“பணமும், புகழும் நிரந்தரமல்ல” – கலைவாணர்!

சமூகச் சிந்தனையாளர் கலைவாணரின் நினைவு நாள் இன்று (30.08.1957). அவருக்கு ‘தாய்’ இணையதளத்தின் நிறைவான நினைவஞ்சலி!
***
ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும், முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், “என்னங்க… மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!” என்று கேட்டிருக்கிறார்.

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, “இந்தா பா… இந்த ஒரு ரூபாய்க்கு பழைய சோறு வாங்கிட்டு வா…” என்றார்.

ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், “ஐயா… நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..” என்றார்.

“கேட்டீங்களா நடராசன்… எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்… அதனால்தான் இதைச் சாப்பிட்டேன்!” என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் அசந்து விட்டாராம்!

50 ஆண்டுகள் கூட வாழ்ந்திராத கலைவாணர், காலத்தைக் கடந்து நிற்கும் புகழுக்குச் சொந்தக்காரர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்திற்குச் சொந்தமான கையிருப்பு சிரிப்பு” என்று கூறிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

நடிகராக இருந்த ஒருவருக்குச் சிலை வைத்து மரியாதை செய்த சிறப்பு தமிழ்நாட்டில் கலைவாணருக்கே முதலில் கிடைத்தது என்றால் அது மிகையாகாது.

நாட்டுக்குச் சேவை செய்யும் நாகரீகக் கோமாளி என்று தன்னை எளிமையாக அடையாளப்படுத்திக் கொண்டவர். யாரையும் எதிரியாக உருவாக்கிக் கொள்ளாமல் வாழ்ந்து முடிந்த அபூர்வ மனிதர்.!
********

“இன்று தமிழக அரசே கலைவாணர் விழாவை நடத்துகிறது என்றால் அதற்கு காரணம் கலைவாணர் நடந்து காட்டியதுதான்.

எனது 17-வது வயதில் எனக்கு அரசியலைச் சொல்லித் தந்தவர் கலைவாணர். நாடகக் கம்பெனியில் சமபந்தி போஜனத்தை உருவாக்க அரும்பாடுபட்டவர்.

மனிதன் ஒரு தத்துவத்துக்கு கொள்கைக்கு சொந்தக்காரனாக இருக்க வேண்டும். பிறர் மதிக்கத்தக்க வகையில் அவன் வாழ்ந்தாக வேண்டும்.

இந்த இரண்டு கொள்கைகளையும் அவர் கற்றுத் தந்தார். ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாது என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

ஒருமனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லிக்காட்டி இருக்கிறார். ஒரு விஷயத்தை உங்களிடம் இன்று சொல்கிறேன்.

கலைவாணர் வாழ விரும்பாமல்தான் நம்மையெல்லாம் விட்டுச் சென்றார். கொடுத்த மாத்திரைகளை எல்லாம் சாப்பிடாமல் அவர் தூக்கி எறிந்து விட்டார்.

அந்த அளவுக்கு அவர் வேதனையில் இருந்தார். புகழும் பணமும் நிரந்தரம் என்று சிலர் நடக்கிறார்கள். அந்தக் காலத்தில் கலைவாணர் செய்தது போல் தர்மம் யாரும் செய்யவில்லை.

கலைவாணர் ஒரு சகாப்தம், ஆனால் அது முடிந்துவிட்ட சகாப்தம். இன்று அவர் இருந்திருந்தால் எனக்கு இந்தக் கஷ்டமில்லை.
அவர்தான் முதலமைச்சராக இருந்திருப்பார். அவருக்கு நான் உதவியாக இருந்திருப்பேன்.

தமிழ் பண்புக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவருக்கு மரியாதை காட்டவே இந்த விழா நடத்தப்படுகிறது.” தமிழரசு – 01.10.1978

கலைவாணர் நினைவு நாளில் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியது.
******

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் வசித்தவர்கள், தங்கள் வீட்டின் பின்புறம் வேலையில் ஈடுபட்டிருக்க, தெருப்பக்கக் கதவு சாத்தப்பட்டிருந்தது.

பூட்டு திறந்தபடி கதவில் தொங்கிக் கொண்டிருக்க, அந்த வழியாக வந்த சிறுவன் ஒருவன், அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நழுவினான்.

இதை வாசலில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணன் சிறுவனை வழிமறித்து, “இங்கே வாடா, தம்பீ…” என்று அழைத்ததும், மிகவும் சாதுவாக அவர் முன் வந்து நின்றான் சிறுவன்.

“தம்பி, பையில் என்ன இருக்கு?” என்றுக் கேட்டார். “ஒண்ணுமில்லையே!” என்றான் சிறுவன்.

“காட்டு, பார்க்கலாம்” என்று அவன் சட்டைப் பையில் கைவிட்டார். சட்டைப் பையில் பூட்டு!

கையும், களவுமாக பிடிபட்டவன், அவரிடம் மன்னிப்பு கேட்டான்.
“ஏண்டா, எடுத்தே?” என்றார்.

“பசி, பழைய சாமான் கடையில் போட்டால் ரெண்டு ரூபாய் கிடைக்கும். சாப்பிடலாம்ன்னு எடுத்தேன்” என்று உள்ளதைச் சொன்னான்.

அப்போது வெளியே வந்த வீட்டுக்காரர், கதவில் பூட்டு இல்லாததைப் பார்த்து விட்டார். தெருவில் என்.எஸ்.கிருஷ்ணன் பையனுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அவன்தான் பூட்டை எடுத்திருப்பான், அதனால்தான் என்.எஸ்.கே., சிறுவனைப் பிடித்துக் கொண்டார் என்ற எண்ணத்தில் ஆத்திரத்தோடு வந்தார், பூட்டைப் பறி கொடுத்த வீட்டுக்காரர்.

என்.எஸ்.கே.வை கெஞ்சும் தோரணையில் பார்த்தான் பையன்.
எதிர் வீட்டுக்காரர் வந்ததும், என்.எஸ்.கே. சிரித்தபடி, “வாங்க… வாங்க… பூட்டைத் தேடுறீங்களா? ஒரு பையன் தூக்கிட்டு ஓடினான்.

இந்தத் தம்பி, அவனை விரட்டிப் பிடித்துப் பூட்டைப் பறிச்சிக்கிட்டு வந்தான். நான் வாங்கி வைச்சிருக்கேன்.

இந்தாங்க பூட்டு, பாவம், பையன் கஷ்டப்பட்டான். அதுக்காக ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள்…” என்றவர், பையனிடம், “டேய், தம்பி பைசா கொடுப்பாரு; போயி வாங்கிட்டுப் போ!” என்றார்.

சிறுவனுக்குப் பசி நீங்க இரண்டு ரூபாய்க்கு வழி பிறந்தது.

– கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்று நூலிலிருந்து.

Comments (0)
Add Comment