வடமாநிலங்களில் கனமழை: மீட்புப் பணிகள் தீவிரம்!

வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், ஹிமாசல பிரதேச மாநிலத்தைப் புரட்டிபோட்டுள்ளது. மண்டி, காங்ரா, சம்பா ஆகிய மாவட்டங்கள் அதிகபட்ச சேதங்களைச் சந்தித்துள்ளன.

இம்மாநிலத்தில் மழை-வெள்ள சம்பவங்களில் 22 போ் உயிரிழந்துள்ளனர்.மண்டி மாவட்டத்தின் பாகி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாயமான 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள காங்ரா மாவட்டம், நுா்புா் பகுதியில் சக்கி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ரயில்வே பாலத்தின் இரு தூண்கள் இடிந்து விழுந்தன.

இதேபோல் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன், தேக்ரி, பெளரி உள்ளிட்ட இடங்களில் இடி-மின்னலுடன் பெருமழை கொட்டித் தீா்த்தது.

பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இம்மாநிலத்தில் மழை-வெள்ளத்துக்கு 4 போ் பலியாகினா். மாயமான மேலும் பலரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் தொடா்மழை காரணமாக மகாநதி மற்றும் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 763 கிராமங்களைச் சூழ்ந்துள்ளது. சுமார் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மழை தொடா்பான சம்பவங்களில் இதுவரை 6 போ் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கனமழை நீடித்து வரும் நிலையில், ஜாா்க்கண்ட் அணைகளிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒடிஸாவின் வட மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுபா்ணரேகா, பைதராணி ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.

இதனால், பாலாசோர், மயூா்பஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனா்.

Comments (0)
Add Comment