ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது!

 – சீயான் விக்ரம் உருக்கம்

இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகிறது.

சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திரப் பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ.ஆ.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பிவிஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், ”கோப்ரா படம் எனக்கு ஸ்பெஷல். நான் விக்ரம் சார் படத்தை பார்த்து வளர்ந்தவள். அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், அவர் நடிக்கும் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நடிகை மிருணாளினி ரவி பேசும்போது, ”2019 ஆம் ஆண்டில் சின்ன சின்ன வீடியோக்கள் மூலம் கவனத்தை கவர்ந்து வந்த என்னை, இயக்குநர் அஜய் சார் தொடர்பு கொண்டு, ‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.

சீயான் விக்ரமின் தீவிர ரசிகையாக இருந்த நான் அவருடன் இணைந்து நடித்தது இப்போது வரை கனவாகவே இருக்கிறது” என்றார்.

நடிகர் துருவ் விக்ரம் பேசும்போது, ”மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘கோப்ரா’ படத்தின் பணிகள் தொடங்கும் போது அப்பாவிடம், ‘கோப்ரா’ என்ன ஸ்பெஷல்? என கேட்டேன்.

அஜயின் விஷன், கிரியேட்டிவிட்டி, திரையில் சொல்லும் உத்தி. இந்த காலகட்டத்தில் திரையரங்கத்தில் ஒரு திரைப்படம் அதிக நாட்கள் ஓடுவது என்பது அரிதாகிவிட்டது. இந்தப் படம் அதனை மாற்றும் என பதிலளித்தார்.

அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் ‘மகான்’ படத்தில் பணியாற்றும்போது ஒரு விசயத்தை உன்னிப்பாக கவனித்தேன்.

நீளமான காட்சி ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்தோம். ஒரு புள்ளியில் எனக்கு சோர்வு ஏற்பட்டது. ஆனால் அப்பா சோர்வே இல்லாமல், உற்சாகத்துடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம், “என்னப்பா.. எனக்கு எனர்ஜி போய்விட்டது. சோர்வாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் உற்சாகத்துடன் வளைய வருகிறீர்களே எப்படி?” எனக் கேட்டேன். அதற்கு அவர், ”இந்த தொழிலில் ஒரு இடத்தை பெறுவதற்காக கடுமையான போராட்டத்தை சந்தித்திருப்பதால்.. இந்த உற்சாகம் தொடர்கிறது என நினைக்கிறேன்” என பதிலளித்தார்” என்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், ”சீயான் விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. அது இந்த ‘கோப்ரா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது” என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில், ”இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொரு படமும் வித்தியாசமான ஜானரில் இயக்கியிருந்தார்.

‘கோப்ரா’ படத்தையும் அவர் வழக்கமானதைக் காட்டிலும் புதிதாக இயக்கியிருக்கிறார்.

என் நடிப்பில் தயாரான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த படத்திற்காக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பும், அவர்கள் காட்டும் அன்பும் பிரமிக்கவைத்தது” என்று நெகிழ்வுடன் பேசினார்.

Comments (0)
Add Comment