இன்னும் விசாரணை முடியவில்லையா?

கிளைமாக்ஸ் இல்லாத திரைப்படம் போலிருக்கிறது தற்போது ஆறுமுகசாமி ஆணையம் அரசிடம் சமர்ப்பித்திருக்கிற விசாரணை அறிக்கையைப் பார்க்கும் போது.

இது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டிருக்கிறது.

2016 டிசம்பர்  5-ம் தேதி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்திருக்கிறார்.

அவருடைய மரண நிகழ்வில் பிரதமர் மோடி துவங்கிப் பல மாநில முதல்வர்கள் வரை பலரும் கலந்து கொண்டார்கள். அவருடைய உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்படும் வரை அவருடைய மரணம் குறித்து எந்தச் சந்தேகமும் எழுப்பப் படவில்லை.

ஓ.பி.எஸ். தான் இந்தச் சந்தேகத்தைப் பொதுவெளியில் முதலில் தூவியவர். தர்மயுத்தம் என்ற பெயரில் சிலரால் தூண்டப்பட்ட நிலையில் மெரினாவில் ஜெயலலிதா சமாதிக்கு முன்னால் உட்கார்ந்து அவர் முன் வைத்த பொறியைத் தூண்டிவிட்டன பெரும்பாலான ஊடகங்களும்.

அதாவது மரணம் குறித்த சந்தேகத்தை ஒரு தீனியாகத் தூக்கிப் போட்டதும், மற்றவர்களும் அதைப் பிடித்துக் கொண்டார்கள்.

இதையடுத்தே ஆறுமுகசாமி ஆணையம் அ.தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டது. தங்களுடைய தலைவி மரணத்தில் சந்தேகம் எழுந்து அமைக்கப்பட்ட அந்த ஆணையம் நூற்றுக்கணக்கானவர்களை விசாரித்தது.

அதற்கிடையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நீதிமன்றத்திற்குச் சென்று தடை ஆணை வாங்கியதால், விசாரணை பாதிக்கப்பட்டு ஒருவழியாக ஆகஸ்ட் 27-ம் தேதி விசாரணை அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கம் போலவே அரசு அதிகாரபூர்மாக வெளியிடுவதற்கு முன்பே எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்த அறிக்கை ஊடகங்களில் வெளியாகிவிட்டது. தற்போது விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகி இருக்கின்றன.

அதில் வி.கே.சசிகலா, சிவகுமார், முன்னாள் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலர்  ராம்மோகன்ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விசாரணை ஆணையம் இவர்களில் சிலரை நேரடியாக அழைத்து விசாரணை நடத்தியிருக்கிற நிலையில், சிலரிடம் நேரடியாக விசாரணை நடத்த கால அவகாசம் இருந்த நிலையில் ஏன் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை?

ஏற்கனவே எவ்வளவு கால தாமதமாகி இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது? கடைசித் தருணத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கை பெறப்பட்டிருப்பது ஏன்?

தற்போது மீண்டும் சிலரைக் குறிப்பிட்டு அரசு விசாரணை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது என்றால், அதை ஏன் அதற்கென அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் செய்யவில்லை? அவர்களை விசாரணை செய்து அறிக்கையை முழுமைப்படுத்திக் கொடுத்திருக்கலாமே!

ஏன் விசாரணையை இழுத்துக் கொண்டே போக வேண்டும்? இது தான் நடந்திருக்கிறது என்கிற தெளிவான முடிவுக்கு ஆணையம் வரவில்லை என்பதைத் தானே இது வெளிக்காட்டுகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் அந்த மர்மத்திற்கு ஏன் திட்டவட்டமாக ஒரு முற்றுப்புள்ளியை வைக்கவில்லை? இது யாருக்கு லாபம் தருவதாக அமையும்?

திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைப் போல, இந்த விசாரணை நீள்வது இதுவரை இருந்த குழப்பங்களையும் நீட்டித்த மாதிரி தானே ஆகும்!

அரைகுறையாக ஆறுமுகசாமி ஆணையம் குறித்த விஷயங்கள் ஊடகங்களில் வெளிவந்திருப்பதை ஒட்டித் தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

முழுமையான அறிக்கையை அரசு முறையாக வெளியிடும்போது தான் நாமும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

ஒன்றே ஒன்று. ஓ.பி.எஸ். எழுப்பிய ஜெயலலிதா மரணம் குறித்து எழுப்பிய சந்தேகம் தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்க மூல காரணமாக இருந்தது.

அன்றைக்கு இருந்த அவருடைய அரசியல் ஆதாயத்திற்காகச் சந்தேகத்தை விதைத்த அதே ஓ.பி.எஸ். பிறகு அதே ஆணையத்தில் தனக்கு ஜெ. மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அதையே தற்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அவர் தன்னுடைய நிலைப்பாட்டை அவருடைய அரசியலுக்காக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதன் மூலம் அமைக்கப்பட்ட ஆணையத்தின் செலவுகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது?

ஆக- அவர் எழுப்பிய சந்தேகத்திற்கு அரசு ஆணையம் மூலமாக இதுவரை செலவழித்திருக்கிற தொகை சுமார் நான்கு கோடி.

‘காஸ்ட்லியான’ சந்தேகம்’ என்று எளிதாக எடுத்துக் கொள்ள முடியுமா?

  • யூகி

*

Comments (0)
Add Comment