ஒரு திரைப்படத்தின் கால அளவு மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக மாறி சில ஆண்டுகளாகிவிட்டது.
இருந்த இடத்தைவிட்டு அசையாமல் வீடியோ கேம் விளையாடத் தயாராக இருப்பவர்கள் கூட, அது போலவே ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமென்றால் ‘ஞே’ என்று விழிக்கின்றனர்.
இந்தச் சூழலில்தான் ரசிகர்களை ஆடாமல அசையாமல் கண் விழிக்க வைக்கும் வெப் சீரிஸ்களும் வெளியாகின்றன.
‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், வினோதினி, வினோத் சாகர், சரத் ரவி, தருண் குமார் நடிப்பில் தற்போது சோனி லிவ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸும் அந்த வரிசையில் சேர்கிறதா?
யார் இந்த தமிழ் ராக்கர்ஸ்?
குளோபல் ஸ்டார் அஜய் குமாரின் புதுப்படம் அதிகாலை வேளையில் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ‘தமிழ் ராக்கர்ஸ்’ தளத்தில் வெளியாகிறது.
இது, அவரது போட்டியாளராக விளங்கும் அதிரடி ஸ்டார் ஆதித்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அதேநேரத்தில் கவலையிலும் ஆழ்த்துகிறது.
படத்தை வெளியிடும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவரும் நிலையில், ஒருநாள் முன்னதாகவே அதனைத் தாங்கள் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியாகிறது.
தமிழ் ராக்கர்ஸின் சதியை முறியடிக்க ஏசிபி ருத்ரா (அருண் விஜய்), நெல்சன் (வினோத் சாகர்), பானு (வினோதினி), சந்தியா (வாணி போஜன்) கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்படுகிறது.
விசாரணையின்போது, தமிழ் ராக்கர்ஸ் குழு சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம் போலீசார் கையில் கிடைக்கிறது.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. தொடர் விசாரணையில், பர்மா பஜாரில் சிடி கடை வைத்திருந்த தயாளன் (தருண் கோபி) என்பவரும் அவரது நண்பர்களும் இப்பிரச்சனையின் பின் உள்ளதாகத் தெரிய வருகிறது.
ஒருபுறம் கருடா படக்குழுவைச் சேர்ந்தவர்கள் மூலமாகவே மொத்தப் படத்தையும் லவட்ட தமிழ் ராக்கர்ஸ் கும்பல் தயாராக, இன்னொருபுறம் அவர்களைக் குறித்த எந்த அடையாளங்களையும் அறியாத போலீசார் அம்முயற்சியைத் தடுக்கும் பணியில் இறங்குகின்றனர்.
இறுதியில் வென்றது யார் என்பதுடன் முடிவடைகிறது ‘தமிழ் ராக்கர்ஸ்’ முதல் பாகம். ஆம், இதன் முடிவு இரண்டாம் பாகம் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் யார் என்ற கேள்விக்கு இந்த படைப்பு முழுவதுமாகப் பதிலளிக்கவில்லை. திரைக்கதையில் யதார்த்தம் என்பது துளி கூட இல்லை.
அதையெல்லாம் மீறி, ஒரு பரபரப்பான த்ரில்லர் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டுமே இதன் சிறப்புகளில் முதன்மையானது.
பத்திரிகைச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டாலும், இக்கதையில் சொல்லப்படும் திரைப்படங்கள், அவை வெளியான ஆண்டு, தமிழ் ராக்கர்ஸின் பின்னணி உள்ளிட்ட தகவல்கள் கூட இதில் தெளிவாகச் சொல்லப்படவில்லை.
இயக்குனரின் குழப்பம்!
போலீசாரின் விசாரணையில் எந்த அளவுக்கு உண்மை மற்றும் புனைவு இருக்கின்றன என்பதைவிட, இக்கதையில் சொல்லப்படும் தயாரிப்பாளர், நட்சத்திர நடிகர்கள் யார் என்ற கேள்வியே ’தமிழ் ராக்கர்ஸ்’ பார்க்கும் ரசிகர்கள் மனதில் முதலில் எழும்.
அவை துல்லியமாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட பிரபலங்களில் இயல்பு, குணாதிசயங்களைக் கதாபாத்திரங்களில் திணித்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
மாறாக, சொல்ல வந்த உண்மையை அப்படியே காட்டியிருந்தால் இந்த குழப்பங்களுக்கு இடமே இருந்திருக்காது.
’தமிழ் ராக்கர்ஸ்’ தளம் உருவாவதற்கு முன்பும் திருட்டு விசிடி, டிவிடி பிரச்சனைகள் இருந்தன.
5.1 ஆடியோ தரத்தில் தெளிவான பிரிண்ட்கள் வெளியாகின. அவற்றின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றி இப்படைப்பு பேசவில்லை.
ஆனால், அவற்றை விற்ற வியாபாரிகளில் சிலர் மட்டுமே தமிழ் ராக்கர்ஸ் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுவது நம் கண்ணில் ஒரு அறுந்த பட்டத்தையே காட்டுகிறது.
திரைக்கதை எழுதியிருக்கும் மனோஜ் குமார் கலைவாணன், ராஜேஷ் மஞ்சுநாத் மட்டுமே இதற்கு பொறுப்பு.
என்றாலும், கூடுதல் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிவழகன் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தாமல் காட்சிகளுக்கான அழகியல் அம்சங்களிலும் தொழில்நுட்ப அலங்காரங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறாரோ என்ற எண்ணம் மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் உணர்வை ஊட்டுகிறது.
சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு கால மாற்றங்களைச் சட்டென்று கடக்கும் உத்தியைப் பயன்படுத்தியிருப்பது, இதுவரை அந்த வெப்சீரிஸ்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது. ஆனாலும், அதனால் பார்வையாளர்களின் உற்சாகத்தில் பெரிதாக ஏற்றம் ஏற்படவில்லை.
விகாஸ் படிசாவின் பின்னணி இசை விறுவிறுப்பைக் கூட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், முன்கூட்டியே ஒரு காட்சியின் மீதான ஈர்ப்பை உருவாக்கும்விதமாக ‘தீம்’ மியூசிக் ஏதும் இதில் இல்லை என்பது ஒரு குறை.
ருத்ராவாக வரும் அருண் விஜய்க்கு இது புதிய பாத்திரமில்லை.
அவரது மனைவியாக வரும் ஐஸ்வர்யாவின் பாத்திரமும் கூட புதிதல்ல.
ரொம்பவே ‘டெம்ப்ளேட்’டாக இவை இரண்டும் அமைந்திருப்பதால் வினோதினி, வாணி போஜன், வினோத் சாகரின் பாத்திரங்களும் சராசரியாகி விடுகின்றன.
வில்லனாக வரும் தருண் விஜய்க்கு பெரிதாக வேலை இல்லை. ஆதலால் அவரது நண்பராக வரும் சரத் ரவிக்கு அதிக ‘ஸ்கோப்’ கிடைக்கிறது.
தயாரிப்பாளர் மதியாக வரும் அழகம்பெருமாள், புதுப்பேட்டையில் தான் ஏற்ற அமைச்சர் பாத்திரத்தின் பிரதிபலிப்பை மீண்டும் திரையில் உலவவிட்டிருக்கிறார்.
ஆதித்யாவின் தந்தையாக வரும் குமார் நடராஜன், மேனேஜராக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றும் மாரிமுத்து உட்படப் பலர் ‘அட’ என்று சொல்லும்விதமாக வந்து போயிருக்கின்றனர்.
காக்கா முட்டை விக்னேஷ் மற்றும் ரமேஷ் இருவரும் சற்றே வளர்ந்த ‘பையன்’களாக வந்து ஆச்சர்யமூட்டியிருக்கின்றனர்.
திரையில் தோன்றுபவர்களோ, அவர்கள் உச்சரிக்கும் வசனங்களோ நமக்கு செயற்கையாகப் படுவதில்லை. அதில் இயக்குனர் மற்றும் அவரது குழுவின் உழைப்பு அடங்கியிருக்கிறது.
ஆனால், கதாபாத்திரங்களை வார்ப்பதிலும் கதையின் போக்கை முடிவு செய்வதிலும் ‘க்ளிஷே’க்களை நுழைத்திருப்பது சலிப்பூட்டுகிறது.
பயமுறுத்தும் விஷயம்!
தியேட்டர்களுக்கு செல்வதே ஆடம்பரமாகிவிட்ட சூழலில், டேட்டாவுக்காக கொஞ்சமாக செலவழித்து படங்களை தரவிறக்கம் செய்வது புத்திசாலித்தனம் என்றே நினைக்கின்றனர் பலர்.
ஆனால், அவர்களது செயல்பாடு வெறுமனே திரையுலகை மட்டும் நசிக்காமல் சட்டவிரோதமாக நடத்தப்படும் ஆள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு போன்றவற்றுக்கும் பயன்படுவதாக காட்டப்படுகிறது. நிச்சயமாக இது பார்வையாளர்களைப் பயமுறுத்தும்.
‘பிலிம் பைரசி’ பற்றி சொல்லப்படும் கட்டுரைகளில் இவ்விஷயங்கள் குறிப்பிடப்பட்டபோது ஏற்படாத அதிர்வு, இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ பார்க்கும்போது உருவாகலாம்.
ஆனால், அதனை முழுவதுமாக விளக்கும் அளவுக்கான விஷயங்கள் திரைக்கதையில் இல்லை.
படம் வெளியான முதல் நாளே தியேட்டர் பிரிண்ட் வெளியாவது, அதற்கு உடந்தையாக படக்குழு சம்பந்தப்பட்டவர்களே இருப்பது உள்ளிட்ட தகவல்கள் அழுத்தம்திருத்தமாகச் சொல்லப்படாமல் அதிகாரப்பூர்வமற்று பகிரப்படும் பேச்சுகளை அடிப்படையாகக் கொண்டு இதில் இடம்பெற்றிருக்கின்றன.
ஆதலால், குறிப்பிட்ட செய்திகளின் மீது அமைக்கப்பட்ட ஒரு அதீத புனைவாகவே ’தமிழ் ராக்கர்ஸ்’ தோற்றமளிக்கிறது. உண்மைகளின் மீது போர்த்தப்பட்ட புனைவை விலக்காமலேயே முடிவடைந்துவிடுகிறது. இதன் பலவீனமும் பலமும் அதுவே!
-உதய் பாடகலிங்கம்