102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது ஏன்?

– மத்திய அரசு விளக்கம்

பொய் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

அந்த விதிமுறைகளின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சில யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது.

அவ்வப்போது நடந்து வந்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கடந்த 18-ம் தேதி 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன.

இவற்றில் ஒரு சேனல், பாகிஸ்தானில் இருந்து இயங்கி வருகிறது. இத்துடன் மொத்தம் 102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கான காரணங்கள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக உயரதிகாரிகள், “முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள், இந்திய பார்வையாளர்களை குறிவைத்து பொய்யான செய்திகளை பரப்பி வந்தன.

மத வெறுப்புணர்வை தோற்றுவித்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் அவதூறு செய்திகளை வெளியிட்டன.

உதாரணமாக, இந்தியாவில் அணுஆயுத வெடிவிபத்து நடந்ததாகவும், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டதாகவும், துருக்கி மீது இந்தியாவும், எகிப்தும் இணைந்து படையெடுத்ததாகவும் பொய்ச்செய்தி வெளியிட்டன.

குறிப்பாக, ஏ.எம்.ரஸ்வி என்ற சேனல், அஜ்மீர் தர்கா மீது ராணுவ தாக்குதல் நடந்ததாகவும், ஒரு கோவில் மீது முஸ்லிம்கள் இஸ்லாமிய கொடியை பறக்க விட்டதாகவும், ஒரு பாகிஸ்தான் சேனல், குதுப்மினார் மசூதி இடிக்கப்பட்டதாகவும் பொய்ச்செய்தி வெளியிட்டன. 

மற்றொரு சேனல், வடகொரியா அதிபர் அயோத்திக்கு தனது படையை அனுப்பியதாகவும், இன்னொரு சேனல் இந்தியா தனது அணு ஆயுதத்தை தொலைத்து விட்டதாகவும், அது பாகிஸ்தானின் வெற்றி என்றும் தெரிவித்தன.

இந்த சேனல்கள், நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளன. அண்டை நாடுகளுடனான நட்புறவை கெடுக்கும் விதத்தில் உள்ளன.

முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள், பொய்ச் செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், அவற்றின் மூலம் சம்பாதித்து வருகின்றன. விளம்பரங்கள் மூலமும் வருவாய் ஈட்டுகின்றன.

மேலும், பிரபலமான டெலிவிஷன் சேனல்களின் அடையாள சின்னத்தை மேற்கோள்காட்டி, அது உண்மை செய்திதான் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.

இத்தகைய யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளை மேல்நடவடிக்கைக்காக உளவு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன” எனக் கூறினர்.

Comments (0)
Add Comment