகும் எழுத்தாளன் மேலே புனிதப் போர்வையைப் போர்த்திக்கிட்டு இருக்காதீங்க’. என்னைப்பத்தி எழுதினாலும் கஞ்சாப்புகைக்கு நடுவுல நீ இருந்ததையும் எழுதணும்”.

ஜெயகாந்தன் பற்றிய ஒரு படப்பிடிப்பில் ஒரு காமராமேன் அவரிடம் ”மரத்துல சாய்ஞ்சு நில்லுங்க சார் நல்லா இருக்கும்” என்றிருக்கிறார்.

உடனே கர்ஜித்து விட்டார் ஜெ.கே. “ஏன்யா என்னைப்படம் எடுக்க வர்றே. நீதான் உன் காமிரா கோணத்தை மாத்திக்கிட்டு என்னை எடுக்கணும் அதை விட்டுட்டு என்னை அப்படி நில்லு, இப்படி நில்லுன்னு ஆர்டர் போடக்கூடாது தெரிஞ்சதா? மரத்தோடு ஒட்டி நிக்க நான் என்ன பல்லியா? ஓணானா?’’

இப்படியாக ஒவ்வொரு பிரபலத்தின் ஒவ்வொரு அகலா நினைவுகளின் பதிவுகள் கொண்டது மணாவின் இந்தப் புத்தகம்.

பேராசிரியர் அன்பழகனைப் பற்றிய கட்டுரையில் ஒரு வரி:

97 வயது வரை அன்பழகனின் வாழ்க்கை ஒரே நேர்கோட்டின் தன்மையுடன் இருந்திருக்கிறது.

அன்பழகன் தன்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார் “முதலில் நான் மனிதன் அதன்பிறகு அன்பழகன். மூன்றாவது பகுத்தறிவு வாதி. நான்காவது அண்ணாவின் தம்பி ஐந்தாவது கலைஞரின் நண்பர்.

இந்த வரிசை எப்போதும் என்னிடம் இருக்கிறது. சாவினால் மட்டுமே இந்த வரிசையைக் கலைக்கமுடியும். ‘’

கடைசி வரியாக மணா எழுதுகிறார்.

“இன்றைக்கு மறைந்திருக்கிற நிலையிலும் காலத்தின் அந்த அடுக்கு மாறவில்லை.’’

சோ-விற்கு இவர் மேல் இருக்கும் அன்பும், மணாவுக்கு சோ மேல் இருந்த அபிமானமும். நாம் அறிந்தது தான் என்றாலும் இந்தக் கட்டுரை மிகவும் முக்கியமானது.

துக்ளக்கில் வெளியான தன் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட முடிவெடுத்து ‘சோ’விடம் இவர் போனபோது, சோ “தனியாக ஒரு விழா நடத்தி அனாவசியமாகச் செலவழிக்காதீங்க.

துக்ளக் விழாவிலேயே வெளியிட்றலாம் ‘பரந்தாமன்’ முதல் காப்பியை வாங்கிக்கட்டும்” என்று சொல்லி விட்டு அதற்கு ஒரு முன்னுரையும் எழுதித்தந்து ஒரு சின்னக் காகிதத்தை அதன் மேல் ஒட்டி பேஸ்ட் பண்ணியிருந்தார். அதில் இப்படி எழுதியிருந்தார்.

“உள்ளே எழுதி இருப்பதெல்லாம் ஒரே கப்ஸா.’’

“சீரியஸாக அவர் இருந்ததில்லையா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எழலாம். இருந்தாலும் அவர் அந்த நிலையிலேயே தொடர்ந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்று சொல்கிறார் மணா.

“இந்தப் புத்தகத்திற்கு விமர்சனமாக  ஒரு புத்தகமே எழுத வேண்டியிருக்கும். மேற்கண்டவை இந்தகாலக்கட்ட வார்த்தையில் சொன்னால் ஒரு ‘டீஸர் ‘தான்.

இவர்களைத் தவிர சசிகலா நடராஜன், கோவை ஞானி, பிரபஞ்சன், ஓவியர்கள் ஆதிமூலம், வீரசந்தானம், இயக்குனர் மகேந்திரன், தா.பாண்டியன், கே.வி.ஆனந்த், பத்மினி,

தீம்திரிகட ஞாநி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, நம்பியார், வல்லிக்கண்ணன், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா  என்று பலரைப்பற்றிய கட்டுரைகள் என்று மட்டுமே இதனை விட்டுவிட முடியாது.

கூடவே நிழலென வரும் ஒரு விஷயமும் இதில் உண்டு.  மணா என்கிற மனிதருடன் இத்தனை பிரபலங்களும் கொண்டிருந்த நட்பும், அன்பும்தான் அது.

இப்புத்தக வரிகள் அத்தனையும் ரத்தினம் இந்த ரத்தினப் புத்தகப் பொக்கிஷத்தைப் படித்து நான் சொன்னதெல்லாம் ‘சரி’யே என்று நீங்கள் சொன்னால் அதுவே என் மகிழ்ச்சி

என்றென்றும் அன்புடன்

– சப்தரிஷி லா.ச.ரா

*

‘மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்’- நூல்
ஆசிரியர் : மணா
பக்கங்கள் – 232
விலை – 250
வெளியீடு: பரிதி பதிப்பகம்,
56சி|128 பாரத கோவில் அருகில்,
ஜோலார்ப் பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம்-635 851.
செல் : 72006 93200

Comments (0)
Add Comment