மற்ற நடிகர்களும் சீரஞ்சீவியைப் பின்பற்ற வேண்டும்!

– ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல் 

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, தன்னுடைய 67 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

பிறந்தநாளையொட்டி சிரஞ்சீவி, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் ‘லூசிபர்’ படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்டு வரும் ‘காட்ஃபாதர்’ படத்தின் டீசர் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை நயன்தாரா, சத்யதேவ், பூரி ஜெகநாதன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய பிறந்த நாளையொட்டி, ஏழை சினிமா தொழிலாளர்கள் நலன் கருதி, அதிரடி முடிவு எடுத்துள்ளார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.

மறைந்த தன்னுடைய தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் பெயரில் மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளதாக அறிவித்துள்ளார். இவரது இந்த முடிவுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து சிரஞ்சீவி கூறுகையில்… “நான் திரையுலகில் லட்சக்கணத்தில் பணம் சம்பாதிப்பதற்கு முக்கிய காரணம் சினிமா தொழிலாளர்கள் தான். எனவே அவர்களின் நலனுக்காக நான் ஏதேனும் செய்ய வேண்டும். எனவே தான் எத்தனை கோடி செலவு ஆனாலும், இந்த மருத்துவமனையை கட்ட முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

சிரஞ்சீவியின் இந்த அறிவிப்புக்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தெலுங்கு திரைப்பட கிரிக்கெட் சங்கம் ரூபாய் 20 லட்சம் பணத்தை சிரஞ்சீவி கட்டும் மருத்துவமனை செலவிற்கு முன் வந்துள்ளது.

அதேபோல் பிரபல இசையமைப்பாளர் தமன் இசை நிகழ்ச்சி மூலம் பணம் திரட்டி, மருத்துவமனை செலவிற்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, மருத்துவமனை கட்டும் செயலுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தெலுங்கு திரைப்பட நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப் போவதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ள சகோதரர் சிரஞ்சீவி அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரைப்படத்துறையில் ஏழை தொழிலாளர்களின் நலனுக்காக மற்ற நடிகர்களும் சகோதரர் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Comments (0)
Add Comment