– விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுரை
தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படும் நோய், கேரளம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தக்காளி காய்ச்சலை தடுக்க குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை.
அறிகுறி தோன்றியதிலிருந்து 5 முதல் 7 நாள்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், “கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் முதன்முதலில் தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டது.
ஜூலை 26-ம் தேதி வரை, 5 வயதுக்குட்பட்ட 82-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசு மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸ் நோய் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகம், ஹரியாணா மற்றும் ஒடிசாவில் பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை ஏற்படுத்தி உள்ள புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஒடிசாவில் 26 குழந்தைகளுக்கு (1-9 வயது) இந்த நோய் இருப்பதாகவும்,
இன்றுவரை, கேரளம், தமிழ்நாடு, ஹரியாணா மற்றும் ஒடிசாவைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது.
இந்த நோய் பெரும்பாலும் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள பெரியவர்களையே பாதிக்கிறது.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது?
தக்காளி காய்ச்சல் ஒரு வைரஸ் நோய். “தக்காளி காய்ச்சல்” என்ற பெயர் இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும், உடலில் பல இடங்களில் தக்காளி வடிவ கொப்புளங்கள்.
சிவப்பு நிறத்தில் சிறிய கொப்புளங்களாகத் தொடங்கி, பெரிதாகும்போது தக்காளியை போன்றே இருக்கும்.
தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படும் முதன்மை அறிகுறிகள், காய்ச்சல், தடிப்புகள் மற்றும் மூட்டுகளில் வலி உள்ளிட்ட பிற வைரஸ் தொற்றுகளைப் போலவே இருக்கும்.
தோலில் தடிப்புகள், தோலில் எரிச்சல், வாயில் புண்கள் ஏற்படுத்தும். மற்ற வைரஸ் தொற்றுகளைப் போலவே, அதிகமான பசி, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், நீரிழப்பு, மூட்டுகளில் வீக்கம், உடல்வலி, அடிக்கடி தொண்டையில் புண் ஏற்படுதல் மற்றும் பொதுவான காய்ச்சல் போன்றவை தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகள்.
என்ன முன்னெச்சரிக்கைகள் தேவை?
தக்காளி காய்ச்சலை தடுக்க குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசிகள் அல்லது தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. சிகிச்சையானது மற்ற வைரஸ் நோய்த் தொற்றுகளைப் போலவே உள்ளது.
அதாவது நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க மற்ற வைரஸ் நோய்த் தொற்றுகளைப் போலவே தொற்று அறிகுறி தோன்றியதிலிருந்து 5 முதல் 7 நாள்களுக்குப் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்துதல், தடுப்புக்கான சிறந்த தீர்வாக,
சரியான சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தேவைகள் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், அத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தையின் பொம்மைகள், உடைகள், உணவு அல்லது பிற நோய்த்தொற்று இல்லாத குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளாமல் கண்காணிப்பது ஆகியவை சிறந்த தடுப்பு முறை ஆகும்.
தொற்று பாதிக்கப்பட்டோர் சரியான ஓய்வு எடுத்துக்கொள்ளுதல், திரவங்கள் உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுதல் மற்றும் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு பாராசிட்டமால் மற்றும் பிற ஆதரவு சிகிச்சைகள் மட்டுமே அளிப்பது.
இந்த வைரஸ் குரங்கு அம்மை, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல என தெரிவித்துள்ள மத்திய அரசு, மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பிவைத்தாலும் முடிவுகள் வருவதற்கு 2 முதல் 4 வாரங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.