ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கக் கூடிய வீரர்கள்!

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளுக்குமே கிட்டத்தட்ட சமமான வெற்றி வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக இந்தத் தொடரில் பேட்ஸ்மேன்கள் தங்கள் அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டி20 தொடர் என்பதால் எல்லா போட்டிகளிலுமே அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இந்தத் தொடரில் இடம் பிடித்துள்ளனர்.

அதே நேரத்தில் இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளிலும் அதிரடியாக ரன்களை குவிக்கக்கூடிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வருகிற 28-ம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் எதிர்பார்த்த சில வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறாதது சற்று வருத்தம் அளித்தாலும், இரு அணிகளுமே பலம் வாய்ந்த வீரர்களை கொண்டிருப்பதால் ஒரு சரவெடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

இப்போது இந்தத் தொடர் முடிவடையும் நேரத்தில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இடம் பெற அதிக வாய்ப்புள்ள வீரர்களை குறித்து பார்க்கலாம்.

முதலில் நமது இந்திய அணியின் கேப்டன் ஹெட்மேன் ரோஹித் சர்மா, மார்ட்டின் கப்டிலுடன் டி20 தரவரிசையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு போட்டியிட்டு வருகிறார். தற்பொழுது மார்ட்டின் கப்டில் அதிக ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தத் தொடரில் குறைந்தது ரோஹித் சர்மா ஐந்து போட்டிகளில் விளையாடுவார். இந்த போட்டிகளில் ரோஹித் சர்மா ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன்களை குவித்தால் மார்டன் கப்டிலை பின் தள்ளி டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடம் பிடிப்பார்.

ரோஹித் சர்மாவுக்கு முதலிடம் வாய்ப்பு

ரோஹித் சர்மாவுக்கும் மார்ட்டின் கப்டிலுக்கும் வெறும் 10 ரன்களே வித்தியாசம் உள்ளன. இந்த தொடரில் ரோஹித் சர்மா அதிக ரன்களை குவித்தால் மார்ட்டின் கப்டில் மீண்டும் முந்தாத அளவுக்கு முன்னிலை வகிக்கும் வாய்ப்புள்ளது.

அதேபோல டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் குப்தில் 172 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

163 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆகையால் ரோஹித் சர்மா இந்த தொடரில் 10 சிக்சர்களை விளாசினால் குப்திலை பின்தள்ளி அதில் சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உண்டு.

பாபர் அசாம்

அடுத்ததாக இந்த தொடரில் அதிக ரன்களை குவிப்பார் என்று கருதப்படும் வீரர், தற்பொழுது உலகில் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவரான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.

கடந்த இரண்டு வருடங்களாகவே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் விரைவில் பல சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரை தொடர்ந்து பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது.

முகமது ரிஸ்வான் இன்னும் கிரிக்கெட்டில் பல உயரங்களை தொடவில்லை என்றாலும் இந்த தொடரில் ஒரு முக்கிய வீரராகவே கருதப்படுகிறார்.

அடுத்ததாக இந்த பட்டியலில் இடம் பெறுபவர் ஆப்கானிஸ்தானின் அதிரடி பேட்ஸ்மேன் ஹஸ்ரத்துல்லா ஜசாய். இவரது ஸ்ட்ரைக்-ரேட் கிட்டத்தட்ட 150 என்ற அளவில் உள்ளது.

மேலும் இதுவரை ஒரே ஒரு டி20 சதத்தை பதிவு செய்துள்ள இவர் இப்பொழுது அதிரடியான ஃபார்மில் இருக்கிறார்.

இவர் பொதுவாகவே களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொள்வார், அதற்குள் அவர் அவுட்டாகவில்லை என்றால் பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமைவார்.

ஷாகிப் அல் ஹசன்

அடுத்து அந்த பட்டியலில் இடம் பெறுபவர் உலகின் ஒரு சிறந்த ஆல்ரவுண்டரான வங்காளதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன்.

இவர் இந்த தொடரில் மீண்டும் வங்காளதேச அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இதுவரை வங்காளதேச அணி கடந்த நான்கு ஆசிய கோப்பைகளில் மூன்றில் இறுதி போட்டிக்கு வந்துள்ளார்கள். இந்த முறை நிச்சயம் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் விளையாடுவார்கள்.

இந்தத் தொடரின் முடிவில் தான் எந்த வீரர் அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் இருப்பார் என்பது தெரியும். ஆனால், எல்லா ஆட்டங்களிலும் மேற்குறிப்பிடப்பட்ட வீரர்கள் தங்களது சிறந்த பங்களிப்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– இளவரசன்

Comments (0)
Add Comment