தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு டெல்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளா்கள், தன்னார்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் மின்னஞ்சல் முகவரிக்கும், ‘மாநில கல்வி கொள்கை உயா் நிலைக் குழுவிற்கு செப்டம்பர் 15 வரை கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில கல்விக் கொள்கைக் குழுவுக்கு கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி வரை கருத்துகள், ஆலோசனைகளை பெற முடிவு செய்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கருத்துகள், ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு மண்டல அளவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.