சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இயங்கி வரும் டாக்டர்.எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டிற்கான புத்தகக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்று புத்தகங்களைக் காட்சிப் படுத்தியிருந்தன. மாணவிகளுக்காக தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டன.
இந்தக் புத்தகக் கண்காட்சியின் சார்பில் மாணவிகளுக்குத் தேவையான டிஎன்பிஎஸ்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த புத்தக கண்காட்சியில் விகடன், எம்.ஜி.ஆர் புத்தகம், புலமைப் பதிப்பகம், யா ஊடகம், அன்னியப்பா வெளியிடுகள், புதிய நூற்றாண்டு புத்தக வீடு, ஜனகா பதிப்பகம், தாய் வெளியீடு உள்ளிட்ட பதிப்பகங்களின் நூல்கள் இடம்பெற்றன.
பல்வகையான புத்தகங்கள் இடம்பெற்ற இந்தக் கண்காட்சியில் வரலாறு, அரசியல், இலக்கியம், விளையாட்டு, ஆரோக்கியம், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், சிறுதாணிய உணவுப் புத்தகங்கள், உழவுத் தொழிலை முதன்மைப்படுத்தும் புத்தகங்கள், சித்த வைத்திய புத்தகம், கதை, கவிதைப் புத்தகங்கள் போன்றவை தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருந்தன.
அதோடு, குழந்தைகளுக்கான புத்தகங்கள், நாவல்கள் மற்றும் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்களோடு, கல்லூரிப் பாடம் தொடர்பான புத்தகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில் கலந்து கொண்டு புத்தக கண்காட்சி தொடர்பாக பேசிய அக்கல்லூரி மாணவி நாணி அஸ்வின், “டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இந்தக் கண்காட்சி கண்களுக்கு விருந்து தரும் வகையில் அமைந்திருந்தது.
படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பெரும்பான்மையான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
தன்னம்பிக்கை புத்தகங்கள், அப்துல்கலாம் மற்றும் விவேகானந்தர் புத்தகங்கள் போன்ற புத்தகங்களை படிக்கும்போது வாழ்க்கையில் கடினமாக தெரிவது கூட எளிதாக மாற்றக் கூடிய வகையில் உத்வேகம் தருகின்றன. இந்த வகை புத்தகங்களை என் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்க உள்ளேன்” எனக் கூறினார்.
– சங்கீதா, மகேஸ்வரி. எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவிகள்.