#பாய்காட்_பாலிவுட் ட்ரெண்ட் தாக்கம் உண்மையா?

எந்தவொரு துறையானாலும் அதனை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிற, கடுமையாகப் பாதிக்கிற, அடிப்படையை தகர்க்கிற வகையில் தாக்கம் பலவிதங்களில் அமையும். அதற்கு திரைத் துறையும் விதிவிலக்கல்ல.

கோவிட்-19 காலகட்டத்தில் தமிழில் வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’, மீண்டும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்று இந்தியா முழுக்கவிருந்த திரைத்துறையினரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அது, தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரையுலகினைச் சார்ந்தோருக்கும் நம்பிக்கை அளித்தது. ஆனால், பெரியண்ணனாக செயல்படும் இந்தி திரையுலகம் மட்டும் அப்படியொரு சூழலை இதுவரை சந்திக்கவில்லை.

இந்த சூழலில்தான் #பாய்காட்பாலிவுட் ட்ரெண்ட் விஸ்வரூபமெடுத்து புதிதாக வெளியாகும் படங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

சில சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட படத்தைப் புறக்கணிக்குமாறு ஹேஷ்டேக் இடுவதால் அதன் வெற்றி தோல்வியாக மாறுமா?

பாலிவுட்டின் சரிவு!

1970களில் தமிழ்நாட்டில் இந்திப் படங்களின் தாக்கம் பெருமளவில் இருந்தது. பலகட்டமாக நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு தமிழுணர்வு பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய காலகட்டத்தில், தமிழ் படங்களை பார்ப்பதைவிட, தமிழ் திரையிசைப் பாடல்களைக் கேட்பதைவிட இந்திப் படங்களின், பாடல்களின் மீதான மோகம் அதிகமிருந்தது.

பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் உள்ளிட்ட சில இயக்குனர்களின் வரவு அதனை மாற்றியது; குறிப்பாக இளையராஜாவின் இசைக்கு அதில் பெரும்பங்குண்டு.

சமீபகாலமாக கிட்டத்தட்ட அதே போன்றதொரு நிலைமை வட இந்தியாவில் நிலவி வருகிறது. கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக தெலுங்கில் தொடங்கி தமிழ், மலையாளம், கன்னடம் என்று நான்கு திரையுலகைச் சார்ந்த படங்களும் சராமாரியாக இந்தியில் ‘டப்’ செய்யப்படுகின்றன.

இந்தி திரைப்பட தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை அதிகமிருந்த காரணத்தால் இவை அதிகளவு பார்வையாளர்களை அதிக முறை சென்றடைந்தன.

அதுவே தென்னகப் படங்களின் மீது வட இந்திய மக்கள் கவனம் திரும்பக் காரணமானது. இப்படங்கள் அனைத்துமே ஹீரோயிசம் சார்ந்திருந்தன; மேல்தட்டு மக்கள் மட்டுமல்லாமல் சாதாரண, நடுத்தரக் குடும்பங்களின் பிரச்சனைகள் சார்ந்து இவற்றின் உள்ளடக்கம் அமைந்திருந்தது. இந்தி திரையுலகம் இவற்றை மறந்ததாலேயே பெரும் சரிவைச் சந்தித்தது.

கான்களின் ஆதிக்கம்!

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, வினோத் கன்னா, ஜிதேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி போன்றோரின் ஆதிக்கம் மங்கியபோது அமீர்கான், சல்மான் கான், ஷாரூக் கான் படங்கள் புகழை ஈட்டின.

பின்னாட்களில் கோவிந்தா இவ்வரிசையில் சேர்ந்துகொண்டார். ஆனாலும் ‘கான்’ பின்னொட்டு கொண்ட அமீர், சல்மான், ஷாரூக் மூவருமே பாலிவுட்டின் அரசர்களாக கொண்டாடப்பட்டனர்.

தனி மனித துதியை நாசூக்காக முன்னிறுத்துகிற ‘ஹீரோயிசத்தை’ கையில் எடுத்துக் கொண்டார் அமீர் கான். நகைச்சுவையும் வெகுளித்தனமும் கூடவே சாமர்த்தியமும் மிக்க பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்தார் ஷாரூக்.

கட்டுக்கோப்பான உடலமைப்புடன் நாற்பதுகளிலும் காதல் நாயகனாகவே வலம் வந்தார் சல்மான். ஆனாலும் ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ பாதிப்பில் இருந்து கடந்த இருபதாண்டுகளாக இந்தி திரையுலகம் வெளிவரவே இல்லை.

2010 வாக்கில் மீண்டும் ‘போக்கிரி’ படத்தின் இந்தி ரீமேக் ஆன ‘வான்டெட்’ மூலமாகவே தனது ஹீரோயிச அந்தஸ்தை மீட்டெடுத்தார் சல்மான். தொடர்ந்து அது போன்ற படங்களில் நடித்தார்.

ஆனாலும், திரையில் தனது புஜபலத்தைக் காட்ட கதையில் இடமிருக்க வேண்டுமென்பதை மறந்தேபோய்விட்டார்.

’3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘தலாஷ்’, ‘டங்கல்’ என்று விதவிதமாக கதைத் தேர்வுகளில் கவனம் செலுத்திய அமீர் கான், சாதாரண மனிதர்களின் நம்பிக்கைகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிற காட்சிகளில், கதைகளில் நடித்தது இந்துத்துவ ஆதரவாளர்களிடம் வெறுப்பை விதைத்தது.

மேலே சொன்ன படங்கள் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்ததால் எதிர்ப்புகளை மீறி வெற்றி பெற்றன.

ஆனால், அமீர் கவுரவ வேடத்தில் நடித்த ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ கவனிக்கப்பட்டாலும், அமிதாப்புடன் அவர் இணைந்து நடித்த ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ மண்ணைக் கவ்வியது.

2015க்கு பிறகு, ஷாரூக் நடித்த ‘ஃபேன்’, ‘ரயீஸ்’ போன்ற படங்கள் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டிருந்தாலும் வெகுஜன ரசனையைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் தோல்வியுற்றன.

தென்னகப் படங்களில் இருக்கும் ஹீரோயிசத்தை கேலி செய்கிறேன் பேர்வழி என்று ஷாரூக் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ஸும் சரி, கிட்டத்தட்ட நம்மூர் படங்களின் ஹீரோக்கள் போலவே நடித்த ‘தில்வாலே’வும் சரி, அவரது முந்தைய பட வசூலைத் தாண்டவில்லை.

இப்படி ஷாரூக், சல்மான், அமீர் என்று மூன்று ‘கான்’களின் ஆதிக்கம் சரிவைச் சந்திக்க காரணம் அவர்களது படத் தேர்வுகள் மட்டுமே.

இந்த நிலையில்தான், இவர்களது ஆதிக்கத்தை திரையுலகில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் இவர்கள் நடித்த படங்களைப் புறக்கணிக்க வேண்டுமென்ற குரல் பூதாகரமாகியிருக்கிறது.

அதாகப்பட்டது, இந்துத்துவ அமைப்புகளால் இவர்களது படங்களின் வெற்றி நீர்த்துப்போவதாக கிசுகிசுக்கள் மட்டுமே இருந்த சூழலில் அவை உண்மைதான் என்ற தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சமீபகாலமாக சில இந்திப்படங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஹேஷ்டேக் யுத்தம் அதையே காட்டுகிறது.

புறக்கணிப்பால் தோல்வி வருமா?

கோவிட்-19க்கு முன்பும் சரி, பின்னரும் சரி, ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப் போடுகிற ஒரு கதையில் சல்மான் நடிக்கவே இல்லை.

கிட்டத்தட்ட நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது ஷாரூக் நடிக்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவரத் தயாராக இருக்கின்றன.

அமீரின் ‘லால் சிங் சத்தா’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூல் குறைவை எதிர்கொண்டிருக்கிறது.

இந்த நிலையிலேயே, ‘கான்’ நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாமல் ஆளும் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்கும் இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலரது படங்களைப் புறக்கணிக்க வேண்டுமென்ற குரல்கள் தொடர்ந்து ஒலிப்பது நம் கவனத்தை ஆக்கிரமித்திருக்கிறது.

ஒரு திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்காக ஆதரவைத் திரட்டுவதும் சரி, அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதும் சரி, குறிப்பிட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால், தற்போது அமீர்கான் நடித்த ‘லால் சிங் சத்தா’ தோல்வியுற அது மட்டுமே காரணமல்ல.

1993இல் வெளியான ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற ஆங்கிலப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இருந்தபோதும், இந்தியச் சூழலுக்கேற்ப கதையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதே அப்பட வசூலில் பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம்.

2022இல் பெரியளவில் எதிர்பார்ப்புக்கு உள்ளான அஜய் தேவ்கன் நடித்த ‘ரன்வே 34’, டைகர் ஷெராஃபின் ‘ஹீரோபண்டி 2’, ரன்வீர் சிங்கின் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’,

அக்‌ஷய் குமாரின் ‘சாம்ராட் பிருத்விராஜ்’, ‘பச்சன் பாண்டே’ மற்றும் தற்போது வெளியான ‘ரக்‌ஷா பந்தன்’ உள்ளிட்ட இந்திப் படங்கள் ரசிகர்களிடையே ஆதரவை இழக்க அப்படங்களின் உள்ளடக்கமே காரணம்.

அதே நேரத்தில், திரையரங்குகளுக்கு வரும் அளவுக்கு பார்வையாளர்களிடம் பணம் இல்லை என்ற இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் கருத்தையும் கூட இவ்விடத்தில் கூர்ந்து நோக்க வேண்டும்.

ஒருவேளை படத்தின் உள்ளடக்கத்திற்கு எதிராகப் பொதுவெளியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், அதனால் உண்டான பாதிப்பு என்னவென்று கவனிக்கலாம்.

இவற்றில் சில மட்டுமே ஹேஷ்டேக் அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கின்றன. ‘கேஜிஎஃப்’, ‘ஆர்ஆர்ஆர்’ பட டப்பிங் பதிப்புகள் வட இந்தியாவில் பெருவெற்றி பெற்றிருப்பதை நோக்கினால் இந்த உண்மை புரியும்.

காஷ்மீரி பண்டிட்களுக்கு ஆதரவான குரலை வெளிப்படுத்திய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பெருவெற்றி பெற இந்துத்துவ ஆதரவாளர்கள் மட்டுமே காரணமில்லை.

அப்படம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டதால் அவர்கள் கண்டு ரசித்தனர் என்பதே உண்மை. இஸ்லாமிய ஆதரவாளர்களில் சிலர் அதற்கெதிராக குரல் கொடுத்தாலும் பலர் அதனை மவுனமாகப் புறக்கணித்தனர். அதனால் பட வசூலில் என்ன பாதிப்பு நேர்ந்தது?

ஆதலால், ஒரு திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டுமென்ற வற்புறுத்தலால் அது பெரிய பாதிப்பைச் சந்திக்கும் என்பது உண்மையல்ல.

சொல்லப்போனால், ஒரு படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்கு முன்னரே பெரிய லாபத்தை தரும் ‘முன்பதிவு’களை அது தடுத்து நிறுத்தும்.

உண்மையிலேயே ஒரு படம் நீண்ட காலம் மக்களால் திரும்பத் திரும்ப ரசிக்கத்தக்கதாக அமைந்தால் இந்த ‘புறக்கணிப்பை’ எளிதாக கடந்துவிடும்.

என்ன செய்யலாம்?

‘கான்’களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலமாக, இந்தி திரையுலகில் பிரபல தாதா தாவூத் இப்ராஹிமின் முதலீடுகளை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்றும் ஒரு கருத்து நீண்டகாலமாக முன்னிறுத்தப்படுகிறது.

குறைந்தபட்சமாக, இதுவரை வெளிவந்த தகவல்கள் மூலமாக அறுபதுகளில் தொடங்கி இன்றுவரை இந்தி திரையுலகுக்கும் நிழலுலகுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிய வருகிறது.

ஒருவேளை இந்தியாவில் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இவ்வழக்கம் இருந்து வரலாம்.

பிற மொழிகள் சார்ந்த திரையுலகினரும் இவ்வளையத்துக்குள் அடங்குவார்கள்.

வெறுமனே நடிகர் நடிகைகளையோ, தயாரிப்பாளர்களையோ, இயக்குனர்களையோ பின்னுக்கு இழுப்பதன் மூலமாக அந்த ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.

எந்தவொரு தொழிலிலும் எத்தகைய வடிவிலும் சட்டவிரோதமாகப் புழங்கும் பணத்தை தடுக்க முனைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

ஹேஷ்டேக் யுத்தம் அவ்வாறு நிகழ்த்துமென்று பூச்சாண்டி மட்டுமே காட்டும்; அது துரும்பைக் கிள்ளிப்போடும் என்பதைத் தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

எப்படி ‘பான்’ இந்திய படங்கள் என்ற முத்திரைக்காக உருவாக்கப்படும் படங்கள் உள்ளடக்கத்தில் சத்து இல்லாமல் வீழ்ச்சியைச் சந்திக்கின்றனவோ, அது போலவே உலகமெங்கும் உள்ள இந்தியர்களுக்காக படமெடுக்கிறோம் என்றியங்கும் இந்தி திரையுலகமும் சரிவைச் சந்திக்கிறது.

அதனை மாற்ற ஒரு படத்தின் கதையிலும் காட்சியமைப்பிலும் தொழில்நுட்ப அம்சங்களிலும் கவனம் செலுத்துவதே முதன்மையான தேவை.

’அதெல்லாம் இல்லை’ என்பவர்கள், தற்போதைய பாஜக அரசை ஆதரிக்கும் கங்கனாவின் ‘தக்கட்’, அக்‌ஷய் குமாரின் சமீபத்திய மூன்று படங்கள் பெருந்தோல்வியை வெற்றிகளாக மாற்றத் தவறியது ஏன் என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்?!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment