ஜாதியை ஒழிக்க ஒட்டுமொத்த சமுதாயமும் கிளா்ந்தெழ வேண்டும்!

– காங்கிரஸ் மூத்த தலைவர் மீரா குமார் வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் இந்திர குமார்  என்ற ஒன்பது வயது தலித் மாணவா், பள்ளியில் தண்ணீா் பானையைத் தொட்டதற்காக ஆசிரியா் சைல் சிங் அவரை தாக்கினார். இதில், இந்திர குமார் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த நிகழ்வை மேற்கோள்காட்டி, முன்னாள் மக்களவைத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மீரா குமார் டெல்லியில் செய்தியாளா்களிடம் பேசினார்.

அப்போது, “ஜாதியை ஒழிக்க வேண்டுமெனில், ஒட்டுமொத்த சமுதாயமும் கிளா்ந்தெழ வேண்டும். இதற்காக, மாற்றத்தை எதிர்நோக்கும் இளைஞர் சமுதாயம் முன்வர வேண்டும்.

ஜாதி, மதம், நிறம், பொருளாதாரப் பின்னணி அடிப்படையிலான பாரபட்சத்தை முற்றிலுமாகக் களைய வேண்டும். அப்போது தான் சாதி, சமய வேறுபாடுகளற்ற சமத்துவ இந்தியா உருவாகும்” என்று கூறினார்.

Comments (0)
Add Comment