துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை முழுமையாக வெளிவரட்டும்!

நினைவுள்ளவர்கள் அந்த நாளை லேசில் மறந்துவிட முடியுமா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது அன்றைக்குத் தான் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது.

அன்றைக்கு மட்டும் துப்பாக்கிச்சூட்டின் மூலம் உயிரிழந்தவர்கள் மட்டும் 13 பேர். பிறகு மருத்துவமனையில் சிலர் இறந்தார்கள்.

அதைத் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தவர்கள் பதறிப் போனார்கள். எதற்கு நியாயமான காரணத்திற்காகத் தொடர்ந்து நூறு நாட்கள் வரை போராடியவர்கள் மீது என்ன காரணத்தால் இப்படியொரு தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் நிகழ்த்தப்பட்டது.

போராட்டத்திற்கு எதிர்வினை இத்தனை உயிர்ப்பலிகளா?

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொண்டதாகக் கேஷூவலாகப் பதில் சொன்னார் அன்றைக்குக் காவல்துறையைத் தன் கைவசம் வைத்திருந்தவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரோ சம்பவம் நடந்த அன்று வெளியூரில் இருந்தார்.

அப்படி என்றால் துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்டது யார்? இத்தனை உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்பது யார்?

வழக்கமாக அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தைப் போல இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதியான அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

1200-க்கும் மேற்ப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டார்கள்.

அறிக்கையும் அரசிடம் அளிக்கப்பட்டது.

எப்போது? கடந்த மே மாதம் 18-ம் தேதி அன்றே விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் என்ன தான் சொல்லப்பட்டிருந்தது? யார் மீநு நடவடிக்கை எடுக்க அந்த ஆணையம் பரிந்துரை செய்திருந்தது?

இப்படிப் பல கேள்விகள் எழுந்தாலும், அறிக்கை வெளியிடப்படவில்லை.

இத்தனைக்கும் இந்தச் சம்பவம் குறித்து கடந்த தேர்தலில் அழுத்தமாகப் பேசியிருந்தது தி.மு.க.

மௌனமான இந்த நிலையில் அந்த அறிக்கையின் முக்கியமான சில பகுதிகளை வெளியிட்டிருக்கிறது ஃப்ரண்ட்லைன் இதழ்.

வெளியிட்டப்பட்ட அந்த அறிக்கை – தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. மிகவும் கொடூரமான நடவடிக்கை என்று விமர்சித்திருக்கிறது.

சிலருடைய தலைக்குப் பின்னால் இருந்து சுடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு போலீஸ்காரர் தானியங்கித் துப்பாக்கியால் சுட்டிருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

அதோடு போராட்டம் நடத்திய மக்கள் துப்பாக்கிச்சூடு நடக்கும் வரை எந்தவிதமான வன்முறையில் இறங்கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிற அந்த அறிக்கை 17 அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியிருக்கிறது.

அந்த அதிகாரிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரும் அடக்கம்.

இன்னும் அந்த அறிக்கை முழுமையாக வெளியாகும் வரை கூடுதலான பல விபரங்கள் வெளியே வரலாம்.

ஆனால், அச்சு ஊடகம் மூலமாக வெளியான அறிக்கை தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலான விவாதங்களை எழுப்பியிருக்கிறது. சிலர் எப்படி இந்த அறிக்கை ‘லீக்’ ஆனது என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு அறிக்கை பொதுவெளியில் கசிந்ததால் தான் மூன்று மாத கால இடைவெளிக்குப் பிறகு அந்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் முன்வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் தமிழகச் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கரும்புள்ளியைப் போன்று நிகழ்ந்திருக்கிற துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை அறிக்கை பலவற்றை அம்பலப்படுத்தலாம்.

பலருடைய கவனக் குறைவையும், அவசரத்தையும் சுட்டிக்காட்டலாம். அதே சமயம் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பதும் வெளியாக வேண்டும்.

இதன் பின்னணியில் எத்தகைய அதிகார சக்திகள் இருந்திருந்தாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை பாரபட்சம் இல்லாமல் எடுக்கப் பட வேண்டும்.

தூத்துக்குடியில் அன்று திரண்டிருந்த மக்கள் அனைவருமே இந்த வெளிப்படையான கொடூர நடவடிக்கைக்குச் சாட்சியங்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இதை முன்வைத்துத் தற்போதைய தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதையும் மறந்துவிட முடியாது.

இனியும் காலதாமதம் இல்லாமல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அதில் குறிப்பிட்டப் பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

இதில் நிகழும் தாமதம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கே சாதகமாக அமைந்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் இனியும் தி.மு.க ஆட்சி தாமதிக்கக் கூடாது.

– யூகி

Comments (0)
Add Comment