தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திரம், காமெடி என அனைத்து கேரக்டரிலும் அசத்தியவர் டி.எஸ்.பாலையா.
எந்த கேரக்டருக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் தனித்திறமை டி.எஸ்.பாலையாவின் ஸ்பெஷல்!
திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா என்பதன் சுருக்கம்தான் டி.எஸ்.பாலையா.
சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி நாடக வாழ்க்கையை ஆரம்பித்த டி.எஸ்.பாலையா, ‘சதிலீலாவதி’ மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
எல்லீஸ்.ஆர்.டங்கன் இயக்கிய இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தது எம்.கே.ராதா.
வில்லனுக்கு துணை போகும் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தார் எம்.ஜி.ஆர். இதில் வில்லனாக நடித்தார் பாலையா.
இந்தப் படம் கவனிக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து வில்லன் வேடங்கள் குவிந்தன.
அலட்டல் இல்லாமல், பார்வையிலேயே வில்லத்தனத்தை இயல்பாகவே காண்பிக்கும் பாலையா, பிறகு பிஸி நடிகரானார்.
ஹீரோ வாய்ப்புகளும் வந்தன. இருந்தாலும் அவர் இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது காமெடி கலந்த அவருடைய குணசித்திர கேரக்டர்களுக்காகத்தான்.
இப்போதுவரை பாலையா என்றதும் ஞாபகத்துக்கு வருவது, ஶ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’தான்.
இதில் நாகேஷ் சொல்லும் கதையை கேட்கும் பாலையா, காண்பிக்கிற எக்ஸ்பிரசன்கள் அபாரம்.
அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசனையாக படமாக்கப்பட்டு இருந்தது.
இந்த கேரக்டரில் பாலையாவை நடிக்க வைத்தது பற்றி ஶ்ரீதர் அளித்த பேட்டி ஒன்றில், “டி.எஸ்.பாலையாவின் தீவிர ரசிகன் நான். அவருக்கு ஏற்ற கேரக்டரை உருவாக்கி நம் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பேன்.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. கதை சொன்னேன். நடிக்கச் சம்மதித்தார். ஆனால், சனி, ஞாயிறுகளில் குதிரை ரேஸுக்கு செல்லும் பழக்கம் அவருக்கு இருந்தது. அதனால், அன்று படப்பிடிப்புகளுக்கு வரமாட்டார். இது எல்லோருக்கும் தெரியும்.
இந்த படத்தில், உங்களை விட்டால் வேறு ஒருவரை நடிக்க வைக்க விரும்பவில்லை. நீங்கள் இந்தப் படத்துக்காக உங்கள் பழக்கத்தை மாற்றி, சனி, ஞாயிறுகளில் ஷூட்டிங்கிற்கு வரவேண்டும் என்றேன். சரி என்றார். சொன்ன மாதிரியே தனது பழக்கத்தை மாற்றிக் கொண்டார்” என்று கூறியிருக்கிறார்.
பர்மா ராணி, அண்ணாவின் வேலைக்காரி, ஏழைபடும் பாடு, ஊட்டி வரை உறவு, தூக்குத் தூக்கி, மதுரை வீரன், திருவிளையாடல் என டி.எஸ்.பாலையாவின் நடிப்பை விரிவாக வியக்க ஏராளமான படங்கள் இருக்கின்றன.
அவர் சிறந்த பாடகரும் கூட. ஆரம்ப காலத்தில் சில படங்களில் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது தெரிந்ததுதான். ஆனால், தெரியாத விஷயம், அவர் ஒரு படத்துக்கு கதை, வசனம் எழுதினார் என்பது!
உத்ரா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘ஸ்வீகாரம்’.
சிவாஜி, தங்கவேலு, எம்.கே.ராதா உட்பட பலர் நடித்தனர்.
நாராயண் இயக்கிய இந்தப் படத்தில் பாலையா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதோடு, இந்தப் படத்தின் கதை, வசனத்தையும் அவரே எழுதியிருந்தார். ஆனால், இந்தப் படம் வெளிவரவே இல்லை. வந்திருந்தால் நடிப்பில் மிரட்டிய டி.எஸ்.பாலையாவின் கதை, வசனத் திறமையையும் அறிந்திருக்க முடியும்.
– அழகு